

வேலை நேரத்தை குறைக்கவும், கூலியை உயர்த்தவும் வலியுறுத்தி, வாக்களிக்கும் உரிமை கோரி 15,000 உழைக்கும் பெண்கள் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 1908-ம் ஆண்டு மார்ச் 8-ம் தேதி பேரணி நடத்தினர். இந்த நாளை அடுத்த ஆண்டு தேசிய பெண்கள் தினமாக அறிவித்தது அமெரிக்க சோஷியலிஸ்ட் கட்சி.
இந்த நாளினை சர்வதேச தினமாக அனுசரிக்கவேண்டும் என்ற ஆலோசனை கோபன்ஹேகனில் 1910-ம் ஆண்டு நடந்த உழைக்கும் பெண்களின் சர்வதேச மாநாட்டில் முன்வைக்கப்பட்டது. இதுவே பின்னர் சர்வதேச பெண்கள் தினமாக உருவானது.
உழைக்கும் பெண்கள் முன்வைத்த இந்த தினம் இன்றளவிலும் படித்த, அலுவலக சூழல், தொழிற்சாலையில் பணிபுரியும் மகளிர் போன்றவர்களின் பார்வையிலேயே நகர்ந்து வருகிறது.
ஆனால் சுமை தாங்கிகளாக எத்தனையோ பெண்கள் இந்த வட்டத்திற்கு வெளியே இன்னமும் வெளிச்சமின்றி வாழ்ந்து வருகிறார்கள். உழைப்பு, பொருளாதார சுரண்டல் இவற்றையும் தாண்டி தனிமையில் போராடும் பெண்கள் பலர்.
குழந்தைகளை பெற்றதாலேயே சுமக்க வேண்டும் என்ற கட்டாயத்தால்
எடுத்துக்காட்டாக, இந்தியாவில் சராசரியாக உயிர் வாழும் வயது என்பது பெண்களை பொறுத்தவரையில் 70.4 என்ற அளவிலும், ஆண்களை பொறுத்தவரையில் 67.8 சதவீதம் என்ற அளவிலும் உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
ஆண்களை விடவும் பெண்கள் கூடுதல் ஆண்டுகள் வாழ்கிறார்கள் என்பது இது தெரிவிக்கும் தகவல். உடல்பாதிப்பு, வாழ்வியல் நோய்கள், போதை பழக்க வழக்கம் போன்ற காரணங்களால் ஆண்கள் உயிர் வாழும் வயது பெண்களை விட குறைந்திருக்கிறது.
ஆனால் இதில் மற்றொரு உண்மையும் பொதிந்துள்ளது. பெண்களுக்கு முன்பே ஆண்கள் உயிரிழக்கும் குடும்பங்களே மிக அதிகம். அப்படியானால் குடும்பங்களை, அதன் பொருளாதாரத் தேவையையும் சேர்த்து சுமக்கும் பெரிய சுமை பெண்களுக்கு உள்ளது.
தனிமையில் குழந்தைகளை வளர்த்து கரை சேர்ப்பதற்காகவே வாழ்க்கையைத் தியாகம் செய்த பல்லாயிரக்கணக்கான பெண்கள் இந்திய சமூகத்தில் உள்ளனர்.
ஆண்களுடன் சரிநிகர் உரிமை வேண்டி போராடும் பெண்கள் ஒருபுறம் என்றால் ஆண்கள் குடும்பத்தைக் கவனிக்காததால், குடும்பப் பணிகளைப் பகிர்ந்து கொள்ளாததால், குடும்பத்தின் பொருளாதாரத் தேவைகளை எதிர்கொள்ளாததால் அதனை பூர்த்தி செய்வதற்காக தியாகிகளாகவே வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து மடியும் பெண்கள் ஏராளம். குறிப்பாக கிராமப்புற, அடித்தட்டு நிலையில் வாழும் பெண்கள் இந்தப் பிரச்சினையை அதிகமாக எதிர்கொள்கின்றனர். திருமணத்திற்கு முன்பு தந்தையாலும், பின்பு கணவனாலும் பெண்கள் சுமைதாங்கியாக மாறிய அவலம் இன்னமும் தொடர்கிறது.
உழைக்கும் பெண்கள் மட்டுமல்லாமல் எந்த வேலைக்கும் செல்லாமல் குடும்பத்தை மட்டும் கவனிக்கும் பெண்களும் இதனைத் தினந்தோறும் கடந்தே செல்கின்றனர்.
எனவே பெண்களுக்கான உரிமை, விடுதலை, மரியாதை என்பது குடும்பத்தில் இருந்தும் தொடங்க வேண்டும். உணவு சமைப்பது, குழந்தை வளர்ப்பது உட்பட குடும்ப பொறுப்புகளை சரியான முறையில் ஆண்களும் கவனித்தால் மட்டுமே இது சாத்தியம். அதனை நோக்கி நகர்வதே முழுமையான பெண் உரிமையாக முடியும்.
சர்வதேச பெண்கள் தினம் என்பது இவர்களுக்கும் இருக்கட்டும்.