Published : 25 May 2020 02:14 PM
Last Updated : 25 May 2020 02:14 PM

வாழ்வாதாரத்தைத் தொலைத்து நிற்கும் சர்க்கஸ் கலைஞர்கள்: அரசுகள் ஆதரவளிக்கக் கோரிக்கை

பொதுமுடக்க நேரத்தில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்கும் வகையில் சினிமா திரையரங்குகள் உள்பட அனைத்து வகை கேளிக்கைகளுக்கும் தடை விதித்திருக்கிறது அரசு. அந்த வகையில் சர்க்கஸ் நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கேரளத்தில் இரண்டு பகுதிகளில் நடந்துவந்த ஜம்போ சர்க்கஸும் இதில் முடங்கியுள்ளது. தொழில் முடக்கம் ஏற்பட்டு சொந்த ஊருக்கும் செல்லமுடியாமல் நூற்றுக்கும் அதிகமான சர்க்கஸ் ஊழியர்கள், சர்க்கஸ் கூடாரங்களிலேயே தவித்து வருகின்றனர்.

இந்தியாவில் பிரசித்திபெற்ற சர்க்கஸ் நிறுவனங்களில் ஜம்போவும் ஒன்று. இந்த நிறுவனத்தின் சார்பில் கேரளத்தில் கோட்டக்கல், காயங்குளம் ஆகிய இடங்களில் தலா 175 கலைஞர்கள் வீதம், 350 கலைஞர்களும், பறவைகள், மற்றும் விலங்குகளுடன் சேர்ந்து சர்க்கஸ் நிகழ்ச்சியில் ஈடுபட்டுவந்தனர். இந்நிலையில் கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு கேரள அரசு தடை விதித்தது. இதனால் சர்க்கஸ் தொழிலும் முடங்கியது.

பொதுமுடக்கமும் உடனடியாக அமலுக்கு வந்ததால் சொந்த ஊர்களுக்குச் செல்லமுடியாமலும் வருமானத்துக்கு வழியின்றியும் தவித்து வருகின்றனர் சர்க்கஸ் நிலைய ஊழியர்கள். அவர்கள் அத்தனை பேரையும் வைத்துப் பராமரித்தே நொடிப்பு நிலை நோக்கி நிர்வாகம் நகர்வதாக வேதனை தெரிவிக்கின்றனர் சர்க்கஸ் கம்பெனி நிர்வாகிகள்.

தங்கியிருக்கும் மைதானங்களிலேயே மழை, வெயில் என இயற்கைப் பேரிடர்களையும் ஊழியர்கள் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. பொதுவாக ஒவ்வொரு ஊரிலும் சர்க்கஸ் முடிந்ததும் கலைஞர்களுக்கு சிறிய இளைப்பாறுதல் கிடைக்கும். ஆனால், இப்போது கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாகவே கூடாரங்களுக்குள்ளேயே முடங்கி இருக்கின்றனர் கலைஞர்கள்.

இதுகுறித்து ஜாம்போ சர்க்கஸ் மேலாளர் சேது மோகனன் ’இந்து தமிழ்’ இணையத்திடம் கூறுகையில், “மார்ச் 10 முதல் தொழில் முடங்கினாலும், 22-ம் தேதி வரை ரயில்கள் ஓடிக்கொண்டிருந்தன. அதனால் சிலர் சொந்த ஊர்களுக்குப் போய் விட்டார்கள். பெரும்பாலும் வட இந்திய ஊழியர்கள்தான் இங்கு அதிகம். அப்படி ஊருக்குப் போகாத நூற்றுக்கும் அதிகமான தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டார்கள். தென்னிந்தியாவை விட, வட இந்தியக் கலைஞர்களே எங்களுக்கு அதிகம். பொதுமுடக்கம் முடிந்து எப்போது இயல்புநிலை திரும்பும் எனத் தெரியாமலே தவித்து வருகிறோம்.

நாங்கள் காட்சிகள் நடத்தும் நகராட்சி சார்பிலும் உணவு கொடுத்தார்கள். ஆனால், யானை தொடங்கி மனிதர்கள் வரை அனைவருக்கும் அது போதுமானதாக இல்லை. சில தன்னார்வலர்கள் உதவி வருகின்றனர். எங்களது இரண்டு சர்க்கஸ் யூனிட்டையும் வேலை இல்லாத நாள்களில் சாப்பாடு போட்டு இயங்கவைக்க தினசரி 50 ஆயிரம் ரூபாய் தேவை. பொதுமுடக்க நேரத்தில் தொழிலே இல்லாமல் இனிவரும் நாள்கள் எங்களை எதைநோக்கி அழைத்துச் செல்லப் போகிறது என்றே தெரியவில்லை.

ஏற்கெனவே சினிமா தியேட்டர், யூடியூப் ஆகியவை போட்டி போட்டுக்கொண்டு சர்க்கஸைக் காவு வாங்கிய நிலையில், இப்போது அந்தப் பட்டியலில் கரோனாவும் சேர்ந்திருக்கிறது. எங்கள் கலைஞர்கள் காட்டும் சாகசங்களைவிட கரோனா நிகழ்த்தும் பொருளாதார சாகசம் எங்களை நிலைகுலைய வைத்துவிட்டது” என்றார்.

இதுகுறித்து ஜாம்போ சர்க்கஸின் நிர்வாகப் பங்குதாரர்களில் ஒருவரான அஜய் கூறுகையில், “கேரள அரசு எங்களுக்கு 1,200 கிலோ ரேஷன் அரிசியைக் கொடுத்தார்கள். ஆனால், இங்கு யானை முதல் பல உயிரினங்களும் இருப்பதால் அதுபோதவில்லை. அதை இன்னும் கூடுதலாக வழங்கக்கேட்டு கேரள முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். அதேபோல் மத்திய அரசு, மானியம், கடனுதவி வழங்கினால் மட்டுமே சர்க்கஸ் தொழில் லாக்டவுன் முடிந்த பின்பும் தொடர முடியும். இல்லையெனில் இந்தக் கலை அழிந்துவிடும். எங்கள் கம்பெனி மட்டுமல்ல, இந்தியா முழுவதிலும் இருக்கும் சர்க்கஸ் கம்பெனிகளின் நிலை இதுதான்” என்றார்.

வாழ்வாதாரத்தைத் தொலைத்துவிட்டு நிற்கும் சர்க்கஸ் கலைஞர்கள் தங்களைக் காக்கக் கோரி காணொலி https://www.facebook.com/jumbocircusofficial/videos/2324597261179501/?v=2324597261179501 ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார்கள்.

அதன் இணைப்பு:தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x