

புகைப்படங்கள் பல நேரங்களில் உலக வரலாற்றின் சாட்சியாக அமைந்துவிடுகின்றன. அமெரிக்கா - வியட்நாம் போரின் கோர சாட்சியாக இருந்த குண்டு வெடிப்பில் சிக்கிய சிறுமி நிர்வாணமாக ஓடும் புகைப்படம், சீனாவின் டியான்மென் சதுக்கத்தில் நடந்த ராணுவ அடக்குமுறைக்குப் பின்னர் சீன டாங்கர்களை எதிர்த்து நின்ற இளைஞரின் புகைப்படம், ஜப்பானின் ஹிரோஷிமா நாகசாகி நகரங்கள் மீது நடத்தப்பட்ட அணுகுண்டு தாக்குதலின்போது விண்ணை முட்டும் அளவுக்கு எழுந்த புகை மண்டலத்தின் புகைப்படம், சோமாலியாவில் பட்டினியால் மெலிந்து சாவின் பிடியில் இருந்த குழந்தையை இரையாக்கிக் கொள்ள அருகே காத்திருக்கும் வல்லூரின் புகைப்படம், போபால் விஷவாயு தாக்கத்தின்போது நீலம் பூத்து மண்ணில் புதைந்து கிடக்கும் குழந்தையின் புகைப்படம், நம் சமகாலத்தில் போரினால் பாதிக்கப்பட்ட அகதிகளின் சாட்சியாக கடற்கரையில் ஒதுங்கிய சிறுவன் அய்லானின் புகைப்படம், பாகிஸ்தானில் பள்ளிக்கூடத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பின் வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட குழந்தையின் ரத்தம் தோய்ந்த ஒற்றை ஷூ என எத்தனை எத்தனையோ வரலாற்று சோகங்களை கேமராக்கள் ஆவணப்படுத்தியிருக்கின்றன.
அப்படித்தான் இலங்கையில் நேற்று ஈஸ்டர் தினத்தன்று நெகம்போ பகுதியில் உள்ள புனித செபாஸ்டின் தேவாலயத்தில் உள்ள இயேசு கிறிஸ்துவின் சிலையும் ஒரு சாட்சியாக மாறியுள்ளது. தீவிரவாதத்தின் கோர முகத்தை வெளிக்கொணரும் சாட்சி, அப்பாவி மக்களின் துயரத்தின் சாட்சியாக அது காட்சியளிக்கிறது.
இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்களையும் நட்சத்திர விடுதிகளையும் குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதல் சம்பவங்களில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 300-ஐ எட்டிவிட்டது. இலங்கை சம்பவத்துக்கு உலகத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துக் கொண்டிருக்கும் வேளையில் உலகம் முழுவதும் மனதில் மனிதம் கொண்டிருக்கும் மக்கள் மத எல்லைகளைக் கடந்து ரத்தத் துளிகள் தெறித்த இயேசு கிறிஸ்துவின் அந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்து தங்கள் உள்ளக் குமுறல்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
சில புகைப்படங்கள் தூங்கிக் கொண்டிருக்கும் அரசாங்கங்களைத் தட்டி எழுப்பியிருக்கின்றன. வியட்நாம் போர் நிறுத்த ஒப்பந்தம், அகதிகளுக்கான விதிமுறைகளைத் தளர்த்திக் கொண்ட ஐரோப்பிய நாடுகள் என பல்வேறு மாற்றங்கள் புகைப்படங்களால் நடந்திருக்கின்றன. அப்படியேனும் இந்தப் புகைப்படம் மதவெறிக்கு, தீவிரவாதத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்காதோ?! என்று இணையவாசிகள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.
இந்தப் புகைப்படத்தை வெளியிட்ட நிருபர் யார் என்பது உறுதி செய்யப்படாவிட்டாலும் கூட புகைப்படம் உலக மக்களை உணர்வுகளால் ஒன்றிணைத்துள்ளது. ஊர், தேசம் எல்லைகள், சாதி, மதம் பிரிவுகள் இவை எல்லாம் மனிதரால் உருவாக்கப்பட்டவை. இந்த உலகம் மட்டும்தான் நம்புபவர்களுக்கு இறைவனாலும் நம்பிக்கையில்லாதவர்களுக்கு ஏதோ ஒரு அசாத்திய சக்தியாலும் உருவாக்கப்பட்டவை. 6 அறிவு கொண்ட மனிதன் என பெருமையாகக் கூறிக் கொள்ளும் மனிதன் மட்டுமே மனிதர்களைக் கொல்கிறான். இந்த பூமி கொலைகளம் அல்ல வாழ்வதற்கான இடம்.
இலங்கை துயரத்தின் சாட்சி சொல்லும் இயேசு கிறிஸ்துவின் சிலை ஆன்மிகம் அறியாதவரையும்கூட அசைத்துப் பார்க்கும்.