

கரோனா வைரஸ் உலகையே நிலைகுலைய வைத்துவிட்டது. நாளுக்கு நாள் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மக்களிடையே அச்ச உணர்வும் ஓங்கி வருகிறது. இப்படியான சூழலில் கரோனா வைரஸை நம்மை நெருங்கவிடாமல் செய்ய யோகாவும் சிறந்த வழியாக இருக்கும் என்கிறார்கள் வல்லுநர்கள். கூடவே, கரோனாவை நெருங்கவிடாமல் இருக்கும் சக்தி நம் வீட்டுச் சமையலறையிலேயே இருக்கிறது என்கிறார் அரசு மருத்துவர் இந்துமதி.
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அரசு தலைமை மருத்துவமனையின் யோகா மற்றும் இயற்கை மருத்துவரான இந்துமதி இதுகுறித்து ’இந்து தமிழ்’ இணையத்திடம் பேசும்போது, “யோகா உடலுக்கும், மனதுக்கும் இணைப்புப் பாலமாகச் செயல்படுகிறது. கரோனாவும், அதனால் ஏற்பட்ட பொதுமுடக்கமும் பலரையும் நிலைகுலைய வைத்தது. வீட்டிலேயே இருந்த பலருக்கும் மன அழுத்தம் ஏற்பட்டது. அதை ஒழித்ததில் யோகாவின் பங்களிப்பு மிக அதிகம். மனதை ஒருநிலைப்படுத்துவதோடு உடலில் ஏற்படும் ஹார்மோன் சமநிலை இன்மையையும் சரியாக்குகிறது யோகா.
யோகா பயிற்சிகள் உடலில் இயல்பாகவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உடலில் உள்ள சுவாச உறுப்பான நுரையீரலை சீராக இயங்கச் செய்வதில் யோகா பெரும்பங்கு வகிக்கிறது. ரத்த ஓட்டத்தைச் சீராக்குவதோடு ஜீரண சக்தியையும் அதிகரிக்கும். இதயம், மூளை உள்ளிட்ட உள்ளுறுப்புகளையும் யோகா சீராகச் செயல்பட வைக்கும்.
பொதுவாக, நோய் எதிர்ப்புத் திறன் குறைவாக இருப்பவர்களுக்கே கரோனா வைரஸ் மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. அதேநேரம் தினசரி அரை மணி நேரம் ஒதுக்கி ஆசனங்கள், பிராணாயாமம், தியானம் ஆகியவற்றைச் செய்யும்போது கரோனா நம்மை நெருங்காத அளவுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைப் பெற்றுவிடலாம். கூடவே, இன்றைய வாழ்வியல் நோய்களான சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தமும் நம்மை நெருங்காமல் செய்யலாம்.
கர்ப்பிணிகள் தங்களின் மூன்றாவது மாதத்தில் தொடங்கி 9-வது மாதம் வரை யோகா பயிற்சிகளை மேற்கொள்ளலாம். இது கர்ப்பிணிப் பெண்கள் சிலருக்கு வரும் ரத்த சோகையில் இருந்தும் அவர்களைக் காப்பாற்றும். சுகப் பிரசவத்துக்கான வாய்ப்பும் யோகா செய்யும் பெண்களுக்கு மிக அதிகம். தொடர்ந்து யோகா செய்யும் பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைக்கும் இயல்பிலேயே நோய் எதிர்ப்பு சக்தி அதிக அளவில் இருக்கும். இதன் மூலம் ஆட்டிசக் குறைபாடு இல்லாத குழந்தைகளாகவும் பிறப்பார்கள்.
மனநலம், முதுகுவலி, மூட்டுவலி உள்ளவர்களுக்கும் யோகா மிகச்சிறந்த பலனைத் தரும். யோகா, இயற்கை மருத்துவத்தின் பெருமையையும், அதன் தேவையையும் உணர்ந்தே அரசு ஒவ்வொரு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளிலும், தாலுகா மருத்துவமனைகளிலும் யோகா மற்றும் இயற்கை மருத்துவர்களை நியமித்துள்ளது.
கரோனாவுக்கு எதிராக இயற்கை மருத்துவத்தின் துணைகொண்டு நாங்களும் போராடி வருகிறோம். அருகிலுள்ள அரசு மருத்துவமனைகளில் இருக்கும் இயற்கை மருத்துவர்களை அணுகினால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பானப்பொடியைப் பெறலாம். இந்தப் பொடியை ஒரு கப் தண்ணீருக்கு ஒரு ஸ்பூன் என்ற அளவில் கொதிக்கவைத்துக் குடிக்கலாம். இது வீட்டின் சமையலறையிலேயே இருக்கும் எளிதான பொருள்களின் கலவைதான். வீட்டில் பெண்களே இதைத் தயார் செய்துவிடலாம்.
துளசி, அதிமதுரம், நல்ல மிளகு, மஞ்சள் தூள் ஆகியவற்றை எடுத்துப் பொடி செய்து வைத்துக்கொண்டாலே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பானப்பொடி தயாராகிவிடும். சாதாரணமாகச் சமையலறையில் இருக்கும் இதைப் பயன்படுத்தி அவ்வப்போது குடித்துவர, கரோனாவை நம்மை நெருங்க விடாமல் செய்யும் அளவுக்கு நோய் எதிர்ப்புத்திறன் நம் உடலுக்கு வந்துவிடும்” என்றார்.