Last Updated : 20 Jun, 2017 09:24 AM

 

Published : 20 Jun 2017 09:24 AM
Last Updated : 20 Jun 2017 09:24 AM

இணைய களம்: அப்பாவின் உலகம் அழகு!

நான் கிராமத்துப் பெண். அடிப்படை வசதிகள்கூட இல்லாத கிராமத்தில் வளர்ந்தவள். நான் 10-ம் வகுப்பு படிக்கும் வரை வீட்டில் கழிப்பறை வசதி கிடையாது. கம்மாய்க்கும் பேக்கடைக்குமா திரிந்து ராத்திரி நேரத்தில்தான் கடன்களை முடிக்க வேண்டும். சொன்னால் நம்ப மாட்டீர்கள்… ஒருநாள் வயிற்று வலி... தாங்காமல் நிற்கவும் முடியாமல் நடக்கவும் முடியாமல் திண்ணையில் வந்து கண்ணைக் கசக்கிக்கொண்டு படுத்துக் கிடந்ததைப் பார்த்தார் அப்பா. பொழுது விடிந்து, வீட்டுக்குப் பின்னால் போய்ப் பார்த்தால்... தென்னை ஓலைகளையும் பால்மண்டைக் குச்சிகளையும் வைத்து கக்கூஸ் கட்டி வைத்திருந்தார். எனக்கு நினைவு தெரிந்து, நான் ஆகாயத்தில் விமானத்தில் முதன்முறையாகப் பறந்தது அப்போதுதான்.

ஒவ்வொரு மாதமும் மாதவிலக்கு வந்து இம்சை செய்துகொண்டே இருக்கும். கல்யாணம் ஆகும் வரைக்கும் நாப்கின் என்றால் என்னவென்றே தெரியாது. ‘இந்த இங்கிலீஷ் மீடியம் படிக்கிற புள்ளைங்கல்லாம் ஏதோ பஞ்சு மாதிரி ஒண்ணு இருக்கே... அதைத்தான் வாங்கி வைக்குதுங்க… அது எப்டிமா இருக்கும்?’னு அம்மாவிடம் கேட்டால் ‘அதெல்லாம் தப்பு... தீட்டுத் துணியை நம்ம கையால துவைச்சு, வெயில் படாம நிழல்லதான் காயப் போடணும்’னு சொல்லி, கிழவியோட கிழிந்த புடவையைத்தான் துண்டுதுண்டா கிழித்துத் தருவார். அதோடுதான் சைக்கிள் மிதித்துக்கொண்டு பள்ளிக்கூடத்துக்குப் போக வேண்டும். வாசல் கூட்டிக் கோலம் போட வேண்டும். மாடு, கன்று, பூச்செடிகளையெல்லாம் தீட்டென்று சொல்லித் தொடவே விட மாட்டார்கள். யார் கண்ணும் படாமல் பதுங்கிப் பதுங்கி தீட்டுத் துணிகளைத் துவைத்துக் காயப் போட்டு மடித்து மறைத்து வைப்பதற்குள் உயிர் போய்விடும். அவ்வளவு சீக்கிரத்தில் ரத்தக் கறையெல்லாம் சட்டென்று போய்விடாது. சுத்தமாகத் துவைத்து வைத்தால்தான் அடுத்தமுறை அந்தத் துணியை வைத்துக்கொள்ளும்போது மிருதுவாக இருக்கும். இல்லையென்றால், துணியே அறுத்து ஆளைக் கொல்லும்.

இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால், அம்மா இந்த விஷயத்தில் அடிக்கடி உதவினாலும், ‘போற இடத்துல காரித் துப்புவாங்க... நீயே கத்துக்கோ’ என்று சொல்வார்கள். சில நேரங்களில் சரியாகத் துவைக்காமல் இருந்தால், காது கொடுத்துக் கேட்க முடியாத அளவுக்குத் திட்டுவார்கள். அன்றைக்கும் அப்படித்தான் சரியாகத் துவைக்காமல் அவசரத்தில் கிளம்பிவிட்டேன். வீட்டில் திட்டு விழுமென்று நினைத்தால், அப்படி எதுவும் அன்றைக்கு நடக்கவில்லை. அப்புறம்தான் தெரிந்தது, நான் கிளம்பிய பிறகு அம்மாவுக்குத் தெரியாமல் அப்பாதான் அதையெல்லாம் துவைத்திருக்கிறார் என்று. அப்பா கையில் ரெண்டு ரூபாய் இருந்தால் டீ வாங்கிக் குடிக்க மாட்டார். எனக்காக பென்சில் வாங்கித் தருவார். வெறும் 70 ரூபாய் சம்பளத்தில் லாரியில் க்ளீனராக இருந்தார். அழுக்குச் சட்டை, அடி, உதை, திட்டு என்று அவ்வளவு கஷ்டங்களையும் அனுபவித்தார். இரவு பகல் பார்க்காமல் காடுமேடெல்லாம் டிரைவராக லாரி ஓட்டினார். இப்போதும் நான் எந்த ஊரில் இருந்தாலும் ‘சாப்டியா?’னு கேட்காமல் அவர் தூங்குவதில்லை. அப்பாவை நேசிக்கும் எந்த மகளும் ஆண்களை அசாத்தியமாய் நம்பி நேசிப்பாள். அப்பாக்கள் உலகம் அழகு!

‘போவ்... நீதாம்பா எனக்கு எப்பவுமே உசுரு... உனக்கு நான் எப்பவுமே பொண்ணா பொறக்கணும்!’

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x