Last Updated : 20 Nov, 2023 02:49 PM

 

Published : 20 Nov 2023 02:49 PM
Last Updated : 20 Nov 2023 02:49 PM

Bigg Boss 7 Analysis: கைதட்டல்களால் கலங்கும் பூர்ணிமா இனியாவது ஆட்டத்தை புரிந்துகொள்வாரா?

எந்த சீசனிலும் இல்லாத வகையில் ஆடியன்ஸும், அவர்களின் ரெஸ்பான்ஸும் இந்த சீசனில் ஆட்டத்தின் போக்கை மாற்றி அமைப்பதில் பெரும் பங்கு வகிப்பதை மறுக்க இயலாது. இதுகுறித்து இந்தத் தொடரில் முன்பே குறிப்பிட்டிருந்தாலும், வார இறுதி எபிசோடில் ஆடியன்ஸின் கைதட்டல்களைக் கண்டு பூர்ணிமா கலங்கியது மற்றுமொரு சான்று.

49-ஆம் நாள் வார இறுதி எபிசோடில், வழக்கமாக பத்து நிமிடம் மட்டுமே காட்டப்படும் வெள்ளிக்கிழமை எபிசோட் நீண்டநேரம் சென்றது. அதற்கு காரணம், அர்ச்சனா - விசித்ரா இருவரும் சிறைக்குச் செல்ல மறுத்து கேப்டன் தினேஷிடம் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தது தான். எனினும், அவர்கள் இருவரின் குடைச்சலை மிக பக்குவமாக கையாண்டார் தினேஷ். இருவரும் அமர்ந்திருந்த இடத்துக்கு அருகிலேயே தானும் பெட்ஷீட் உள்ளிட்டவற்றை எடுத்துக் கொண்டு வந்து படுத்துக் கொண்டார். அவரைப் பின் தொடர்ந்து மாயா, பூர்ணிமா உள்பட வீட்டில் உள்ள பலரும் அங்கே வந்துவிட்டனர். இதையடுத்து, தங்களுடைய ‘ஸ்ட்ராட்டஜி’யை மாற்றிய விசித்ரா, அர்ச்சனா இருவரும் சிறைக்கு செல்ல ஒப்புக் கொண்டனர்.

தினேஷின் கேப்டன்சி குறித்து மாயா - பூர்ணிமா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது எதிர்பார்க்காத ட்விஸ்ட். எப்போதும் மாயா சொல்வதை கண்ணை மூடி நம்பும் பூர்ணிமா, இந்த முறை அவரிடம் எதிர்க் கருத்து வைத்தது மட்டுமின்றி, அங்கிருந்து எழுந்து சென்றது நல்ல முன்னேற்றம். வேறு வழியின்றி அவரை பின்னாலேயே சென்று சமாதானம் செய்தார் மாயா. பூர்ணிமா இதனை ஆரம்பத்திலேயே செய்திருந்தால் இப்போது அவர் மீது எழும் விமர்சனங்களை ஓரளவு தவிர்த்திருக்கலாம். இந்தக் கருத்து வேறுபாடு தொடர்ந்தால் இந்த இருவர் கூட்டணியில் விரைவில் பிளவு ஏற்படலாம் என்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.

வெள்ளிக்கிழமை நிகழ்வுகளையடுத்து கமல் பேசத் தொடங்கியதும், மரியாதை தொடர்பாக நிக்சன் - விசித்ரா இடையிலான பஞ்சாயத்து குறித்த பேச்சு வந்தது. இதில் மரியாதையை கேட்டு வாங்கக் கூடாது, அது தானாக கிடைக்க வேண்டும் என்றும், அதேபோல மரியாதை கொடுக்கப்பட வேண்டிய இடத்தில் கொடுக்கப்படவேண்டும் என்றும் ஏணி சின்னத்தில் ஒரு குத்து, பானை சின்னத்தில் ஒரு குத்து என்பது போல இரண்டு பக்கமும் பங்கம் வராமல் பேசி ஒருவாறு சமாளித்தார். இந்த விவகாரத்தில், அனைவர் முன்னிலையிலும், நிக்சனை பார்த்து லோக்கல் ரவுடி என்றும், பைத்தியம் பிடித்துவிட்டது என்றும் விசித்ரா சொன்னது ஏற்கத்தக்கது அல்ல. இதனை கமலும் அப்போதே கண்டித்து திருத்தினார்.

இந்த விவகாரத்துக்குப் பிறகு, தினேஷிடம் கொஞ்ச நாளைக்கு எதுவும் சண்டை போட வேண்டாம் என்று பூடகமாக விசித்ராவுக்கு சொல்லிக் கொண்டிருந்தார் அர்ச்சனா. தினேஷ் எழும்போது ஆடியன்ஸ் மத்தியில் கிடைக்கும் பலத்த கைதட்டல்களே காரணம் என்பதை புரிந்து கொள்ளமுடிகிறது. ஆனாலும், அதற்கு பிறகும் கமல் கொடுத்த ஒரு சிறிய கிரிக்கெட் தொடர்பான டாஸ்க்கில் தினேஷிடம் வம்பிழுக்கவே செய்தார்.

இந்தக் கைதட்டல் ஏற்படுத்தும் தாக்கம் 50-வது நாள் எபிசோடிலும் கூட தென்பட்டது. ‘வெற்றி நடை, வெட்டி நடை’ டாஸ்க்கில் ஒவ்வொருவரு போட்டியாளரும் தங்கள் கருத்தை முன்வைத்தனர். அடுத்து எழுந்த பூர்ணிமா, விக்ரமுக்கு வெற்றிநடையும், அர்ச்சனாவுக்கு வெட்டி நடையும் வழங்கினார். இதன் பிறகு தலையை கவிழ்ந்தபடியே இருந்த பூர்ணிமாவிடம் தானாக முன்வந்து விசாரித்தார் கமல். தொண்டையை அடைக்கும் குரலுடன் நா தழுதழுக்க பேசத் தொடங்கிய அவர், தண்ணீர் குடித்துவிட்டு வருகிறேன் என்று கூறி தன் அழுகையை அடக்க முயன்றார். இந்த ஆட்டத்தை புரிந்துகொள்ள இயலவில்லை. வாரம் முழுக்க விக்ரமை அர்ச்சனா மட்டும் தட்டினார். ஆனால் அவர் செய்வதை நீங்கள் கேட்பதில்லை என்று நேரடியாகவே கமலிடம் புகார் கூறினார். கமலின் அட்வைஸுக்குப் பிறகு விசித்ரா, அர்ச்சனா இருவருமே பூர்ணிமாவை தேடிவந்து நட்பு பாராட்ட முயன்றது ரசிக்கும்படி இருந்தது.

இந்தப் போட்டியில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஆடியன்ஸின் கைதட்டல் போட்டியாளர்களுக்குள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக படுகிறது. பிரதீப் ஆரம்பித்து வைத்தாதாலோ என்னவோ ஆரம்பம் முதலே மாயா, பூர்ணிமா உள்ளிட்டோர் தங்கள் இயல்பை மறந்து யாரை தூக்கலாம், எப்படி தூக்கலாம் என்று ‘ஸ்ட்ராட்டஜி’யை நம்பியதால் தங்கள் இயல்பை மறந்து ஆடிவருகின்றனர். இதுநாள் வரை நீங்கள் நீங்களாக இருக்கும்பட்சத்தில் அதிக ஓட்டுகளும், வரவேற்புகள் கிடைக்கும் என்ற விதியை அவர்கள் மறந்துவிட்டனர். அர்ச்சனா, விசித்ரா, தினேஷ் ஆகியோருக்கு கிடைக்கும் இந்த கைதட்டல் பூர்ணிமாவுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியதாக வார இறுதி எபிசோடில் அவரது தடுமாற்றத்துக்கு முக்கியக் காரணம். இனி வரும் நாட்களிலாவது தன்னுடைய இயல்பில் இருந்து, யாருடைய தாக்கத்துக்கு ஆளாகாமல் தனித்துவமாக ஆடினால் அதே கைதட்டல்கள் தன்க்கும் கிடைக்கும் என்பதை பூர்ணிமா புரிந்துகொள்வாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

முந்தைய அத்தியாயம்: மீண்டும் ஆக்‌ஷன் அவதாரம் எடுத்த விசித்ரா - அர்ச்சனா கூட்டணி

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x