Published : 12 May 2020 02:20 PM
Last Updated : 12 May 2020 02:20 PM

பாட்டால் அன்பு செய்யும் ‘எகினம்’- திக்கற்றுத் திரியும் விலங்குகளுக்காக ஓர் இசைப் படைப்பு!

இந்தக் கரோனா கால பொதுமுடக்கம் பலருக்கும் பலவிதமான படிப்பினைகளையும் புதுப்புது அனுபவங்களையும் தந்திருக்கிறது. ஆனால், தெருவில் திரியும் தெருநாய் உள்ளிட்ட விலங்கினங்கள் சந்திக்கும் அனுபவங்கள் இதுவரை அவை சந்தித்திராதவை.

கரோனாவுக்குப் பயந்து மனிதர்கள் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறார்கள். மனிதர்களுக்கு என்னானதோ என்ற அச்சத்தில் தெருநாய்கள் உள்ளிட்ட விலங்கினங்கள் தெருத் தெருவாய் பினாத்தித் திரிகின்றன. செல்லப் பிராணிகள் மீது பாசம் கொண்ட சிலர் ஆங்காங்கே தெருநாய்களுக்கும் உணவளித்துக் காக்கிறார்கள். முடியாதவர்கள், ‘பாவம், இவை என்னதான் செய்யும்?’ என்று பரிதாபப்பட்டு நகர்கிறார்கள்.

இந்த நிலையில், பெரும்பான்மையானவர்கள் கரோனா அச்சத்தில் கலங்கிக் கிடக்கும் மக்களின் மனநிலையைத் தேற்ற முயன்று கொண்டிருக்க, இசை படித்த சென்னை இளைஞர்கள் சிலர் அதிலிருந்து சற்றே விலகி, வீதியில் தனித்து விடப்பட்ட விலங்குகளைப் பற்றிச் சிந்தித்திருக்கிறார்கள். அதற்காக அவர்கள் பாடலாகத் தந்த படைப்புதான் ‘எகினம்’ (எகினம் என்பது சங்கத் தமிழில் நாயைக் குறிக்கும் சொல்லாம்)

திடீரென்று எல்லாமே வெறிச்சோடிப் போய்விட்டதே... மனிதர்கள் நடமாட்டம் சுத்தமாக நின்றுவிட்டதே... ஐயோ இந்த ஊருக்கு என்னானதோ – ஏதானதோ என்னும் பதைதைப்பு தெருவில் திரியும் விலங்குகளுக்கும் நிச்சயம் வந்திருக்கும். சோற்றுக்கு மட்டுமல்ல... அன்புக்கும் அவை ஏங்கித் தவித்திருக்கும். அந்த மனநிலையை அப்படியே கடத்திப் பாட்டினில் அன்பு செய்திருக்கிறார்கள் இந்த இளைஞர்கள்.

புகழ்பெற்ற ‘வேலுநாச்சியார் தியேட்டர்’ படைப்பைத் தந்த எழுத்தாளரும் இயக்குநருமான விநாயக்.வே.ஸ்ரீராம் இந்த எண்ணத்தைக் குறும்பாடலாக்கி நெறிப்படுத்த, கீதாஞ்சலி இன்னிசைக் குழுவை நடத்தும் சத்யா ஆன்லைனிலேயே ஒருங்கிணைக்க, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா தலைமையில் எம்.ஜே.ஸ்ரீராம், சாம், செந்தில்தாஸ், முகேஷ், ஹரிஹரசுதன், ரஞ்சித் உன்னி, வேலு ஆகிய எட்டு இளம் பாடகர்கள் இணைந்து மனமுருகி இந்தப் பாடலைப் பாடியிருக்கிறார்கள்.

பின்னணி இசை ரேஹான். பொது முடக்க சிரமங்களுக்கு மத்தியில் இதை வேலூரில் இருந்தபடியே எடிட் செய்து அனுப்பியிருக்கிறார் பிரபாகரன். வடசென்னை வியாசர்பாடியிலிருந்து இதை டிசைன் செய்து கொடுத்திருக்கிறார் விக்டர் எபினேஸர்.

அன்றிங்கே ஜன மிருந்ததே...
தெருவெங்கும் அன்பிருந்ததே...
வீதி வழிப்போவோர் வருவோர்
கருணையினாலே உணவிருந்ததே!
இன்றிங்கே யாருமில்லையே...
பாசக்குரல் கேக்கவில்லையே...
வாகனங்கள் காணவில்லையே...
காவல்காக்கும் வேலை இல்லையே!
தெருமுனையில் டீக்கடை உண்டே...
கறிக்கடை பாய் வாசல் உண்டே...
எல்லாமே அடையக் கிடக்குதே...
என்னாச்சோ நெஞ்சு படக்குதே!
எல்லோரும் எங்கிருக்கீக?
ஏன் இப்படி அடைஞ்சிருக்கீக?
நல்லோரே முகம் காட்டுங்க...
ஒரு கல்லாச்சும் வீசி எறியுங்க!

- என்று நெஞ்சைக் கரைக்கும் இந்தப் பாடல் இப்போது இசைக் கோவையாக யூடியூப்பில் வலம்வந்து கொண்டிருக்கிறது.

நீங்களும் இதை இசை வடிவில் கேட்கலாம்.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x