

எந்தக் குற்றமும் செய்யாத அப்பாவிகள், ஆள் மாறாட்டத்தின் காரணமாகச் சிரமத்தை அனுபவிப்பது தொடர்பான காட்சிகளைத் திரைப்படங்களில் பார்த்திருப்போம். கரோனா காலத்தில் அப்படி ஒருவர் அடையாளச் சிக்கலில் மாட்டி அலைக்கழிப்புக்கு ஆளாகியிருக்கும் சம்பவம், கொடுங்காலத்தின் நகை முரணுக்கு உதாரணமாகியிருக்கிறது.
நேற்று மதியம் கோவை ரயில் நிலையத்தில், நீல நிற சட்டை, ஜீன்ஸ் பேன்ட் அணிந்து சந்தேகத்திற்கிடமாக ஒருவர் அலைந்திருக்கிறார். அவரை மடக்கிப் பிடித்த போலீஸாரும், சுகாதாரத் துறையினரும் அவரைப் பற்றி விசாரித்துள்ளனர். அவர், “என் பெயர் சீனிவாசன்; வயது 49; சொந்த ஊர் வேலூர்” என்று தெரிவித்திருக்கிறார். அவரை அழைத்துச் சென்ற சுகாதார ஊழியர்கள், கரோனா சோதனைக்காகச் சளி மாதிரி எடுத்துவிட்டு செல்போன் எண், முகவரிகளை வாங்கியுள்ளனர். பிறகு, “ரிசல்ட் பாசிட்டிவ் என்று வந்தால் அழைப்போம். கண்டிப்பா வரணும்” என்றும் சொல்லி அவரை அனுப்பிவிட்டனர்.
பின்னர் அவருக்குத் தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது. இதையடுத்து அவரை செல்போனில் தொடர்புகொள்ள முயன்றுள்ளனர் சுகாதாரத் துறையினர். ஆனால், அந்த எண் உபயோகத்தில் இல்லை என்று வந்துள்ளது. முகவரியை விசாரிக்க, அதுவும் போலி என்று தெரிந்தது. இதனால் ஆடிப்போன சுகாதாரப் பிரிவு அலுவலர்கள், அந்த நபரின் அடையாளங்களைச் சொல்லி, அவரைத் தேடுமாறு சுகாதாரத் துறை ஊழியர்களைக் கேட்டுக்கொண்டனர். அவர்களும் கோவை முழுவதும் சுற்றியலைந்துள்ளனர்.
அப்படி கோவை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தேடுதல் வேட்டையில் இறங்கியிருந்த 3 சுகாதாரத் துறை ஊழியர்கள், நீலச் சட்டை, ஜீன்ஸ் பேன்ட் அணிந்த ஒரு நபரைப் பார்த்துள்ளனர். தூரத்திலிருந்தே “சீனிவாசா…” என்றழைக்க, அவரும் திரும்பிப் பார்க்க, அவர்கள் அதற்காகவே காத்திருந்தது போல் அவரைச் சுற்றி வளைத்தனர். “அப்படியே நில்லுங்க. உங்களுக்குக் கரோனா பாசிட்டிவ்னு வந்திருக்கு... உங்களை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகணும்” என்று கூறியிருக்கின்றனர்.
அந்த நபரோ, புரியாது தவிக்க, “நேற்று வேலூரிலிருந்து வந்தது நீங்கதானே? சளி மாதிரி டெஸ்ட் கொடுத்திருக்கிறீங்களே…” என்றெல்லாம் கேள்வி மேல் கேள்விகளைத் தொடுக்க, “அய்யோ, நீங்க தேடற ஆள் நானில்லை. என் பேரு சீனிவாசன்தான். வயசு 49 தான். ஆனா எனக்கு ஊர் கோயமுத்தூர் கோவில்பாளையம்; வேலூர் இல்லை. நான் மாசக்கணக்கா வெளியூர் எங்கேயும் போகலை” என்று அவர் தலையிலடிக்காத குறையாகச் சத்தியம் செய்தார்.
ஆனால், சுகாதாரத் துறை ஊழியர்கள் விடவில்லை. ஆட்சியர் அலுவலக முகப்பில் 20-க்கும் மேற்பட்ட போலீஸார் காவலில் இருந்தனர். அவர்கள் இந்த விஷயத்தைக் கேட்டு, 20 அடி தொலைவிலேயே நின்று கொண்டு, “உண்மையைச் சொல்… நீதானே அவன்?” என்று அதட்டினர். அந்த நபர், “இல்லவே இல்லை” என்று மறுக்க, “உன் போன் நம்பர் சொல்லு” எனக் கேட்டு வாங்கிய போலீஸார், அவர் சொன்ன எண்ணுக்கு டயல் செய்தனர். அந்த நபர் கையில் இருந்த செல்போன் ரிங்கானது. உடனே சுகாதாரத் துறையினர், சம்பந்தப்பட்ட சீனிவாசனின் எண்ணுக்கு அழைக்க அது உபயோகத்தில் இல்லை என்றே வந்தது.
ஆனாலும், “நீதானே இந்த நம்பரை வச்சிருந்தே. இப்ப மாத்தீட்டே… இல்ல தூக்கிப் போட்டுட்டே” என எல்லோரும் மிரட்ட, “சாமி சத்தியமா இது ஒண்ணுதான் என் நம்பர். இதைத்தான் நான் காலங்காலமா வச்சிருக்கேன்” என்று அவர் கதற… அங்கே ஏக அமளி ஆகிவிட்டது. அதற்குள், ‘ஆட்சியர் அலுவலக வாசலில் கரோனா நோயாளி’ என்ற செய்தி பரவ, அங்கிருந்த பலர் பதறி ஓடினர். “அவர் பக்கத்துல போகாதீங்க… உங்களுக்கும் கரோனா வந்துடும்” என்று ஆளாளுக்கு மிரட்ட, அந்தப் பக்கம் சென்றவர்களும் அலறி அடித்துக்கொண்டு, 10 அடி தூரம் தள்ளியே நின்றுகொண்டனர். பலர் அவசர அவசரமாகப் பாக்கெட்டிலிருந்த முகக்கவசத்தை எடுத்து அணிந்து கொண்டனர்.
அதற்குள் சுகாதார ஊழியர்கள் ஆம்புலன்ஸிற்கு போன் செய்ய சற்று நேரத்தில் ஆம்புலன்ஸூம் வந்துவிட்டது. போலீஸார் சிலர் அந்த நபரிடம் அவர் குடும்பம் குறித்த தகவலை வாங்கி அவர் வீட்டிற்கு போன் செய்து விசாரித்தனர். “அவர் பெயர் சீனிவாசன்தான். வயசு 49 தான். ஆனா, அவர் வேலூருக்கெல்லாம் போகலையே. வீட்டிலேயேதான் இருக்கார். இப்போதான் டவுனுக்கு வந்தார். அவர் கரோனா டெஸ்ட் எல்லாம் எடுக்கலையே” என்ற பதில் கிடைக்க, அனைவரும் சோர்ந்துபோயினர்.
இதற்கிடையில், அங்கே வந்த அரசு அலுவலர் ஒருவர், “அவர்தான் அந்த சீனிவாசன் இல்லைங்கிறார்ல? அப்புறம் ஏன் இம்சைப்படுத்தறீங்க? அவர் நீங்க தேடுற ஆளா இல்லைன்னா அவர் மனசு என்ன பாடுபடும்னு யோசிச்சீங்களா? அவரோட குடும்பத்துக்கும் மன உளைச்சல்தானே?” என்று அறிவுரை சொல்ல ஆரம்பித்துவிட்டார்.
இதையடுத்து, அவரை ஆம்புலன்சில் ஏற்றுவதா, வேண்டாமா என்று சுகாதாரத் துறை ஊழியர்கள் தவித்தனர். அந்த நபர் களைத்துப்போய் அங்கிருந்த போலீஸ் பாதுகாப்புத் தடுப்புக்குப் பின்னே மறைந்து உட்கார்ந்துவிட்டார். சுகாதாரத் துறை ஊழியர்களும், போலீஸாரும் மேலிடத்திற்கு பேசிக்கொண்டே இருந்தனர். இப்படியாக அரை மணி நேரத்திற்கு மேலாக அந்த இடமே பரபரப்புடன் காணப்பட்டது.
கடைசியில், அவருக்குக் கரோனா பரிசோதனை செய்து முடிவெடுக்கலாம் என்று கருதியோ என்னவோ அவரை ஆம்புலன்சில் ஏற்றி அழைத்துச்சென்றனர் சுகாதாரத் துறை ஊழியர்கள். இதைப் பார்த்துக் கொண்டிருந்த பலர், ‘அநாவசியமா வெளில சுத்தினா நாமளும் இப்படி சிக்கல்ல மாட்டிக்குவோம்’ என்று அவசர அவசரமாக அங்கிருந்து நடையைக் கட்டினர்.