Published : 21 Sep 2023 03:51 PM
Last Updated : 21 Sep 2023 03:51 PM

செங்கோட்டை முழக்கங்கள் 18 - ஒழுக்கமான இளைஞர்களே நமது வலிமை | 1964

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு மறைவைத் தொடர்ந்து லால் பகதூர் சாஸ்திரி பிரதமர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். தன்னுடைய உரையில் நேரு அவ்வப்போது மகாத்மா காந்தியைப் பற்றி குறிப்பிட்ட வண்ணம் இருந்தார். இதேபோல சாஸ்திரி தன்னுடைய உரையில் நேரு பற்றிய நினைவுகளை ஆழமாகப் பதிவு செய்கிறார். 1964 ஆக.15 அன்று செங்கோட்டையில் இருந்து பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி ஆற்றிய உரை - இதோ:

அன்பான சகோதர சகோதரிகளே... இங்கே நான் நிற்கிற இத்தருணத்தில், 40 ஆண்டுகளுக்கு முன்பு, தேசிய இயக்கத்தில் பணியாற்றிய போது செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றுவோம் என்று எடுத்துக் கொண்ட சூளுரையை நினைவுகூர்கிறேன். துணிச்சல் மிக்க நமது தலைவர் ஜவஹர்லால் நேரு இந்த எண்ணத்தை நமக்குள் எழுப்பினார். அவரை நாம் என்றுமே மறக்க இயலாது. சுதந்திரப் போராட்டத்தின் மிகப்பெரிய தலைவர்களில் ஒருவர் அவர். சுதந்திரம் பெற்ற பிறகு இந்தியாவை மறுநிர்மாணம் செய்யும் மாபெரும் பணியைத் தொடங்கி வைத்தார். நமது விடுதலைக்கு வலிமை சேர்ப்பதற்காக, இடையறாது 17 ஆண்டுகள் இரவும் பகலும் கடுமையாக உழைத்தார்.

நாம் நீண்ட நாட்களாய் தொலைத்து விட்ட விடுதலையை 1947 ஆகஸ்ட் 15 அன்று மீண்டும் பெற்றபோது நாடு முழுவதும் பொங்கிய மகிழ்ச்சியை உற்சாகத்தை நாம் எல்லோரும் நினைவில் வைத்துள்ளோம். 17 ஆண்டுகள்... பண்டித ஜவஹர்லால் நேரு இந்த இடத்தில் நின்று தேசியக்கொடி ஏற்றிய, மறக்க முடியாத காட்சியை நீங்கள் கண்டு ரசித்துள்ளீர்கள். கண்ணியம் மற்றும் துணிச்சலுடன் அவர் இந்த நாட்டை வழிநடத்தியதை நம்மால் மறக்கவே முடியாது. அவர் நம்முடைய வாழ்க்கையின் ஓர் அங்கம் ஆகிவிட்டார். இப்போது அவர் இல்லை. உற்சாகமூட்டும் அவரது குரல் மவுனமாகிவிட்டது. ஆனால், நாம் பாதுகாக்க வேண்டிய விலைமதிப்பற்ற பண்பாட்டை நமக்கு அவர் விட்டுச் சென்றுள்ளார். நமது நாட்டின் மகிழ்ச்சி மற்றும் வளமைக்காக, நம்மை எதிர்நோக்கும் சங்கடங்களை முறியடித்து கடுமையாக உழைத்தாக வேண்டும்.

கடந்த ஒன்றரை மாதமாக உணவுப் பிரச்சினை மிகவும் தீவிரமாக இருக்கிறது. உ.பி., பிஹார், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான் மாநிலத்தின் சில பகுதிகள்... உணவுப் பற்றாக்குறையைச் சந்தித்து வருகின்றன. நிலைமையை சரி செய்ய நம்மால் இயன்ற அனைத்தையும் செய்வோம் என்று உறுதி கூறுகிறேன். உபரியாக உள்ள பஞ்சாப் ஒரிசா மத்திய பிரதேசம், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்தும் இறக்குமதி இருப்பில் இருந்தும் உணவுப் பொருட்களை இந்தப் பகுதிகளுக்கு விரைந்து கொண்டு செல்கிறோம். உணவுப் பிரச்சினையில் இருந்து முழுமையாக இன்னமும் வெளியே வரவில்லை என்றாலும், நல்ல முன்னேற்றம் வெளிப்படையாகத் தெரிகிறது. வரும் மாதங்களில் நம்முடைய முயற்சிகளை இன்னமும் தீவிரப் படுத்த வேண்டி இருக்கும்.

நம்முடைய நுகர்வை குறைத்துக் கொண்டு, நம்முடைய சக நாட்டவர் உண்பதற்கு உதவ வேண்டும். நம்முடைய தேவைகளுக்கு அதிகமாக உணவுப் பொருட்களை சேமித்து வைக்கக் கூடாது. துணிவோடும் தொலைநோக்குப் பார்வையோடும் இந்தப் பிரச்சினையை சமாளிக்க முடியும் என்று நம்புகிறேன். அடுத்த ஓரிரு மாதங்களுக்கு ஆடம்பர விருந்துகளை தவிர்க்க வேண்டும். அமைச்சர்கள் இத்தகைய விருந்துகளில் கலந்து கொள்ள மாட்டார்கள்; விருந்துக்கு ஏற்பாடு செய்ய மாட்டார்கள். இதனால் பெரிய அளவில் உணவுப் பொருட்களை சேமிக்க இயலாதுதான்; ஆனால் இது, மக்களுக்கு ஒரு நல்ல முன்னுதாரணமாக இருக்கும்.

நம்முன் உள்ள அடிப்படைக் கேள்வி - உணவு உற்பத்தியை எவ்வாறு அதிகரிக்கப் போகிறோம் என்பதுதான். நாம் எடுக்க இருக்கும் முயற்சிகளைப் பற்றி இப்போது விரிவாக சொல்லப் போவதில்லை. உணவு உற்பத்தியாளருக்கு நியாயமான விலை தருவோம்; அவர்களுக்கு இன்னல் தராமல் உணவுப் பொருட்களைக் கொள்முதல் செய்வோம். ஓரிரு ஆண்டுகளில் நமது நிலைமை மிகப் பெரிய அளவில் முன்னேறும் என்று திடமாக நம்புகிறேன்.

நாம் எதிர்நோக்கும் பிற பிரச்சினைகளை நான் குறைத்து மதிப்பிடவில்லை. துணிமணி எண்ணெய் சர்க்கரை உள்ளிட்ட அவசிய பொருட்களின் விலை ஏறி உள்ளது. இந்த ஏற்றம் விவசாயிகளையும் பாதித்துள்ளது. கடந்த 15 ஆண்டுகளில் வளர்ச்சித் திட்டங்களுக்காக 20,000 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளோம். இதற்கு இணையாக உற்பத்தி பெருகினால் அன்றி, பணவீக்கம் விலைவாசி உயர்வு நேரிடவே செய்யும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துகிற வழிகளை கண்டறிய வேண்டும். புதிய புரட்சிகர சமுதாயத்தை உருவாக்குகிற நமது நோக்கத்தில் நாம் பின் செல்லவில்லை; ஆனால் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதில் உறுதியான நடவடிக்கை எடுத்தாக வேண்டும். தற்போதைய பொருளாதார இன்னல்களில் வெளியே வருகிற பாதையை அரசாங்கம் நிச்சயம் கண்டறியும்.

வரும் ஆண்டுகளில் அத்தியாவசிய பொருட்கள் நியாய விலையில் கிடைப்பதை உறுதி செய்கிறேன். ஆடம்பரப் பொருட்களை விலையைப் பற்றி எனக்கு அதிகம் கவலை இல்லை; உணவு துணிமணி மற்றும் அன்றாட அத்தியாவசிய பொருட்கள் சாமானியர்கள் வாங்குகிற நிலையில் இருக்க வேண்டும். ஒவ்வொரு கடையும் பொருட்களின் விலையை வெளியே எழுதி வைக்க வேண்டும்; இதனை அரசு அதிகாரிகள் கடுமையாக அமல் செய்ய வேண்டும்.

உள்நாட்டிலும் வெளியிலும் நாம் அமைதியை விரும்புகிறோம். குறிப்பாக நமது அண்டை நாட்டாருடன் நல்ல உறவில் கவனம் செலுத்துகிறோம். சீனா நமது நாட்டில் ஊடுருவியது. இந்தப்போக்கு மாறவில்லை. எனவே நம்முடைய போக்கையும் நாம் மாற்றிக் கொள்ள முடியாது. காந்தி, நேரு ஆகியோர் வகுத்த கொள்கைகளின் படி, நம்முடைய சுயமரியாதை மற்றும் கண்ணியத்திற்கு ஊறு நேரா வண்ணம், பேச்சுவார்த்தை நடத்த நாம் எப்போதும் தயாராக இருக்கிறோம். ஆனால் அணு ஆயுதத்துக்கோ வேறு எந்த அச்சுறுத்தலுக்கோ நாம் பணிந்து போக மாட்டோம்.

நமது மக்களின் வலிமை மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது; எந்த அபாயத்தையும் எதிர்கொள்கிற வல்லமை நமக்கு இருக்கிறது. (பாகிஸ்தான்) தலைவர் அயூப்கான் நட்பு குறித்துப் பேசியது மகிழ்ச்சி தருகிறது. இந்தியா பாகிஸ்தான் இடையே நல்லுறவுக்கான அவரது வேண்டுகோளை வரவேற்கிறேன். நாமும் நல்லுறவையே விரும்புகிறோம். எல்லைச் சம்பவங்கள், இந்தியாவுக்கோ பாகிஸ்தானுக்கோ நல்லதல்ல. எல்லைகளில் லட்சக் கணக்கில் மக்கள் இடம்பெயர்தல் நமக்குப் பெருமை சேர்க்காது. அடுத்த சில மாதங்களில் பேச்சுவார்த்தை நடத்துவோம்; நல்ல சூழலை ஏற்படுத்தி நல்ல தீர்வுக்கு வழி காண்போம்.

பர்மா, சிலோன், நேபாள் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளுடன் நட்புறவு கொண்டுள்ளோம். அவ்வப்போது சில பிரச்சினைகள் எழுகின்றன. சிலோன் பிரதமர் அக்டோபர் மாதத்தில் இங்கு வர நான் விடுத்த அழைப்பை ஏற்றுக் கொண்டதில் மகிழ்ச்சி. சிலோனில் உள்ள இந்திய வம்சா வழிகளின் பிரச்சினையில் தீர்வு காண முடியும் என்று நம்புகிறேன். நமது வெளியுறவு அமைச்சர் சர்தார் ஸ்வரண் சிங் பர்மா செல்ல இருக்கிறார். அந்த நாட்டுடன் தற்போது உள்ள பிரச்சினைகள் சுமுகமாகத் தீர்க்கப்படும் என்று நம்புகிறேன்.

ஜவஹர்லால் நேரு, அமைதிப் பாதையை நமக்குக் காண்பித்தார். நமது முழு வலிமையுடன் உலக அமைதிக்கு உழைப்போம். வல்லரசுகளின் குழுக்களில் அடங்காமல் சுதந்திரமாக நமது பாதையை வகுத்துக் கொள்வோம். அணி சேராமை, பரஸ்பர ஒத்துழைப்பு, காலனிய எதிர்ப்பு, இனவாத எதிர்ப்பு ஆகிய நமது கொள்கைகளில் பிடிப்புடன் இருப்போம். காலனி ஆதிக்கத்தை உறுதியாக எதிர்க்கிறோம். போர்ச்சுக்கீசிய காலனி ஆதிக்கம் முடிவுக்கு வரவேண்டும். தென் ஆப்ரிக்காவிலோ அல்லது வேறு எங்குமோ, இனவாத கொள்கைகளை, சகித்துக் கொள்ள முடியாது. ஆக்ரோஷமாக அல்ல; கண்ணியத்துடன் சுயக் கட்டுப்பாட்டுடன் - வாய்மைக்காக, நீதிக்காக உறுதியுடன் நிற்கிறோம்.

நம் நாட்டில் இருந்து வறுமையை விரட்டினால் அன்றி, உள்நாட்டில் வலுவாக இருந்தால் அன்றி, உலகில் நாம் மரியாதை ஈட்ட முடியாது. மதவாத, மண்டலவாத, மொழிவாதப் பிணக்குகள் நம்முடைய தேசத்தை பலவீனம் ஆக்குகிறது. தேச ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும். எனவே நாம் எல்லோரும் தேச ஒற்றுமைக்கு உழைத்து, சமூகப் புரட்சியின் வழியே நமது நாட்டை வலுப்படுத்த வேண்டும்.

நிறைவாக நமது நாட்டின் வலிமை, நம் நாட்டின் வளமையில் மட்டுமே இல்லை. காந்தி, நேரு, தாகூர் போன்ற மாமனிதர்களால், நாடு வலிமை பெறுகிறது; ஒழுக்கம் மற்றும் தூய அறநெறிகளால் வலுவடைகிறது. ஆகையால் நமது இளைஞர்கள் ஒழுங்கு, நன்னடத்தை, தேசத்தின் ஒற்றுமை மற்றும் முன்னேற்றத்திற்கான உழைப்பை உள்வாங்கிக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கிறேன். இந்த உணர்வுடன் நமது இளம் தலைமுறை பணியாற்றினால், எனக்கு சிறிதும் ஐயமில்லை, நமது நாடு ஒளிவிட்டுப் பிரகாசிக்கும்.

தொடர்வோம்

முந்தைய அத்தியாயம் > செங்கோட்டை முழக்கங்கள் 17 - நமது கடமை... நாட்டைக் காத்தல் | 1963

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x