

இரண்டு நாட்களுக்கு முன்னர் சமூக வலைதளங்களில் போலீஸ் அதிகாரி ஒருவர், கும்பல் ஒன்றால் தாக்குதலுக்கு உள்ளான முஸ்லிம் இளைஞனை மீட்டு அங்கிருந்து அழைத்துச் செல்லும் வீடியோ காட்சி வைரலாகப் பரவியது.
நெட்டிசன்கள் அனைவரும் அந்த போலீஸ் அதிகாரியைப் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில் அந்த போலீஸ் அதிகாரி உத்தரகாண்டைச் சேர்ந்த ககன்தீப் சிங் என்று தெரியவந்தது.
இந்தச் சம்பவம் குறித்து தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு ககன்தீப் சிங் கூறியதாவது:
"உத்தரகாண்டில் உள்ள ராம்நகரில் உள்ளது கர்ஜியா கோயில். அங்கு இந்த முஸ்லிம் இளைஞர் இந்துப் பெண் ஒருவருடன் சென்றிருக்கிறார். அந்த இளைஞர் ஒரு முஸ்லிம் என்ற அறிந்த இந்துத்துவா கும்பல் அவரைக் கோயிலில் நுழைய அனுமதிக்கவில்லை. மேலும் அவரைச் சுற்றி நின்று தாக்கத் தொடங்கினர். நான் அந்த இடத்துக்குச் செல்வதற்குள் அவரைச் சுற்றிலும் ஆக்கிரமித்து நின்றுவிட்டனர். அவர்களிடம் போராடி அந்த இளைஞனை 15 நிமிடத்தில் மீட்டேன்.
எனக்கு அந்த இளைஞனின் பாதுகாப்பே முக்கியமாகத் தோன்றியது. இந்த இளைஞனை காப்பது என் பணி. யாருக்கும் அந்த இளைஞனைத் தாக்க உரிமை இல்லை. முஸ்லிம், இந்து அல்லது எந்த மதத்தினராக இருந்தாலும் நான் இதைத்தான் செய்திருப்பேன்” என்றார்.
கும்பலிடமிருந்து இளைஞனை மீட்ட ககன்தீப் சிங்குக்கு இணையத்தில் தற்போது ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது.