

உளி தாங்கும் கற்கள் தானே மண் மீது சிலையாகும்... இந்த வரிகளுக்கு விளக்கமாய் திகழ்கிறார் தலைநகரின் தலைமகள் சரிதா. தலைநகர் டெல்லியில் முதல் பெண் பேருந்து ஓட்டுநராக சரிதா நியமிக்கப்பட்டுள்ளார்.
முதல் பெண் ஓட்டுநர் என்பதற்காக மட்டுமே அவர் பேசப்படவில்லை. "நான் என் பேருந்தில் பயணிக்கும் பெண் பயணிகளுக்கு துணை நிற்பேன். என் பேருந்தில் பயணம் செய்யும் பெண் பயணிகளின் பாதுகாப்பையும் உறுதி செய்வேன்" என அவர் பேசியதே அவரைப் பற்றி இன்னும் பேசவைக்கிறது.
உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்த ஒரு கொடூர பாலியல் பலாத்காரம் இதே டெல்லியில் தான் நடந்தது. அதுவும் ஓடும் பேருந்தில் அந்த வன்முறை கட்டவிழ்க்கப்பட்டது. தலைநகரில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குரியாகிவிட்டதாக வெடித்த பெரும் போராட்டத்தை யாரும் மறந்திருக்க முடியாது.
இத்தகைய சூழலில் டெல்லியின் முதல் பெண் பேருந்து ஓட்டுநராக பொறுப்பேற்றுள்ள சரிதாவுக்கு வரவேற்புகள் குவிந்து வருகினறன. அவரது பேருந்தில் பயணிக்கும் பெண்கள் சிலர் அவருடன் செல்ஃபி எடுத்துச் செல்கின்றனராம். அவரது நியமனம், பெண்கள் ஓட்டுநர் தொழிலை தேர்ந்தெடுக்க உதவும் என டெல்லி போக்குவரத்து அதிகாரி நம்பிக்கை தெரிவித்துள்ளார். சரிதாவின் நியமனம் குறித்து ஆம் ஆத்மி கட்சி தனது ட்விட்டரில், "சரிதா, டெல்லி போக்குவரத்துக் கழகத்தின் முதல் பெண் ஓட்டுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இது பெண்கள் முன்னேற்றத்துக்கான முதல் அடி" என தெரிவித்திருந்தது.
சரிதா, கடந்து வந்த பாதையை தெரிந்து கொள்வது லட்சோப லட்ச லட்சியப் பெண்களுக்கு நிச்சயம் உத்வேகமாகவே இருக்கும்.
ஆட்டோவிலிருந்து பஸ் வரை:
வாங்கடராத் சரிதா. வயது 30. ஓட்டுநராக 10 வருடங்கள் அனுபவம். ஆட்டோ ஓட்டுநராகவே தனது தொழிலை தொடங்கியிருக்கிறார். சரிதாவுடன் பிறந்தவர்கள் 5 பெண்கள். பெரிய குடும்பம். அப்பாவின் திடீர் மரணத்துக்குப் பின்னர் குடும்பப் பாரம் சரிதாவிடம் வருகிறது. குடும்பப் பிரச்சினையை காரணம் காட்டியே குடித்துவிட்டு சுற்றித் திரியும் ஆயிரக்கணக்கான ஆண்கள் மத்தியில் உங்களுக்கு குடிப்பதற்கு ஒரு மனம் இருந்தால் எனக்கு உழைப்பதற்கு மனம் இருக்கிறது என சாட்டையடி அடிப்பதுபோல் ஆட்டோ ஓட்டுநர் ஆனார் சரிதா.
தொழில் வளர்ச்சிக்காக தனது சொந்த ஊரான நல்கொண்டாவில் இருந்து குடும்பத்துடன் ஹைதராபாத்துக்கு இடம் பெயர்ந்த சரிதா கனரக வாகனங்கள் ஓட்டுநர் உரிமைக்கு பதிவு செய்கிறார். 2011-ல் அவரது கனவு நிறைவேறியது. பேருந்து ஓட்டுநராக உருவெடுத்தார் சரிதா.
அதன் பின்னர் டெல்லியில், அனைத்து மகளிர் கால் டாக்ஸியில் பணி. இப்படி ஓடிக் கொண்டிருந்த சரிதாவுக்கு டெல்லி மாநகர போக்குவரத்துக் கழகத்தின் முதல் பெண் ஓட்டுநராக பணி கிடைத்துள்ளது. அதுவும் அவ்வளவு எளிதாக கிடைத்துவிடவில்லை. 4 வாரங்கள் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டார். தன்னுடன் விண்ணப்பித்திருந்த 7 பேரையும் திறமையால் விஞ்சிக்கொண்டு பணியை பெற்றுள்ளார்.
தனது ஓட்டுநர் அனுபவத்தை பதிவு செய்யும் போது, "நான் முதன்முதலில் ஓட்டியது மினி பேருந்துதான். ஆனால் அது எனக்கு வாழ்க்கையை தைரியமாக, கவுரவமாக வாழ புது நம்பிக்கையை கொடுத்தது" என சரிதா கூறுகிறார்.
சரி நிகராய் எழுந்துள்ள சரிதாவுக்கு சபாஷ்!.