

இந்திய வரலாற்றில் 1947 மறக்க முடியாத ஆண்டு. 1945இல் பிரிட்டனில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தொழிலாளர் கட்சி ஆட்சியைப் பிடித்தது. ஆட்சியில் அமர்ந்தவுடன் இந்தியா உள்ளிட்ட காலனி நாடுகளுக்குச் சுதந்திரம் வழங்கப்படும் என்று அறிவித்தது.
தொடர்ச்சியாக இந்தியாவின் கடைசி வைஸ்ராயாக மவுண்ட்பேட்டன் 1947 பிப்ரவரியில் நியமிக்கப்பட்டார். பின்னர், இந்தியச் சுதந்திரச் சட்டம் 1947இன்படி இரண்டு இறையாண்மையுள்ள நாடுகள் என்பது முடிவாகி, 1947 ஜூலை 18இல் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் அதற்கு ஒப்புதல் பெறப்பட்டது. ஆகஸ்ட் 14இல் பாகிஸ்தானுக்கும், 15இல் இந்தியாவுக்கும் சுதந்திரம் என்றும் முடிவு செய்யப்பட்டது.
இரண்டு நாடுகளுக்கும் இடையிலான சர்வதேச எல்லைகளை நிர்ணயம் செய்வதற்காக சர் சிரில் ராட்க்ளிஃப் தலைமையில் 1947, ஆகஸ்ட் 17 அன்று எல்லை ஆணையம் நிறுவப்பட்டது. அவர்தான் இந்தியா - பாகிஸ்தான் எல்லைக் கோட்டை நிர்ணயித்தவர். சுதந்திர இந்தியாவின் முதல் வைஸ்ராயாக மவுண்ட்பேட்டன் 1948 ஜுன் 21 வரை நீடித்தார். இந்தியா சுதந்திரமடைந்தாலும் 1950 ஜனவரி 26 வரை பிரிட்டிஷ் ஆட்சி முழுமையாக நீக்கப்படவில்லை. பிரிட்டிஷ் அரசின் அடையாளங்களே பின்பற்றப்பட்டன.
ஏனெனில் டொமினியன் அந்தஸ்தில்தான் இந்தியா இருந்தது. அதாவது, பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் உள்ள ஒரு நாடாக இந்தியா இருந்தது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு அமைந்த அரசாங்கம் புதிய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியது.
அரசமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டு 1950, ஜனவரி 26இல் நடைமுறைக்கு வந்தது. அன்று முதல் இந்தியா தனித்த இறையாண்மையுள்ள குடியரசு நாடாக உருவெடுத்தது. அதன் பிறகு இந்தியாவிலிருந்து பிரிட்டிஷ் அடையாளங்கள் முழுமையாக அகற்றப்பட்டன. பிரிட்டிஷாரும் முழுவதுமாக இந்தியாவை விட்டு பிரிட்டனுக்கு இடம்பெயர்ந்தனர்.