

அழுகையை ரசிப்பது சாடிஸம் என்று உளவியலில் சொல்லக் கூடும். ஆனால், அவள் அழுகை என்னை ரசிக்கவைத்தது. அத்தகைய அழுகையை ரசித்தல் சாடிஸம் அல்ல... அது ஒரு அன்பின் வெளிப்பாடு என்பதை உணர்ந்த தருணம் அது. | வீடியோ கீழே |
உனக்கு தம்பி வேண்டுமா? தங்கை வேண்டுமா? - இரண்டாவது குழந்தையை சுமக்கும் தாய் கேட்கும்போதே அந்தக் குழந்தை மீதான எதிர்பார்ப்பும், ஆசையும் முதல் குழந்தை மனதில் விதைக்கப்பட்டுவிடுகிறது.
காத்திருப்பு, அந்தக் குழந்தை மீதான பாசப் பிணைப்பிற்கு உரு போட்டுவிடுகிறது. காத்திருப்புக்குப் பின், கண் முன் பச்சிளங் குழந்தை கை, கால் அசைக்க ஆர்வம் கூடுகிறது. அது அழகாய் சிரிக்க, தனக்கே தனக்கான 'என் தம்பி பாப்பா', 'என் தங்கச்சி பாப்பா' என்ற பற்று வந்துவிடுகிறது.
இப்படித்தான் தன் தம்பி பாப்பா மீது அதீத பற்று கொண்ட மழலை, அதன் உணர்வுகளை ஆழமாக, அழுத்தமாக வெளிப்படுத்தி இருக்கிறாள் இந்த வீடியோ பதிவில்.
அழுகை ஒலியுடன் துவங்குகிறது வீடியோ. ஏன் அழுகிறாள் அந்த அழகு பாப்பா என தெரியுமா? தன் தம்பி கைக்குழந்தையாகவே இருக்க வேண்டும் என்பதற்காக. அவனது அழகிய சிரிப்பு அவளை அவ்வளவு வசப்படுத்தியிருக்கிறது. என் தம்பி இப்படியே இருக்க வேண்டும் கடவுளே... என்ற மழலையின் வேண்டுதலைப் பார்த்த பிறகு நம் தம்பி, தங்கையை நாம் எப்படி கவனித்துக் கொண்டோம் என்பதை ரீவைண்ட் செய்யச் சொல்கிறது.
இந்த வீடியோ இரண்டே நாட்களில் 1.25 கோடியை தாண்டியது கவனிக்கத்தக்கது.