

தேர்தலுக்கு ஓரிரு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக பணப் பட்டுவாடா குறித்த தகவல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன.
தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளுக்கான பொதுத்தேர்தல், 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ம் தேதி நடக்கிறது. பிரச்சாரம் நாளை மாலையுடன் முடிவடைகிறது. அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்டப் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
அதுபோலவே, தமிழக தேர்தல் களத்தை கடந்த சில தேர்தல்களாக உலுக்கி வரும் பணப் பட்டுவாடாவும் நடைபெறும் நேரம் இது. தேர்தலுக்கு ஓரிரு நாட்கள் முன்னிலையில் வாக்காளர்களைக் கவரும் வகையில் அதிக அளவில் பணம் கொடுப்பது சில தேர்தல்களாகவே நடந்து வருகிறது.
இதையடுத்து, தேர்தல் ஆணையம் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளது. பறக்கும் படையினர், நிலை கண்காணிப்புக் குழுவினர் தவிர, மாநில உளவுப் பிரிவினர், வருமான வரித்துறையின் புலனாய்வுப் பிரிவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
தமிழகத்தில் சில நாட்களுக்கு முந்தைய நிலவரப்படி, ரூ.124 கோடியே 63 லட்சம் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, 989.6 கிலோ தங்கம், 492.3 கிலோ வெள்ளி என ரூ.283 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக இதுவரை 4 ஆயிரத்து 185 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இவையெல்லாம் தமிழக தேர்தல் களத்தை பணம் எந்த அளவுக்கு ஆக்கிரமித்துள்ளது என்பதற்கான உதாரணங்கள்.
வேலூர் தொகுதியில் துரைமுருகன் மற்றும் அவரது மகன் வீட்டில் நடந்த சோதனை முதல் தமிழக அமைச்சர் உதயகுமாரின் அறையில் நடந்த சோதனை வரை இந்த தேர்தலில் பண நடமாட்டத்தை ஓரளவு கட்டுப்படுத்தியுள்ளதாக சிலர் கூறுகின்றனர்.
சென்னை உட்பட பல நகரங்களிலும் தொழிலதிபர்கள் சிலருக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி ஏராளமான பணத்தைக் கைப்பற்றியுள்ளதாகவும் கூறுகின்றனர். இதனால் தமிழக தேர்தல் களம் பணம் ஈர்ப்பதை ஓரளவு தடுக்கும் என்றே பலரும் நம்புகின்றனர்.
எனினும் தமிழகத்தில் இதற்கு முன்பு நடந்த மற்ற பல தேர்தல்களின் தொடர்ச்சியாக தான் இந்தத் தேர்தலும் நடக்கும் என்ற கருத்தும் முன் வைக்கப்படுகிறது. இதற்கு முன்பு நடந்த ஒரு சில தேர்தல்களை போலவே, இந்தத் தேர்தலிலும் பணப் பட்டுவாடா முக்கிய இடத்தைப் பிடிக்கும் என்றே கருதப்படுகிறது.
இதை உறுதி செய்யும் விதமாக வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்தாக சிலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பல கட்சிகளைச் சேர்ந்தவர்களும் இதில் அடக்கம்.
வட தமிழகம், தென் தமிழகம் என பாகுபாடின்றி பல தொகுதிகளிலும் இதுவே நிலைமை. குறிப்பாக குறைந்த வருவாய் பிரிவு மக்களையும், வறுமைக்கோட்டுக்கு கீழே இருப்பவர்களையும் குற வைத்து பணப் பட்டுவாடா நடப்பதாகக் கூறப்படுகிறது.
மகளிர் சுய உதவிக்குழுக்கள் சிலவற்றையும் கட்சி நிர்வாகிகள் ‘வளைப்பதாக’ கூறப்படுகிறது. தொகுதி, நிற்கும் வேட்பாளர், தொகுதி, அவரது குடும்பம், சமூகப் பின்புலம் என்பதைப் பொறுத்து வாக்காளர்களுக்கு தரப்படும் பணத்தின் அளவும் மாறுபடுகிறது.
ஏதோ ஒரு சில வாக்காளர்களுக்கு, ஓரிரு இடங்களில் இதுபோன்று பணம் கொடுப்பது என்பது நாட்டில் பல மாநிலங்களிலும் உள்ளது. ஆனால் தமிழகம் சற்றே விதி விலக்கானது. திட்டமிட்ட தொழில்முறையைப் போலவே பணம் கொடுப்பதையும் கனகச்சிதமாகச் செய்து முடிக்கும் நடைமுறையும் தமிழகத்தில் மட்டுமே இருப்பதாகப் பலரும் வேதனை தெரிவிக்கின்றனர்.
வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதால் மட்டும் ஒருவர் வெற்றி பெற்று விட முடியுமா என்ற கேள்வியும் முன் வைக்கப்படுகிறது. பெரும் அலை வீசும் நேரங்களிலும், ஆதரவாகவோ, எதிர்ப்பாகவோ சூழல் உள்ள நிலையில் தேர்தல் நடைபெற்றால் பணம் கொடுப்பதையும் தாண்டி நியாயமாக வெற்றி பெறுபவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். முந்தைய பல தேர்தல்கள் இதை நிரூபித்துள்ளன.
ஆனால் அலை ஏதும் இல்லாத சூழலில் கட்சிகளிடையே கடும் போட்டி நிலவும் தேர்தல்களில் பணத்தின் பங்கு முக்கியமாகி விடுகிறது. தற்போதைய தேர்தலும் அத்தகைய ஒன்றாகவே உள்ளது. பல தொகுதிகளில் ஒரு குறிப்பிட்ட அணிக்கு ஆதரவாக சூழல் இருப்பதாக கருத்துக் கணிப்புகள் ஏற்கெனவே தெரிவித்துள்ளன.
அதுபோலவே தமிழகத்தின் வேறொரு பகுதியில் மற்றொரு அணிக்கு ஆதரவான சூழல் இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனினும் பல கட்சிகள் இடையே கடுமையான போட்டி நிலவும் தொகுதிகளும் தற்போது கணிசமாக உள்ளன. இந்தத் தொகுதிகளில் வாக்காளர்களிடம் பணம் கொடுப்பதால் தேர்தல் முடிவுகளில் அது எதிரொலிக்கவும் வாய்ப்புள்ளது.
3 சதவீதம் வரை தேர்தல் முடிவுகளை பணப் பட்டுவாடா தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது முக்கியத்துவம் பெறுகிறது. குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் நியாயமாக வெற்றி பெற வேண்டிய வேட்பாளர் குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றியைப் பறிகொடுக்கும் சூழல் உருவாகலாம். அதுபோலவே வெற்றி பெறும் வாய்ப்பு மிகக் குறைவாக இருக்கும் ஒரு வேட்பாளர் பணத்தின் மூலம் வெற்றியைத் தட்டிப் பறிக்கவும் வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் கருணாநிதி, ஜெயலலிதா போன்ற மிகப்பெரிய ஆளுமைகள் இல்லாத நிலையில், வித்தியாசமான சூழலில் தேர்தலைச் சந்திக்கிறது. இதற்கு முன்பு நடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரை பணப் பட்டுவாடா தேர்தல் வெற்றி தோல்வியை முடிவு செய்வது காரணியாக இருந்ததாக புகார்கள் உள்ளன.
எனவே, தேர்தலுக்கு ஓரிரு நாட்களே உள்ள நிலையில் பணப் பட்டுவாடாவை முழுமையாகத் தடுக்க வேண்டிய கடமை தேர்தல் ஆணையத்துக்கும், அரசு அதிகாரிகளுக்கும் உள்ளது. மக்களும் விழிப்புணர்வுடன் இருந்து நியாயமாக வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து செயல்படுவதன் மூலமே உண்மையான ஜனநாயகத்துக்கு வலிமை சேர்க்க முடியும்.