கிளென் தியோடர் சீபோர்க் 10

கிளென் தியோடர் சீபோர்க் 10
Updated on
2 min read

நோபல் பரிசு பெற்ற அமெரிக்க அறிவியலாளர்

அமெரிக்காவைச் சேர்ந்த புகழ்பெற்ற அறிவியலாளரும் வேதியியலுக்கான நோபல் பரிசை வென்றவருமான கிளென் தியோடர் சீபோர்க் (Glenn Theodore Seaborg) பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 19). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* மிச்சிகன் மாநிலத்தில் இஷ்பெமிங் என்ற நகரில் பிறந்தார் (1912). சிறுவனாக இருந்தபோதே குடும்பம் லாஸ் ஏஞ்சல்சில் குறியேறியது. மேல்நிலைக் கல்வி பயிலும்போது தனது வேதியியல் மற்றும் இயற்பியல் ஆசிரியரால் கவரப்பட்டு இவருக்கும் அறிவியலில் ஆர்வம் பிறந்தது.

* முதல் மாணவராகத் தேறி லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றார். பெர்க்கேலியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் வேதியியலில் முனைவர் பட்டம் பெற்றார். தனது ‘இன்டராக் ஷன் ஆஃப் ஃபாஸ்ட் நியுட்ரியன்ஸ் வித் லீட்’ என்ற ஆய்வுக் கட்டுரையில், அணுப்பிளவு (நியுக்ளியர் ஸ்பாலேஷன்) என்ற வார்த்தையை அறிமுகம் செய்தார்.

* அணு மருத்துவத் துறை ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். புதிய ஐசோடோப் அயர்ன், அயர்ன்-59-ஐக் கண்டறிந்தார். இது மனித உடலில் ஹீமோகுளோபின் குறித்த ஆராய்ச்சிகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. ஐசோடோப் கூறுகளைக் கண்டறிந்தார். இவை பல நோய்களைக் கண்டறியவும், சிகிச்சை அளிக்கவும் பயன்பட்டது.

* குறிப்பாக, அயோடின்-131, தைராய்டு நோய்க்கான சிகிச்சைக்குப் பயன்பட்டது. யுரேனியப் பின் தனிமங்கள் (transuranic elements) ஒருங்கிணைப்பு, ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை மேற்கொண்டார். இந்த ஆராய்ச்சிக்காக அமெரிக்க இயற்பியல் விஞ்ஞானி எட்வின் மெக்மிலானுடன் இணைந்து இவருக்கு 1951-ம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

* இந்த ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு ஆக்டினைடுகள் (Actinide) கருத்துருவை மேம்படுத்துவதற்கு வழிகோலியது. ஆக்டினைடுகள் என்பது 15 வேதியியல் தனிமங்கள் கொண்ட ஒரு வரிசை. அணுக்கரு வேதியியலின் முக்கிய கிளைகளில் ஒன்றான ஆக்டினைடுகள் வேதியியலை இவர் ஆராய்ந்தார்.

* கதிரியக்கம் கொண்ட புளுட்டோனியம், குயுரியம், பெர்க்கெலியம், ஃபெர்மியம், நொபிலியம் உள்ளிட்ட மொத்தம் 10 யுரேனியப் பின் தனிமங்களை (தனிம அட்டவணையில் யுரேனியத்துக்குப் பின்னால் வரும் தனிமங்கள்) ஆராய்ந்தார். அணு ஆற்றலை வணிக நோக்கங்களுக்காகவும் அமைதிப் பயன்பாடுகளுக்காகப் பயன்படுத்துவது குறித்தும் கட்டுரைகளை எழுதி வெளியிட்டார்.

* தன் வாழ்நாள் முழுவதும் ஆயுதக் கட்டுப்பாடு குறித்து பேசியும் எழுதியும் வந்தார். அணு ஆயுதப் பரவல் தடை உடன்படிக்கை மற்றும் விரிவான பரிசோதனை தடை ஒப்பந்தத்துக்கு முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளார்.

* அமெரிக்காவின் பத்து ஜனாதிபதிகளுக்கு அணுக்கொள்கை ஆலோசகராகச் செயல்பட்டுள்ளார். ரொனால்ட் ரீகனின் ஆட்சிகாலத்தில் கல்விக்கான சிறப்பு தேசிய ஆணையத்தின் உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார். தனிமங்கள் குறித்த இவரது ஆராய்ச்சிகளில் எலிமன்ட் 106-க்கு ‘சீபோர்ஜியம்’ என இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.

* புளுட்டோனியம் வேதியியலுக்கு மகத்தான பங்களிப்பை வழங்கியவர் எனப் போற்றப்படுகிறார். ஆரம்பத்தில் உலகப் புகழ்பெற்ற மன்ஹாட்டம் பிராஜக்டில் பங்கேற்றார். உலகம் முழுவதும் உள்ள பல பல்கலைக்கழகங்கள் 50-க்கும் மேற்பட்ட டாக்டர் பட்டங்களை வழங்கின.

* பல பொது இடங்கள், அணுக்கூறுகள் முதல் விண்கோள் வரை இவரது பெயர் சூட்டப்பட்டன. 500-க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார். அணு வேதியியலுக்கு மகத்தான பங்களிப்பை வழங்கியுள்ள கிளென் தியோடர் சீபோர்க் 1999-ம் ஆண்டு 87-வது வயதில் மறைந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in