Published : 24 Oct 2014 10:52 AM
Last Updated : 24 Oct 2014 10:52 AM

ஒரு நிமிடக் கதை - மாமியார் வீடு

தீபாவளிக்காக அவரது அம்மா இருக்கும் தட்டாம் பாளையம் கிராமத்துக்கு வந்திருக்கிறோம். ஆரம்பத்தில் ஆர்வமாய் இருந்த குழந்தைகள் இப்போது முகம் சுளித்தார்கள். இன்னும் நான்கு நாட்கள் எப்படி போகப்போகிறதோ?

இத்தனை வருடம் அவர் எவ்வளவோ போராடியும் நான் இந்த கிராமத்துக்கு தீபாவளி கொண்டாட வர சம்மதிக்கவே இல்லை. இந்த வருடம் ‘அம்மா உடம்பு சரியில்லாம இருக்காங்க...’ என்று அவர் செண்டிமென்டாய் பேசியதால் வந்தேன்.

சொந்த ஊருக்கு வந்த சந்தோஷத்தில் அவர் கலகலப்பாக இருக்கிறார். அம்மாவும், மகனும் கொஞ்சிக் கொள்வதைப் பார்க்க, பார்க்க எனக்கு தாங்க முடியாத எரிச்சல்.

மழை வேறு சமயம் பார்த்து பழிவாங்கிக்கொண்டிருந்தது. பிள்ளைகள் பட்டாசு கொளுத்த முடியாமல் பயங்கர டென்ஷனில் வீட்டுக்குள் அடைந்து கிடக்கிறார்கள். அதைப் பற்றிய கவலைகூட அவருக்கு இல்லை.

வேண்டாவெறுப்புடன் சமையல் கட்டுக்குள் நுழைந்தேன். “வாம்மா, டீ போட்டு தரேன். குடிக்கிறீயா...?” – மாமியார் கேட்கிறார்.

“ப்ச், வேணாம் அத்தே, நான் இதெல்லாம் குடிக்கிறதில்லை. கிரீன் டீதான் குடிப்பேன்!” – வெடுக்கென்று சொன்னேன்.

“அதென்ன டீயோ... நான் என்னத்தக் கண்டேன்?” என்று புலம்பியவாறு பாத்திரங்களை உருட்டிக் கொண்டிருந்தார் என் மாமியார்.

“அத்தே, மதியத்துக்கு என்ன சமைக்கணும்னு சொல்றீங்களா... ஏன்னா, இங்க விறகடுப்பிலதான் சமைக்கணும். எனக்கு பழக்கம் இல்லாததால சமைக்க ரொம்ப நேரம் ஆகும். அதான் இப்பவே ஆரம்பிச்சுட்டா நல்லா இருக்கும்..”

“என்னடா சொல்ற நீ?... பட்ட ணத்துல சொகுசா வாழற எங்க வீட்டு மகராசி நீ. நல்ல நாளும் அதுவுமா உன்னை இங்க வேலை செய்யவிட்டு நான் வேடிக்கை பார்ப்பேன்னு நினைச்சியா?

வேளாவேளைக்கு உங்க ஒவ்வொருத்தருக்கும் பிடிச்ச சமையல் முதல்கொண்டு... தீபாவளிக்கு பலகாரம் செய்யறது... உங்களை கவனிச்சிக்கிறது... பிள்ளைங்க ஜாலியா இருக்க ஏற்பாடு செய்யறதுன்னு எல்லாத்துக்கும் நான் பாத்து, பாத்து ஆள் தயார் பண்ணி வைச்சிருக்கேம்மா. நீ ராணி மாதிரி எந்த குறையும் இல்லாம, இங்க பண்டிகையை கொண்டாடிட்டு சந்தோஷமா ஊருக்கு போனா போதும். அதுதான் இந்த அத்தைக்கு சந்தோஷம்.”

அதைக் கேட்ட நான் “அம்மா..!”என்று கதறியவாறு மாமியாரை கட்டிக்கொள்வதை பார்த்து, என் கணவர் கண்கலங்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x