செங்கோட்டை முழக்கங்கள் - ஓர் அறிமுகம் | புதிய தொடர்

செங்கோட்டை
செங்கோட்டை
Updated on
2 min read

இதோ... ஆங்கிலேயக் கொடி கீழே இறங்குகிறது. இந்தியாவின் மூவர்ணக் கொடி மேலே எழுகிறது. முழு இறையாண்மை கொண்ட சுதந்திர நாடானது இந்தியா.

இதோ.... நகரம், கிராமம், படித்தவர், படிக்காதவர், சாதி, மதம், இனம், மொழி என்கிற வேறுபாடு இல்லாமல் நாட்டு மக்கள் அனைவரும் தெருக்களில் இறங்கி ஆடிப் பாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்கள். சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார்...

“நீண்ட காலம் முன்பு, விதியுடன் நாம் ஒரு சந்திப்பு நடத்தினோம். இதோ இப்போது… நமது உறுதிமொழியை நாம் புதுப்பித்துக் கொள்கிறோம். உயிர்த் துடிப்புடன் சுதந்திரமாய்க் கண் விழிக்கிறது இந்தியா. வரலாற்றில் எப்போதோ ஒருமுறை தோன்றும் தருணம் – இதோ நமக்காக – மலர்ந்து இருக்கிறது...”

இதன் பிறகு அநேகமாக ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 15 சுதந்திர நாள் அன்று இந்தியப் பிரதமர்கள் டெல்லி செங்கோட்டையில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுவது ஏற்றுக் கொள்ளப்பட்ட மரபு ஆகிவிட்டது.

1947 தொடங்கி கடந்த 76 ஆண்டுகளில் வெவ்வேறு அரசியல் பின்னணி கொண்ட 14 பிரதமர்களை நாடு கண்டுவிட்டது. இவர்கள் ஆற்றிய சுதந்திர தின உரை வழியே சுதந்திர இந்தியாவின் 76 ஆண்டு காலப் பயணத்தை எடை போட இயலுமா? நமது வெற்றிகள், தோல்விகள், சாதனைகள், சரிவுகள் குறித்த ஆண்டறிக்கையாக சுதந்திர தின உரையைக் கொள்ள முடியுமா? நாட்டின் வளர்ச்சிக்கான வழிகாட்டுக் குறிப்பேடாக இந்த உரைகளைச் சுட்டிக் காட்ட இயலுமா?

உண்மையில், சுதந்திர தின உரைகள் மேற்சொன்ன எல்லாமாகவும் காலக் கண்ணாடியின் பிரதிபலிப்பாகத் திகழ்கின்றன. சுதந்திர இந்தியாவின் பிரதமர்கள், விதி விலக்கு இல்லாமல் எல்லாரும், ஏதோ ஒரு வகையில் நாட்டு வளர்ச்சிக்கு முக்கியப் பங்கு ஆற்றி இருக்கிறார்கள். நாட்டு மக்களை ஒன்று படுத்துவதில், அனைவரையும் அரவணைத்துச் செல்வதில், எல்லாரையும் உள்ளடக்கிய ஒட்டு மொத்த முன்னேற்றத்தை அடைய முயற்சித்தலில் - ஒவ்வொரு பிரதமரும் மிகுந்த அக்கறை கொண்டு இருந்ததை சுதந்திர தின உரைகள் உணர்த்துகின்றன.

‘உண்மையாகவா..? அப்படியா இருக்கிறது..?’ என்று கேட்கத் தோன்றுகிறதா? உண்மையில் இந்த உரைகள் கடந்த காலத்தின் உரைகல் என்று சொல்ல முடியுமா..?

ஏன் இந்த ஐயம்..? அப்படி என்னதான் உரையாற்றி இருக்கிறார்கள் என்று பார்த்துவிட்டால் போகிறது. அதற்கு முன்பாக மேலும் சில உண்மைகளை மனதில் கொள்வோம்.

1947-இல் இந்திய அரசியல் அமைப்பு முறை எப்படி இருக்கும் என்று தீர்மானிக்கப்படவில்லை. 1949 நவம்பர் 26 அன்று நம்முடைய அரசமைப்பு சட்டத்தை ஏற்றுக் கொண்டு நடைமுறைப்படுத்தத் தொடங்க ஒருமனதாக ஒப்புக் கொண்டபோதுதான் ‘ஜனநாயகக் குடியரசு நாடு’ என்கிற ஆகச் சிறந்த அடையாளத்தை நாம் பெற்றோம்.

1952-இல் தான் முதல் பொதுத் தேர்தலை நாடு சந்தித்தது. சுதந்திரம் பெற்ற முதல் ஆண்டிலேயே தேசத் தந்தை மகாத்மா காந்தியைப் பறிகொடுத்துவிடோம். அடுத்த 30 ஆண்டுகளுக்கு உள்ளாக, சுதந்திரத்துக்காகப் பாடுபட்ட தன்னலமற்ற பெரிய தலைவர்கள் அனைவரையும் இழந்து விட்டோம்.

தியாகம், தன்னல மறுப்பு, அர்ப்பணிப்புணர்வு, பொதுநல சிந்தனை, தொலை நோக்குப் பார்வை, எல்லாருக்குமான பரந்துபட்ட திட்டங்கள் வெகுவாகக் குறைந்து விட்டதாய்ப் பலரும் சொல்லக் கேட்கிறோம்; நம்பவும் செய்கிறோம். ஆனால், பிரதமராக வருகிறவர்கள், அரசியலுக்கு அப்பாற்பட்டு, மேற்சொன்ன குணநலன்கள் அனைத்தும் கொண்டு இருப்பதாகத்தான் சுதந்திர தின உரைகள் உணர்த்துகின்றன.

ஒரு கேள்வி எழுகிறது.

‘உரைகள் இருக்கட்டும்’. ‘செயல்கள்’ எப்படி..?’

நியாயமான கேள்வி. இந்த அம்சத்தை நாம் முழுமையாக ஆழமாக ஆய்வு செய்ய இங்கே இடமில்லை. ஆனாலும் இயன்றவரை ஆங்காங்கே கோடிட்டுக் காட்டுவது தவறில்லை என்று தோன்றுகிறது. ‘போகிற போக்கில்’ தொட்டுவிட்டுச் செல்லலாம். ஆனால் அதில், கட்சி சார்புடைய அரசியல் கோணம் இல்லாது நடுநிலைப் பார்வை இருப்பதை உறுதி செய்து கொள்வோம்.

இனி... வாருங்கள். இந்தியப் பிரதமர்கள் ஆற்றிய சுதந்திர தின உரைகளை ஆண்டு வாரியாகப் பார்த்து விடுவோம்.

முதலில் ஒரு செய்தி – 76 ஆண்டு சுதந்திர தின உரைகள் மீதான இந்தப் பார்வை, இந்திய மொழிகளில் இதுவரை யாரும் செய்திராத முயற்சி. இந்தப் பெருமையுடன் உள்ளே நுழைவோமா..? முதலில்… வேறு யார்...

பிரதமர்: ஜவஹர்லால் நேரு.
நாள்: 15ஆகஸ்ட் 1947.
நமது பயணம் இப்படித்தான் தொடங்கியது.

(தொடர்வோம்)

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in