

ஒரு படத்துல செம கெத்தா ஒரு ஹீரோ என்டராகி, இடைவேளைக்கு அப்புறம் திடீர்னு காணாமப் போனா எப்படியிருக்கும்? அப்படியிருக்குது நம்ம ஓபிஎஸ்ஸோட நிலைமை. சமாதியில உட்கார்ந்ததும் பூராக் கேமராவையும் அவரைப் பார்த்துத் திருப்புனவங்க எல்லாம், இப்ப ஜெயக்குமார், விஜயபாஸ்கர், ப.சிதம்பரம் பக்கம் திருப்ப ஆரம்பிச்சிட்டாங்க.
பேஸ்புக்ல, ‘ஐ சப்போர்ட் ஓபிஎஸ்’னு முழங்குன பசங்ககூட இப்ப, ‘ஓ.பி.எஸ்.ன்னா யாரு?’ன்னு கேட்கிறாங்க. மாவட்டம் மாவட்டமா செயல்வீரர்கள் கூட்டத்துக்குப் போனாலும் தொண் டர்கள் ஆதரவும் பழைய மாதிரி இல்லை.
‘இனிமே இவரை நம்பி பிர யோஜனம் இல்லை’ன்னு பாஜகவும் எடப்பாடி அணிக்கு ஆதரவாகிடுச்சி. ‘உள்ளே அழுகுறேன், வெளியே சிரிக்கிறேன். நல்ல வேஷம்தான் வெளுத்து வாங்குறேன்’ என்று சோக கீதம் வாசிக்கும் அவரது தொண்டர்களுக்காக மிகச் சிரமப்பட்டு சில ஐடியாக்களைக் கண்டுபிடிச்சிருக்கேன். அவற்றில் சில...
1. மீண்டும் அம்மா சமாதியில் ஒரு தியானத்தில் உட்காரலாம். லேசாகக் கண்ணைத் திறந்து பார்க்கும்போது மீடியாக்கள் கூட்டம் மொய்க்கவில்லை என்றால், சிரசாசனம், தனுஷாசனம் என்று இறங்கலாம்.
2. ‘‘10% உண்மையைத்தான் சொல்லியிருக்கேன். மீதியை பிறகு சொல்வேன்’’ என்றாரே, அதைப் போட்டு உடைக்கலாம்.
3. மேலிடத்தில் சொல்லி, தன் வீட்டுக்கும் நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, மாஃபா பாண்டியராஜன் வீடுகளுக்கும் வருமான வரித்துறை ரெய்டு வரச்சொல்லலாம். ரெய்டின் முடிவில், “2 செட் வேட்டி, அம்மா படங்கள், அதிமுக கொடிகள், 5500 ரூபாயைத் தவிர வீட்டில் எதுவுமே சிக்கவில்லை. உண்மையான ஏழைப்பங்காளர்கள் இவர்கள் தான்’’ என்று அந்த அதிகாரிகளைப் பேட்டி கொடுக்க வைக்கலாம்.
4. மதுக்கடை உடைப்புப் போராட் டத்தில் மக்களோடு மக்களாக களமிறங்கலாம். கடைக்குப் பத்துப் பதினைஞ்சு அட்டைப் பெட்டியை லவட்டினால், தொண் டர்களை உற்சாகப்படுத்த உதவும்.
5. திமுக போட்ட பழைய அவதூறு வழக்கு இருக்கிறதா என்று தேடிப்பிடித்து, நீதிபதியிடம் அடம்பிடித்து வைகோவைப் போல சிறையில் அடைபடலாம். அனுதாப ஓட்டுலேயே அண்ணன் சி.எம். ஆகிடலாம்.
6. அதுவும் சரிவரவில்லை என்றால், விவசாயி அய்யாக்கண்ணுவிடம் ஐடியா கேட்டு, தினமும் ஒரு நூதனப் போராட்டம் நடத்தலாம். (அம்மா மரணத்துக்கு நீதி விசாரணை கோரி).
7. எடப்பாடியும், ஸ்டாலினும் ஏரி, குளத்தைத் தூர்வாருவது போல, நண்பர் சேகர் ரெட்டியிடம் சொல்லி ஆறுகளைத் தூர் வாரலாம்.
8. அதிமுகவில் சேர்ந்த நமீதா இப்போது எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை. அவரை தன்னுடைய அணிக்கு அழைத்து வருவதுடன், செயல்வீரர்கள் கூட்டத்துக்காக ஊர் ஊராக அழைத்துச் செல்லலாம். கூட்டம் சும்மா கும்மும்.
9. முதல் அமைச்சர், பொதுச் செயலாளர் எனும் இரு பதவி களுக்குப் பதிலாக அதிமுக சார்பில் தன்னை ஜனாதிபதி பதவிக்கும், மதுசூதனனை ஆளுநர் பதவிக்கும் முன் மொழியச் சொல்லலாம். அப்படி நடந்துவிட்டால், எடப்பாடி ஆட்சியைக் கலைக்க வசதியாக இருக்கும். அண்ணன் போனா, திண்ணை காலி தானே?
10.தமிழ்நாட்டை தெற்கு வடக்காகப் பிரித்து வடதமிழகத்துக்கு எடப் பாடியும், தென் தமிழகத்துக்கு ஓ.பன்னீர்செல்வமும் முதல்வரா கும் வகையில் பேச்சுவார்த்தை நடத்தலாம். அப்புறம் என்ன, பெரியகுளத்தை மாநகராட்சியாக தரம் உயர்த்தி, தன் தம்பியை மேயராக்குவதோடு, நாகர் கோயிலை மாநகராட்சியாக்கி தமிழிசையையும் மேயராக்கி விடலாம்
11. டி.டி.வி.தினகரன், விஜயபாஸ்கர் பற்றி போட்டுக்கொடுத்தது போல், இன்னமும் எடப்பாடி வீட்டுக்கு ரெய்டு வராததை, மத் திய அரசிடம் சுட்டிக்காட்டினால், கை மேல் பலனுண்டு.
12.இது எதுவுமே பயனளிக்க வில்லையென்றால், கடைசி ஆயுதத்தைக் கையில் எடுத்து விட வேண்டி யதுதான். ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம் இது. தீபாவின் கணவர் மாத வனைச் சந்தித்து எம்ஜிஆர் ஜெஜெ திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவைக் கேட்க லாம். செத்தான் எதிரி!