இனியாவது உறவுகளோடு் மகிழ்வுடன் பயணிக்கத் தொடங்குங்கள்: காவல் ஆய்வாளரின் உருக்கமான ஃபேஸ்புக் பதிவு

இனியாவது உறவுகளோடு் மகிழ்வுடன் பயணிக்கத் தொடங்குங்கள்: காவல் ஆய்வாளரின் உருக்கமான ஃபேஸ்புக் பதிவு
Updated on
2 min read

கரோனா காலம் நமக்கு, பல நல்ல பாடங்களையும் சொல்லித் தந்து கொண்டிருக்கிறது. ‘வீட்டிலிருந்து வேலை’ மூலம் பெரும்பாலானவர்கள் இப்போது அதிக நேரம் குடும்ப உறவுகளுடன் பொழுதை நகர்த்துகிறார்கள். அதனால் ஒவ்வொரு நாளும் புதுப்புது அனுபவங்களைப் பாடமாகப் படிக்கிறார்கள். குறிப்பாக, உறவுகளையும் நட்புகளையும் போற்றிப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை இந்தப் பெருந்தொற்றுக் காலம் நமக்கு கொஞ்சம் கொஞ்சமாகப் புரியவைத்துக் கொண்டிருக்கிறது. இன்னும் சிலருக்குச் சிக்கனத்தையும், இன்னும் பலருக்கு இயற்கையைப் போற்றிப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் தலையில் குட்டுவைத்துச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது கரோனா.

இதையெல்லாம் உள்வாங்கிக் கொண்டு வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கும் பலர், ‘கரோனாவுக்குப் பிறகு புதிதாக ஒரு வாழ்க்கையை வாழப் போகிறேன்’ என்கிறார்கள். இன்னும் சிலர், கரோனா காலம் தங்களுக்குச் சொல்லித் தந்த பாடத்தை மற்றவர்களுக்கும் சமூக வலைதளங்கள் வழியாகப் பதிவேற்றம் செய்து கொண்டிருக்கிறார்கள். காவல் ஆய்வாளர் மு.சதீஷின் பதிவு ஒன்றை, அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் யதார்த்தமாகப் பார்க்க நேர்ந்தது.

சீர்காழி காவல் உட்கோட்டத்தில் காவல் ஆய்வாளராகப் பணிபுரியும் சதீஷ், உறவுகள் எவ்வளவு முக்கியம் என்பதை இந்த கரோனா கால சம்பவங்கள் தமக்கு தெள்ளத் தெளிவாக உணர்த்தியிருப்பதை தனது பதிவில் எடுத்துச் சொல்லியிருக்கிறார். ‘இனியாவது அனைவரும் மன வேறுபாடுகளைக் களைந்து தங்கள் உறவுகளோடு இணைந்து ஒன்றாக பயணிக்க வேண்டும்’ என்ற நிஜமான அக்கறை அவரது பதிவில் பளிச்சிடுகிறது.

பலருக்கும் இதுபோல எண்ணங்கள் இப்போது உள்ளுக்குள் ஓடிக் கொண்டிருப்பதால் பலரும் சதீஷின் முகநூல் பதிவை ஷேர் செய்துகொண்டிருக்கிறார்கள்.

அந்தப் பதிவில் காவல் ஆய்வாளர் சதீஷ் சொல்வது இதுதான்:
“நான் சீர்காழி காவல் உட்கோட்டத்தில் பாதுகாப்பு அலுவலுக்கு வந்து 60 நாட்கள் நெருங்கப் போகிறது. இந்த பாதுகாப்புப் பணிக்கு இடையில் எனக்குப் பிடித்த உறவுகள், நட்புகளின் வீட்டிற்குச் சென்று நலம் விசாரித்து வந்தேன். அப்போதெல்லாம் அவர்களிடம், ‘நீங்களும் உங்களுக்குப் பிடித்த உறவுகள் அனைவரிடமும் பேசுங்கள், நலம் விசாரியுங்கள்’ என மறக்காமல் கூறிவிட்டு வந்தேன்.

தற்போதைய கரோனா கால நெருக்கடி சூழ்நிலை யாரும் எதிர்பாராததுதான், பெரும்பாலான மக்கள் வாழ்வின் அடிப்படைத் தன்மையை சற்று அசைத்துத்தான் பார்த்திருக்கிறது கரோனா. இந்தச் சூழலில், பாதுகாப்புப் பணியில் இருந்த பெரும்பாலான காவல்துறை அதிகாரிகள் தினந்தோறும் சந்தித்த, வித்தியாசமான பணி நிகழ்வுகள் அதிகம்.

இந்தக் கரோனா காலத்தில், தங்களின் இல்ல சுபநிகழ்ச்சிகளுக்கும், இறுதிச் சடங்குகளுக்கும் உறவுகள் கலந்துகொள்ள அனுமதி கிடைக்குமா? எனக் கேட்டு காவல் நிலையங்களில் நின்றவர்கள் ஏராளம். என்ன செய்வது... வாழ்வின் அடிப்படை நிகழ்வுகளில் அவரவர்களின் நெருங்கிய உறவுகள் கலந்து கொள்வதற்கு அனுமதி கேட்டுக் காவல் நிலையத்தை நாடி நின்ற இவர்களைப் பார்த்தபோது எங்களுக்கு வேதனையாகத்தான் இருந்தது.

அப்படி வந்தவர்களுக்கு எல்லாம் தற்போதைய காலச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு மனச்சுமையோடு சில அறிவுரைகளை வழங்கி குறிப்பிட்ட அளவு உறவுகள் கலந்துகொள்ள சட்டரீதியாக அனுமதியும் கொடுக்கப்பட்டது. இந்தச் சூழலில் நம் வாழ்வில் உடன்பிறந்த உறவுகளின் சுப நிகழ்வுகளில் குறைவாகக் கலந்துகொள்வது ஒருபுறம் இருந்தாலும், நெருங்கிய உறவுகளின் இறப்பில்கூட கலந்துகொள்ள முடியாதவர்கள் தங்களின் மன வேதனைகளை, எடுத்துச்சொல்லி அழக்கூட முடியாத சூழலையும் சந்தித்துள்ளனர்.

ஆம், நம் வாழ்வின் முற்றுப்புள்ளி எப்போது, எந்த நேரத்தில், எந்தச் சூழ்நிலையால் அமையும் என்பதைக் கூற இயலாது. அந்த இறுதித் தருணத்தில் நம்மைச் சுற்றி நம்மோடு பிறந்தவர்கள், நமக்குப் பிறந்தவர்கள், நமது உறவுகள் என எத்தனை பேர் சூழ்ந்திருப்பார்கள் என்றும் கூற இயலாது.
ஒருவருக்குப் பணம், வசதிகள் ஒருபுறம் இருந்தாலும் இனி அவர் வாழ்வில் உறவுகளோடு ஒன்றுசேர்ந்து, மகிழ்வாகப் பயணிக்கும் காலம்தான் பொற்காலமாக இருக்கும். ஆகையால், சிறு, சிறு பிரச்சினைகளுக்காக நல்ல உறவுகளைத் தூர ஒதுக்கி வைத்து வேடிக்கை பார்க்காதீர்கள். ஈகோவை விட்டு விட்டு முதலில் நீங்களே பேச முயற்சி செய்யுங்கள். (நம்பிக்கைத் துரோகிகள், நன்றி கெட்டவர்களைத் தவிர).

இச்சூழ்நிலையில் ‘யாரோ’ எழுதியதுதான் என் நினைவுக்கு வருகிறது,

‘இழப்புகள் உணர்த்துமாம்...
இருப்பதின் முக்கியத்துவத்தை!
நோய்கள் உணர்த்துமாம்...
வாழ்வின் மகத்துவத்தை.!’

கண்டிப்பாக நாம் இச்சூழலுக்குப் பிறகு ஒரு நற்சூழலை நோக்கிப் பயணிப்போம், அப்போது மனதிற்கினிய உறவுகளோடு் சின்னச் சின்ன வேறுபாடுகளைக் களைந்து, மகிழ்வாய் ஒன்றாகப் பயணிக்கத் தொடங்குங்கள். அது உங்கள் வாழ்க்கையின் மனதிற்கினிய பசுமையான காலமாகக் கண்டிப்பாக அமையும்.”

இவ்வாறு தனது எண்ண ஓட்டத்தைச் சொல்லி இருக்கிறார் சதீஷ்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in