

நம் தேசத்தில் ஒவ்வொரு ஐந்து நாளுக்கும் ஒரு மலக்குழி மரணம் நடைபெறுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? ஒரு மலக்குழிக்குள் சக மனிதனை இறங்கவைத்து சுத்தம் செய்யச் செய்வது எவ்வளவு பெரிய சமூக அநீதி என்று நீங்கள் யோசித்திருக்கிறீர்களா?
கடந்த ஐந்து ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, 2019-ம் ஆண்டு தான் இந்தியாவில் அதிக அளவில் மலக்குழி மரணங்கள் நடந்துள்ளன. 110 பேர் பலியாகியுள்ளனர்.
மனிதக் கழிவுகளை மனிதர்களே கையால் அள்ள சட்டம் அனுமதிக்கவில்லை. ஆனால், அது அமலுக்கு வந்ததாகத் தெரியவில்லை.
துப்புரவுத் தொழிலாளியின் மகன் பள்ளியில் கவியாகப் பாடுவது போல் ஒரு வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது.
"என் தந்தை இத் தேசத்தை நடத்துகிறார்
என் தந்தை இத் தேசத்தை நடத்துகிறார்
என் தந்தை இத் தேசத்தை நடத்துகிறார்
என் தந்தை இத் தேசத்தை நடத்துகிறார்
அவர் அரசியல்வாதி அல்ல..
ஆனால், என் தந்தை இத் தேசத்தை நடத்துகிறார்
அவர் மருத்துவர் அல்ல..
ஆனால், என் தந்தை நோய்களை விலக்கி வைக்கிறார்
என் தந்தை இத் தேசத்தை நடத்துகிறார்
அவர் காவல்காரர் அல்ல..
ஆனால் தேசத்தின் அழுக்கை சுத்தப்படுத்துகிறார்
அவர் ராணுவத்தில் இல்லை..
ஆனால், நாட்டின் அசிங்கமான எதிரிகள் மீது போர் தொடுக்கிறார்
என் தந்தை இத் தேசத்தை நடத்துகிறார்
என் தந்தை மட்டும் வேலைக்குச் செல்லாவிட்டால்
இந்தியாவின் ஒவ்வொரு வீட்டிலும் வேலை நின்றுவிடும்
யாரும் சமைக்கவும் மாட்டார்கள், எவரும் குளிக்கவும் முடியாது
தெருக்களில் ஒரே கூச்சலும் குழப்பமும் உண்டாகும்
குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல முடியாது
மருத்துவர்களால் மருத்துவமனைக்கு வர முடியாது
அமைச்சர்களால் கூட நாடாளுமன்றம் செல்ல முடியாது
ஒட்டுமொத்த தேசமும் ஸ்தம்பித்துவிடும்
என் தந்தை நம் அனைவரின் வாழ்க்கையையும் எளிதாக்குகிறார்.
ஆம் என் தந்தை எந்த ஒரு தந்தையும் செய்ய விரும்பாத வேலையைச் செய்கிறார்
என் தந்தை இத் தேசத்தை நடத்துகிறார்
ஏனென்றால் இந்த தேசம் 'மக்கும், மக்காத' என்று குப்பைகளை வகைப்படுத்திக் கொட்டுவதில்லை
எனது தந்தை சாக்கடைக் குழிக்குள் இறங்குகிறார்
குப்பைகளுக்கும் நோய்களுக்கும் நடுவே வேலை செய்கிறார்
வீட்டுக்கு வரும்போது நோயுடனேயே வருகிறார்
சில நேரங்களில் நோய்களுக்கு அவர் இரையாகிவிடுவாரோ என்று நான் அஞ்சுகிறேன்!
இன்னும் சில நேர்ங்களில் அப்பா வீடு திரும்பாமலேயே போய்விடுவாரோ என்று அஞ்சுகிறேன்!
இந்த தேசத்தை எனது தந்தை மட்டுமே நடத்திச் செல்லச் செய்யாதீர்கள்
ஏனெனில் இத்தேசம் நம் அனைவராலும் நடத்தப்பட வேண்டியது"
இவ்வாறு துப்புரவுத் தொழிலாளியின் மகன் கவிதை வாசிக்கிறார். துப்புரவுத் தொழிலாளார்களின் விழிப்புணர்வுக்காக டாடா குழுமத்தால் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
குப்பைகளை வீடுகளிலேயே தரம் பிரித்துத் தொட்டிகளில் சேர்த்தால் துப்புரவித் தொழிலாளர்கள் மலக்குழிக்குள்ளும், பாதாளச் சாக்கடைக்குள்ளும் இறங்க வேண்டியிருக்காது.
பொதுவாக நம் வாசலுக்கு நம் வீட்டுக் குப்பைகளை அப்புறப்படுத்தும் துப்புரவுத் தொழிலாளியை நாம் குப்பைக்காரர் என்று தான் அழைக்கிறோம். உண்மையில் குப்பைகளை அள்ளிவீசி துர்நாற்றத்தைப் பரப்பும் நாம் தானே குப்பைக்காரர்களாக இருக்க முடியும். நாம் அரசியல்வாதியாக, மருத்துவராக, ஆசிரியராக இல்லை என்னவாக இருந்தாலும் பொதுச் சுகாதாரத்தை பேணுவது ஒரு சில வேலையாட்களின் வேலை என்று நினைத்தால் நாம் அனைவரும் குப்பைக்காரர்களே என்பதை உரக்கச் சொல்லியிருக்கும் வீடியோ இது.
துப்புரவுத் தொழிலை செய்யும் நிர்பந்தத்தில் உள்ளவர்களுக்கு அரசு சில மறுவாழ்வு அனுகூலங்களைச் செய்கிறது. ரூ.40,000 நிதியுதவி, குறைந்த வட்டியில் ரூ.1,50,000 கடனுதவி, அவர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவி எனச் செய்கிறது. ஆனால், இவை மட்டுமே போதுமா?
குறிப்பிட்ட அந்த சமூகத்தினருக்காகவே நிறைய திட்டங்கள் வகுக்கப்பட்டு அடிமட்டத்திலிருந்து அவை செயல்படுத்தப்பட வேண்டும் அப்போதுதான் அவர்களை ஒட்டுமொத்தமாக விடுவிக்க முடியும்.
ஆனால் அதுவரை குறைந்தபட்ச மனித தலையீட்டோடு இருக்கும் இயந்திரங்களைக் கொண்டே சாக்கடைகளையும் மலக்குழிகளையும் சுத்தப்படுத்துவதை எளிதாக்கும் வகையில் நாம் ஏன் உறுதுணையாக இருக்கக் கூடாது. இப்படியும் வைத்துக் கொள்ளலாம் குப்பையை தரம் பிரிப்பது நமது அடிப்படைக் கடமை என்ற புள்ளியில் கூட செயல்படத் தொடங்கலாம்.
சஃபாய் கரம்சாரி அந்தோலன் அமைப்பின் தமிழகத் தலைவர் சாமுவேல் வேளாங்கண்ணி இது குறித்து பேசும்போது, "மனித கழிவுகளை மனிதர்கள் அள்ளுவதை தடுக்கும் சட்டம் 2013-ன் படி ( The Prohibition of Employment as Manual Scavengers and their Rehabilitation Act, 2013 ) அத்தகைய தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு அரசாங்கம் கல்வி உதவித் தொகை அறிவித்துள்ளது. ஆனால், அது இதுவரை செயல்படுத்தப்படவில்லை.
ஒரு துப்புரவுத் தொழிலாளியின் மகனோ மகளோ பள்ளியில் பல்வேறு அவமானங்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. அதனால் அவர்கள் கல்வியைப் பாதியில் நிறுத்தும் சூழல் உள்ளது. இடைநிற்றலுக்கு இன்னொரு காரணம் வசதியின்மையாக இருக்கிறது. சமூக அவமானங்களைப் புறந்தள்ளி கல்வி பயில விரும்பும் பிஞ்சுகளுக்கு இந்தக் கல்வி உதவித்தொகை அவர்களின் மீட்புக்கு உதவும். ஒரே ஒரு தலைமுறை கல்வியை ருசித்துவிட்டது என்றால் அடுத்தடுத்த தலைமுறைகள் மாறிவிடும் . அதனால் அரசாங்கம் மிக அவசரமாக அத்தகைய தொழிலாளர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித் தொகை சென்று சேர்வதை உறுதி செய்ய வேண்டும்" என்றார்.