

இந்து தமிழ் திசை செய்தி எதிரொலியாக மதுரையிலுள்ள ஏழை தொழிலாளர்களுக்கு உதவி வரும் உதவி ஆணையருக்கு ஓய்வு பெற்ற பேராசிரியைகள் இருவர் நிதியளித்துள்ளனர்.
கரோனா தடுப்புக்கான பொது ஊரடங்கு இன்று (மே31) வரை நீடிக்கிறது. இந்த நேரத்தில் வேலையின்றி தவிக்கும் மக்களுக்கு அரசு, கட்சியினர் உதவினாலும், மதுரைநகர் அண்ணாநகர் காவல் உதவி ஆணையர் லில்லிகிரேஸ் உணவுக்கு தவிக்கும், ஏழைகள், ஆட்டோ, தினக் கூலி தொழிலாளர்கள், மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகள் என, பலருக்கு உதவ ‘ ஒரு காவலர்-ஒருகுடும்பம்’ தத்தெடுப்பு என்றொரு திட்டத்தை தொடங்கினார்.
60-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களுடன் செயல்படும் இந்த மகத்தான பணிக்கு நீதிபதி மற்றும் சக காவலர்கள், அறக்கட்டளைகள், தனியார் அமைப்பு, ரோட்டரி சங்கத்தினர் என, உதவினர். கடந்த 60 நாளில் சுமார் ரூ.10 லட்சம் மதிப்பிலான 2,700க்கும் மேற்பட்டோருக்கு ஒரு மாதத்திற்கு தேவையான உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது என்றாலும், தொடர்ந்து நிவாரணம் வழங்குகின்றனர். இவரது பணியை காவல் ஆணையர் டேவிட்சன் உள்ளிட்டோர் பாராட்டினர்.
இது தொடர்பான செய்தி ஒன்று இந்து தமிழ் திசை நாளிதழில் ‘ கரோனா நாயகர்கள் ’ என்ற சிறப்பு பகுதியில்ன்வெளிவந்தது. இதை பார்த்து வியப்படைந்த சென்னை எத்திராஜ் கல்லூரி ஆங்கிலத்துறை ஓய்வு பெற்ற பேராசிரியை காதம்பரி, மதுரை பாத்திமா கல்லூரி தமிழ்த்துறை ஓய்வு பேராசிரியை எம்.ஏ.சுசிலா ஆகிய இருவரும் காவல் உதவி ஆணையர் லில்லி கிரேஸ் சேவையை பாராட்டி, தலா ரூ.5 ஆயிரம் நிதியுதவி அளித்து ஊக்கப்படுத்தியுள்ளனர்.
மேலும், சிலர் சேவைக்கு உதவ தயாராக இருப்பதாக சொல்லி உற்சாகப்படுத்துவதாக காவல் உதவி ஆணையர் தெரிவித்தார்.
நிதியுதவி வழங்கிய பேராசிரியைகள் கூறியது: தற்போதைய பணிச்சுமைக்கு இடையிலும், காவல்துறை பெண் அதிகாரி சேவை மனப்பான்மையில் செயல்படுவது அரிது. அதுவும் இந் நேரத்தில் உணவுக்கு சிரம்மப்படும் முகம் தெரியாத ஏழை, தொழிலாளர்களுக்கு உதவ எங்களை போன்ற பலர் உள்ளனர்.
இச்செய்தியை படித்துவிட்டு சென்னையிலுள்ள எனது தோழி காதம்பரி என்னிடம் பேசி, அண்ணாநகர் உதவி ஆணையர் எண் கேட்டபோது, நானும் சேர்ந்து கொண்டு உதவினோம்.
இந்து தமிழ் நாளிதழிலில் பிரசுரமான இச்செய்தியே ஏழைகளுக்கு உதவி செய்ய எங்களைத் தூண்டியது. இது மாதிரி செய்திகளைத் தொடர்ந்து வெளியிடவேண்டும்.
இதை விளம்பரத்திற்கென நாங்கள் செய்யவில்லை. ஏற்கெனவே பணி செய்யும் காலத்திலும் சரி, ஓய்வுக்குப் பிறகும் விழிப்புணர்வு குறித்த களப்பணி செய்கிறோம். இளைஞர்கள், பெண்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்துகிறோம், என்றனர்.