

பழங்குடியினர் நலனுக்காகவே தனது நாட்களைக் கழித்த இளம் மருத்துவர் ஜெயமோகன். கோயம்புத்தூர் மாவட்டத்தின் சிறுமுகை பகுதியைச் சேர்ந்த இவர், படிப்பில் படுசுட்டி. 2007-ப் பிளஸ் 2 தேர்வு எழுதி 1,179 மதிப்பெண்களுடன் மாநிலத்தில் மூன்றாம் இடம் பெற்றார். இதற்காக அப்போதைய முதல்வர் கருணாநிதி கையால் பாராட்டுப் பத்திரம் பெற்றவர்.
ஆனால், தனது திறமை குறைத்து மதிப்பிடப்பட்டதாக உணர்ந்தவர், மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்தார், அதில் ஜெயமோகன் பெற்றது மாநிலத்திலேயே முதல் இடம்.
மருத்துவராகி, ஏழை மக்களுக்குச் சேவை செய்வேன் என்று நாளிதழ்களுக்கும் தொலைக்காட்சிகளுக்கும் பேட்டி கொடுத்தார். மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் தனது மருத்துவப் படிப்பை முடித்தவர், சொன்னதைச் செய்து காட்டினார்.
சொன்ன சொல்லைக் காப்பாற்றியவர்
நகரத்தை நோக்கி ஓடாமல், பழங்குடி கிராமத்தில் பணியாற்றத் தொடங்கினார். கடந்த 4 ஆண்டுகளாக ஈரோடு மாவட்டத்தின் கோவை, நீலகிரி எல்லைகளில் உள்ள தெங்குமரஹாடா பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேலை பார்த்து வந்தார்.
போதிய மருத்துவ விழிப்புணர்வு இல்லாத பழங்குடிகளைத் தேடிச் சென்று வைத்தியம் பார்த்தவர் ஜெயமோகன். தன்னுடன் பணியாற்றியவர்களை மிகுந்த மரியாதையுடன் நடத்தியவர். பூர்வகுடி மக்கள் மீது அதிக அக்கறையுடன் இருந்தார். சரியான பாதை இல்லாத சூழலில் காட்டுக்குள்ளே நடந்துசென்று, பரிசலைக் கொண்டு ஆற்றைக் கடந்து பழங்குடிகளின் இருப்பிடங்களுக்கு அனுதினமும் சென்றவர்.
வனவிலங்குகள் ஆர்வலர்
வனத்தின் மீதும் வனவிலங்குகள் மீதும் அலாதியான காதல் கொண்டிருந்தார். வன உயிரிகள் விழிப்புணர்வு முகாம்களில் ஆர்வத்துடன் கலந்துகொண்டார். இடையே உயர்கல்வி பயில நீட் தேர்வுக்காகவும் படித்து வந்தார்.
சில நாட்களாக உடல்நிலை சரியில்லாத நிலையிலும், தொடர்ந்து பழங்குடிகளுக்குப் பணியாற்றி வந்துள்ளார். சாதாரணக் காய்ச்சல்தானே என்று தன்னைக் கவனிக்க மறந்துவிட்டார். ஆனால் பழங்குடிகள் ஒன்றைக் கவனித்தனர்.
கண்ணுக்குத் தெரியாத கரோனா வைரஸ், மானுட உயிரோடு விளையாடி வரும் நிலையில் பாதுகாப்புக்காக முகக்கவசம் அணிந்திருக்கிறார். சிகிச்சையின்போது பழங்குடி மக்களிடையே தனிமனித இடைவெளியைப் பின்பற்றியவரின் மனதை அறியாதவர்கள் சண்டைக்கு வந்திருக்கின்றனர்.
உடலுடன் வாடிய உள்ளம்
காய்ச்சலும் மன உளைச்சலும் ஒருசேர வாட்ட, மொத்தமாய் முடங்கினார். மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. நிலைமை மோசமாக கோயம்புத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கரோனா வந்திருக்குமோ என்று சோதனை செய்யப்பட்ட சூழலில், டெங்கு காய்ச்சலின் அபாயகட்டத்தில் இருந்தார் ஜெயமோகன்.
தொடர், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் ரத்த அணுக்கள் குறைந்ததாலும் இதயச் செயலிழப்பாலும் மருத்துவர் ஜெயமோகன் உயிரிழந்தார். தன் மகனுக்கு ஏற்பட்ட நிலையைக் கேட்ட தாய் ஜோதி, மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றார். தற்போது மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். அவரின் தந்தை பேசும் நிலையிலேயே இல்லை.
அரசுக் கல்லூரியில் மருத்துவப் படிப்பை முடித்த ஜெயமோகன், தன் அறிவுசார் சிந்தனையை வெளிநாட்டுக்கோ, தனியார் மருத்துவமனைக்கோ மடைமாற்றி விடவில்லை. இவரைப் போல எண்ணற்ற மருத்துவர்கள் நாட்டின் பல்வேறு மூலைகளில் விளிம்பு நிலை மக்களுக்காகத் தொடர்ந்து பணியாற்றிக் கொண்டுதான் இருக்கின்றனர்.
கேள்விக்குறியாகும் சுய பாதுகாப்பு
கரோனா நோயாளிகளுக்காக தன் குடும்பம் மறந்து, வீடு மறந்து, ஆரோக்கியம் விட்டு ஓயாமல் உழைக்கின்றனர். சுய சிந்தனையுடன் சொந்தப் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கி, அடுத்தவர் குணம் அடையப் பாடுபடுகின்றனர். பிபிஇ எனப்படும் பாதுகாப்புக் கவசத்தைத் தொடர்ந்து 10 மணி நேரத்துக்கும் மேல் அணிந்து மருத்துவம் பார்க்கின்றனர். உடல் உபாதைகளைத் தாண்டி, பசி, தாகம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை ஒதுக்கிவைத்து அர்ப்பணிப்புடன் பணியாற்றுகின்றனர்.
பிரசவத்துக்கு முந்தைய நாள் வரை இரவு பகலாக உழைத்து, கரோனா பரிசோதனைக் கருவியைக் கண்டுபிடித்த மருத்துவர் தொடங்கி, 20 மாதக் குழந்தையை விட்டு 1 மாதம் தனித்திருந்து கரோனா சிகிச்சையாற்றிய மருத்துவர் வரை முன்னுதாரணர்கள் நம் கண் முன்னேதான் வாழ்கின்றனர்.
கரோனாவுக்கு எதிரான இந்த மருத்துவ யுத்தத்தில் உலகம் முழுக்க எண்ணற்ற மருத்துவர்கள் தங்களின் இன்னுயிரை இழந்துள்ளனர். நாட்டில் மிச்சமிருக்கும் மனிதநேயத்துக்கும் மாண்புக்கும் இவர்களும் ஒரு காரணம்.
ஊதியத்துக்காகப் பணிபுரியாமல் நம் உயிர்களைக் காக்கவே மருத்துவர்கள் பணிபுரிகிறார்கள் என்பதே ஜெயமோகன் நமக்கு விட்டுச் சென்ற செய்தி.
மருத்துவர்களின் மகத்தான சேவையை மதித்துச் செயல்படுவதே அவருக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி!