நம்பிக்கை இந்தியா: மை லேடி சொல்லவைத்த நீதிபதியின் அனுபவப் பகிர்வு

நம்பிக்கை இந்தியா: மை லேடி சொல்லவைத்த நீதிபதியின் அனுபவப் பகிர்வு
Updated on
3 min read

நீதிமன்ற காட்சி என்றாலே நமக்கு டீஃபால்டாக நினைவுக்கு வரும் வார்த்தை 'மை லார்ட்'.

ஆனால் 'மை லார்ட்' என என்னை அழைக்காதீர்கள் 'மை லேடி' என்று விளியுங்கள் எனக் கூறினார் ஒரு பெண் நீதிபதி. நீதித்துறையில் அவர் சந்தித்த அனுபவப் பகிர்வே இது.

லீலா சேத், வயது 84. இந்தியாவில், உயர் நீதிமன்றத்துக்கு முதன் முதலில் பெண் நீதிபதியாக நியமிக்கப்பட்டவர் இவரே. 'தி இகுவேட்டர் லைன்' என்ற பத்திரிகையில் அண்மையில் அவர் எழுதிய கட்டுரையில், நீதித்துறையில் தான் அடிஎடுத்துவைத்த நாளில் இருந்த சந்தித்த பாலின பாகுபாட்டையும் அதை எதிர்த்து நிற்க தான் கையாண்ட வழிவகைகளையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது:

"பாட்னா உயர் நீதிமன்றத்தில்தான் முதன் முதலில் என் வழக்கறிஞர் பயணத்தைத் தொடங்கினேன். வருமான வரித் துறைக்கு இளநிலை சட்ட ஆலோசகராக பணி. 10 வருடங்கள் அங்கேயே கடந்தது. பின்னர் அங்கிருந்து கொல்கத்தா சென்றேன்.

நீதித்துறையில் சாதிக்க வேண்டும் என்ற உந்துசக்தியால் டெல்லி செல்லத் திட்டமிட்டேன். உச்ச நீதிமன்றம் டெல்லியில் இருப்பதால் டெல்லிக்கு பெயர்வதே தொழில் ரீதியாக சரியாக இருக்குமென்பது என் கணிப்பு. அது சரியாகவே இருந்தது. அரசியல் சாசனம், வரி விவகாரங்கள் அனைத்து சட்ட இலாகாகளிலும் 5 ஆண்டுகள் அனுபவத்தை சேகரித்தேன். 1977-ம் ஆண்டும் ஜனவரி மாதம், உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்டேன். அதனைத் தொடர்ந்து 1978 ஜூலை 25-ல் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டேன்.

அங்குதான் எல்லாம் ஆரம்பித்தது. நீதித்துறை மரபின்படி உயர் நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக பதவியேறுக் கொள்பவர் தனது அனுபவ அறிவை பெருக்கிக் கொள்வதற்காக அந்த நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிக்கு ஒதுக்கப்பட்ட அறையில் அமர்ந்து கொள்ள வேண்டும். அதேபோல் தலைமை நீதிபதி வழக்குகளை விசாரிக்கும்போதும் நீதிமன்றத்தில் அவருடன் அமர்ந்து கொள்ள வேண்டும்.

ஆனால், அந்த தலைமை நீதிபதி (ஆண் நீதிபதி) நான் அவருக்கு சரிசமமாக அமர்வதை விரும்பவில்லை. இதை என்னிடம் வேறுஒருவர் தெரிவித்தார். அந்த நபர் என்னிடம் கூறும்போது "உங்களை அவரது சேம்பரில் அனுமதிக்கவும், அவருடன் நீதிமன்றத்தில் நீங்கள் சரிசமமாக அமர்வதை அவர் விரும்பவில்லை" என்றார்.

அன்று முதல் நான் டெல்லி உயர் நீதிமன்றத்தில் இருந்த மூத்த வழக்கறிஞர் சாவேவுடன் அமரத் தொடங்கினேன். சாவே, மேற்கத்திய சிந்தனை கொண்டவர். அப்பழுக்கற்றவர். அவரிடம் இருந்தே கற்றுக் கொண்டேன் ஒரு விளையாட்டுக் குழுவின் வீரராக இருந்து எப்படி அந்த விளையாட்டின் நடுவராக (அம்பயராக) மாறுவது என்பதைக் கற்றுக் கொண்டேன்.

நான் நீதிபதியான பிறகு பல்வேறு வழக்கு விசாரணையின்போதும் வழக்கறிஞர்கள் என்னை மை லார்ட் என்றே அழைத்து வந்தனர். இது எனக்கு மிகவும் நெருடலாக இருந்தது. நான் குறுக்கிட்டுச் சொன்னேன், மை லார்ட் என என்னை நீங்கள் அழைக்க வேண்டாம். மை லேடி என்று அழையுங்கள் என்றேன். ஆனால், இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு என்றால் வாதிடும் வழக்கறிஞர்கள் சர்வசாதாரணமாக என் சகோதர நீதிபதியை மட்டுமே பார்த்து மை லார்ட் என வாதிட்டுவிட்டுச் செல்வர். மை லேடி என அழைக்கு ஏனோ பலருக்கு ஈகோ இடம் தரவில்லை. மனம் உவந்து மை லேடி என என்னை வெகு சிலரே அழைத்திருக்கின்றனர்.

இது ஒருபுறம் இருக்க நான் சக நீதிபதிகளுடன் செல்லும்போது என்னை மூன்றாம் நபருக்கு அறிமுகம் செய்ய நேர்ந்தால், "நமது புதிய பெண் நீதிபதி இவர்தான்" என்பார்கள். ஏதோ என்னைப் பார்த்தால் என் பாலினம் புலப்படாது. பெண் நீதிபதி என்று அறிமுகப்படுத்தினால் மட்டுமே நான் பெண் என்பது புரியும் என்பதுபோல் நடந்து கொள்வார்கள். அதேபோல் நீதிமன்றத்தில் ஏதாவது கொண்டாட்டம் என்றால், நிகழ்ச்சிக்கான தேநீர் ஏற்பாடுகளை நானே கவனிக்க வேண்டும் என எதிர்ப்பார்ப்பார்கள். அப்போது நான் தைரியமாக சொன்னேன், நான் இங்கு நீதிபதியாக வருவதற்கு முன்னர் இந்த ஏற்பாடுகளை எல்லாம் யார் கவனித்துக் கொண்டார்களோ அவர்களே இனியும் கவனித்துக் கொள்ள வேண்டும். தேநீர் ஏற்பாடு செய்வதை பெண்ணுக்கான பணியாக நினைக்காதீர்கள் என வலுவாக எதிர்ப்பை பதிவு செய்தேன்.

டெல்லி நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக (பொறுப்பு) இருந்த போது என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்ட மூத்த நீதிபதி ஒருவர் மிகவும் கடுமையாக என்னிடம் பேசினார். அவர் வார்த்தைகள் என்னை தாக்கின. நான் என் எதிர்ப்பை மிகவும் வலிமையாக பதிவு செய்தேன்.

உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியாக பாத்திமா பீவி நியமிக்கப்பட்டார். அவரது நியமனத்தை பற்றி வெளிப்படையாக கருத்து தெரிவித்த மூத்த நீதிபதி ஒருவர், "பாத்திமா பீவி ஜீனியர் நீதிபதி. அவர் இரண்டரை ஆண்டுகளில் ஓய்வு பெற்று விடுவார். எனவே அவரால் எந்த அமர்வுக்கும் தலைமை தாங்க முடியாது" என்றார்.

சில தலைமை நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள், தொழிலதிபர்கள் மனநிலை இத்தகையதாக இருக்கும் வரையில் நீதித்துறையில் பெண்கள் முன்னேறுவது ஹெர்குலஸ் பூமியை தோளில் சுமந்தது போன்றே கடினமானது.

1991, ஆகஸ்ட் 5-ம் தேதி நான் இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டேன். அன்று முதல் என்னை எத்தனை கண்கள் கூர்ந்து கவனிக்கும் என என்னால் உணர முடிந்தது. எனது தவறுகள் பூதாகரமாக்கப்படும் என்பது அறிந்திருந்தேன். தெரியாமல் தவறு நேர்ந்தால்கூட, எனக்கு பின்னால் வரும் பெண் நீதிபதிகளிடம் அதை சுட்டிக் காட்டுவார்கள் எனவும் தெரியும். எனவே நான் மிக மிக கவனமாக இருக்க நேர்ந்தது. இருப்பினும் எப்போதுமே எனது முடிவுகளில் உறுதியாக இருந்தேன். இது சரியல்ல என்ன நம்பியவற்றின் மிதித்துத் தள்ள நான் தயங்கியதில்லை" என கூறியிருக்கிறார்.

பாலினப் பாகுபாடுகள் பற்றிய விழிப்புணர்வு இன்றளவும் தேவைப்படுகிறது. மகனுக்கு சுடு சோற்றையும் மகளுக்கு பழங்கஞ்சியும் அளிக்கும் நிலை மாறும் நாளில்தான் சமூகத்தில் ஆண் - பெண் சமத்துவம் சாத்தியமாகும். வீட்டில் இருந்தே எந்த மாற்றமும் வித்தாகும் என்பதில் இந்த சமூகப் பிரச்சினையும் விதிவிலக்கல்ல.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in