பொது முடக்கத்திலும் தொடரும் திருக்குறள் தொண்டு: அலைபேசி வழியே குழந்தைகளுக்கு குறள் போதனை

பொது முடக்கத்திலும் தொடரும் திருக்குறள் தொண்டு: அலைபேசி வழியே குழந்தைகளுக்கு குறள் போதனை
Updated on
2 min read

நாகர்கோவிலில் திருக்குறள் தொண்டு செய்யும் குறளகம் அமைப்பு மாணவ - மாணவிகள் மத்தியில் ரொம்ப பிரபலம். கோடை விடுமுறையில் நாகர்கோவில் ராமன்புதூரில் உள்ள குறளகத்தை நடத்தும் தமிழ்க் குழவியின் இல்லத்தில் காலை முதல் மாலை வரை இலவசமாகத் திருக்குறள் வகுப்பு நடக்கும். திருக்குறள் காட்டும் வாழ்வியல் பாதையில் வாழும் தமிழ்க் குழவி இந்த பொது முடக்கத்தில் தன் வீட்டில் இருந்தவாறே தொலைபேசியின் வழியாக மாணவ - மாணவிகளுக்கு இலவசமாகத் திருக்குறள் வகுப்பு நடத்தி வருகிறார்.

இதுகுறித்து தமிழ்க் குழவி ’இந்து தமிழ் திசை’ இணையத்திடம் கூறுகையில், “நான் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவன். சிறுவயதில் இருந்தே திருக்குறளின் மீது எனக்கு ஈர்ப்பு அதிகம். மாணவ - மாணவிகளுக்கு திருக்குறளின் பெருமையை எடுத்துச் சொல்லவும், அதை பரப்பச் செய்யும் நோக்கத்திலும் தான் இந்த குறளகம் அமைப்பை நடத்திட்டு இருக்கேன்.

புலால் மறுத்தலில் தொடங்கி, பொய் சொல்லாமை வரை என் வாழ்வில் திருக்குறள் தந்த விஷயங்கள் அதிகம். அதை அப்படியே அடுத்தடுத்த தலைமுறைக்கும் கடத்தும் நோக்கத்தில்தான் குறளகம் அமைத்து இளம் சிறார்களுக்கு இலவசமாகத் திருக்குறள் போதித்துக் கொண்டிருக்கிறேன். கோடை விடுமுறையில் முழுநேர வகுப்பு நடக்கும். ஆனால், இப்போது கரோனா அச்சத்தால் வீட்டுக்கு மாணவ- மாணவிகளை வரவழைத்து வகுப்பு நடத்த முடியாது.

அதனால் ஒவ்வொரு மாணவருக்கும் குறைந்தபட்சம் 20 நிமிடம் முதல் அதிகபட்சம் 40 நிமிடங்கள் வரை செலவு செய்து தினம் ஒரு அதிகாரத்தை அலைபேசி வழியாக விளக்கிச் சொல்லிக் கொடுக்கிறேன். மறுநாள் நான் அலைபேசியில் அழைக்கும்போது அவர்கள் முந்தைய நாள் படித்த அதிகாரத்தைச் சொல்ல வேண்டும். இது முழுக்க இலவசமாக திருக்குறளுக்கு நான் செய்யும் தொண்டு.

இப்போது இணையவெளிக் காலம். ஆனாலும் திருக்குறள் படிக்கும் ஆர்வத்தில் வருபவர்களில் பலரும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள்தான். அவர்களிடம் இணையவசதி கொண்ட செல்போன் இல்லாவிட்டாலும் சாதாரணமான அலைபேசி வசதி இருக்கும். அதனால்தான் ஆன்லைன் வகுப்புக்கு மாற்றாக இப்படி அலைபேசி வழியே வகுப்பு எடுக்கிறேன்.

இதுபோக, இணைய வழியில் ’திருக்குறள் திறனறிவோம்’ என்னும் திருக்குறள் பொதுஅறிவுப் போட்டியையும் நடத்தினேன். இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து 600க்கும் அதிகமான நபர்கள் கலந்துகொண்டார்கள். அவர்களுக்கு இணைய வழியிலேயே சான்றிதழ் அனுப்பும் பணி இப்போது நடந்து வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறையில் திருக்குறள் வகுப்பில் பங்கெடுக்கும் குழந்தைகளில் சிலர் 1,330 பாடல்களையும் மனப்பாடம் செய்துவிடுவார்கள். குறளகத்தில் படித்த 26 மாணவ - மாணவிகள் தமிழ் வளர்ச்சித் துறையில் 1,330 பாடல்களை ஒப்புவித்து தமிழக அரசின் பரிசு வாங்கியுள்ளனர். சிலர் குடியரசுத் தலைவரின் பாராட்டையும் பெற்றார்கள்.

இந்தக் கோடையைக் கரோனாவுக்கு பலி கொடுத்துவிடக் கூடாது என்பதால்தான் இந்த அலைபேசி வழி வகுப்பு. இயல்புநிலை திரும்பியதும் எங்கள் குறளக மாணவ - மாணவிகளில் சிலர், 1,330 குறள்பாக்களையும் தமிழ் வளர்ச்சித் துறையிடம் சொல்லிக் காட்டுவார்கள். அந்த நாளின் சந்தோஷத்துக்காகக் காத்திருக்கிறேன்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in