

உலகப் புகழ் பெற்ற ஹாரிபாட்டர் வரிசைக் கதைகளின் படைப்பாளி ஜே.கே.ரௌலிங். இவர் தற்போது புதிதாக எழுதிவரும் கதை ‘இக்காபாக்’ (The Ickabog). ‘இக்காபாக்’ எனும் விசித்திர அரக்கனை முதன்மைக் கதாபாத்திரமாகக் கொண்ட இந்தப் புத்தகத்தின் முதல் பாகத்தை இணையத்தில் இலவசமாக வெளியிட்டுள்ளார். யாருக்காக இவ்வாறு செய்திருக்கிறார் இந்த மாயாஜாலப் புனைகதைகளின் அரசி?
கார்னுகோபியா என அழைக்கப்படும் ஒரு கற்பனை நிலப்பரப்பின் வடக்கு முனையில் வாழ்பவன் தான் இந்த ‘இக்காபாக்’. அசாதாரண சக்திகள் பல கைவரப்பெற்ற அந்த அரக்கனைப் பற்றியக் கதையில் வழக்கம்போல் ஓர் அழகிய தேவதையின் சோகமும் அவள் புரியும் வீர சாகசங்களும் ‘தி இக்காபாக்’ கதையில் உண்டு. ஹாரிபாட்டர் கதைத் தொடரினை எழுதிய சமயத்திலேயே ‘தி இக்காபாக்’ ஃபாண்டஸி புனைவுக்கான ஐடியாக்களைக் கண்டடைந்ததாக கூறியிருக்கிறார் ரௌலிங். ஹாரிபாட்டரின் இறுதித் தொடரையடுத்து ‘தி இக்காபாக்’ நூலினை வெளியிடத் திட்டமிட்டிருந்தாராம் ரௌலிங். தற்போது இக்கதையின் தனது கையெழுத்துப் பிரதிகள் முடிவடைந்துவிட்டதைத் தொடர்ந்து அதனை உடனடியாக தனது உதவியாளர் மூலம் விரைவாக டைப் செய்து ‘தி இக்காபாக்’ கதையின் முதல் அத்தியாயத்தை இணையத்தில் இலவசமாக வெளியிட்டிருக்கிறார்.
கரோனா ஊரடங்கல் உலகம் முழுவதும் வீடுகளில் அடைபட்டுக்கிடக்கும் குழந்தைகளுக்காக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்தக் கதையை வாரம் தோறும் சில அத்தியாயங்கள் வீதம், இலவசமாக இணையத்தில் வெளியிட இருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். ஜூலை 10-ம் தேதிக்குள் ‘தி இக்காபாக்’ மொத்த அத்தியாயங்களையும் இணையத்தில் இலவசமாக பதிவிட்டுவிடுவது ரௌலிங் திட்டம்.
மேலும் கரோனா பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களிடம் பணி செய்யும் தன்னார்வலக் குழுக்களுக்கு உதவும் திட்டங்கள், நேரடியாக பாதிக்கப்பட்டிருக்கும் சாமானிய மக்களுக்கு தனது புத்தகங்களின் ராயல்டி தொகையின் ஒரு பகுதியை நன்கொடையாக வழங்கவும் அவர் திட்டமிட்டுள்ளார்.