

பள்ளிக்கூடத்துக்குப் புத்தகப் பையை எடுத்துசெல்லும் வயதில், ‘சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே..’, ‘குச்சிகுச்சி ராக்கம்மா..’ போன்ற பாடல்களின் மூலம் தனது மழலைக் குரலை தமிழ் சினிமாவில் பதியவைத்தவர் ஜி.வி. பிரகாஷ். இசைப் புயல் ஏ.ஆர். ரஹ்மானின் உறவினர் என்பதால் இவருடைய திரைப் பிரவேசம் சற்று எளிதாகவே அமைந்தது.
19 வயதிலேயே இசையமைப்பாளராக சினிமாவில் அரங்கேற்றம் செய்தார் ஜி.வி. பிரகாஷ். அறிமுகமான ‘வெயில்’ படத்தில் இடம்பெற்ற ‘வெயிலோடு விளையாடி.. வெயிலோடு உறவாடி..’, ‘உருகுதே மருகுதே..’ போன்ற பாடல்கள் மூலம் டேக் ஆஃப் ஆனார். இதைத் தொடர்ந்து நல்ல ஹிட் பாடல்கள் அவருடைய இசையில் வரத் தொடங்கின. ‘கிரீடம்’ படத்தில் இடம்பெற்ற ‘அக்கம் பக்கம் யாருமில்லா..’ பாடல் இதயத்தை வருடியது. இது இவர் இசையமைப்பில் மூன்றாவது படம்.
தமிழ் பாடல்களில் ‘ராப்’ இசையைப் புத்தாயிரத்துக்குப் பிறகும் தொடர்ந்ததற்கு பொல்லாதவன் படத்தில் இடம்பெற்ற ’ எங்கேயும் எப்போதும்’ ரீமிக்ஸ் பாடல் வழிவகுத்தது. இதே படத்தில் இடம்பெற்ற ‘படிச்சுப் பார்த்தேன் ஏறவில்ல..’; ‘தெறி’ படத்தில் ‘ஜித்து ஜில்லாடி’ போன்ற பாடல்கள் இளசுகளை ஆட்டம் போட வைத்தன. இந்தப் பாடல்களை வைத்து ரீல்ஸ் செய்யாதவர்களே இல்லை எனும் அளவுக்கு அப்பாடல்கள் பிரபலமாயின.
தனுஷுக்கு தேசிய விருதைப் பெற்று தந்த ’ஆடுகளம்’ படத்துக்கு ஜி.வி. பிரகாஷ்தான் இசையமைத்தார். இப்படத்தில் இடம் பெற்ற ‘ஒத்த சொல்லால..’, ‘யாத்தே யாத்தே என்னாச்சோ..’ போன்ற பாடல்கள் எல்லாத் தரப்பினரையும் முணுமுணுக்க வைத்தது. இதேபோல ‘பேச்சிலர்’ படத்தில் இடம்பெற்ற ‘பச்சிகளாம் அம்மா பறவைக்கெல்லாம் தத்தினம் தை..’ பாடல் இளைஞர்களை குத்தாட்டம் போட வைத்தது. வேட்டியுடன் நடனமாடும் டிரெண்டிங் கலாச்சாரத்துக்கு இப்பாடல் வழிவகுத்தது.
ஜி.வி.பி.யின் மெலடிப் பாடல்களுக்கென்றே தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. அந்த அளவுக்குப் பல மெலடிப் பாடல்களுக்கு உயிர் கொடுத்திருக்கிறார். ‘மயக்கமென்ன’ படத்தில் இடம்பெற்ற ‘பிறை தேடும் இரவிலே உயிரே’; ‘தெறி’ படத்தில் ‘உன்னாலே..;, இது என்ன மாயம்’ படத்தில் ‘இருக்கிறாய் இல்லாமலும் இருக்கிறாய்’ போன்ற பாடல்கள் இனிய இரவுகளை வருடின. இப்பாடல்கள் இளசுகளின் காதல் மயக்கத்துக்கு ஒருவித மருந்தாகவும் ஆயின.
அதுமட்டுமல்ல, கண்களைக் குளமாக்கும் பாடல்கள் பலவும் ஜி.வி.பிரகாஷின் இசையில் வரிசைக் கட்டுகின்றன. ‘சூரரைப் போற்று’ படத்தில் இடம்பெற்ற ‘கையிலே ஆகாசம்..’,’அசுரன்’ படத்தில் இடம்பெற்ற ‘எள்ளு வய பூக்கயிலே..’ போன்ற பாடல்களை கேட்டு மனங்கள் கரைந்து உருகும்.
இந்தக் காலத் திரைப்படங்களில் தொடக்கம் முதல் இறுதி வரை ஒலிக்கும் ஒரே மாதிரியான இசைக்கோவைகள் படத்தின் அடையாளமாகவும் ஆகிவிடுகின்றன. ‘தெறி’ படத்தை நினைத்தாலே ‘தெர்றி...’ என்று ஒலிக்கும் இசை ஓர் உதாரணம். இதுபோல ஏராளமான படங்களுக்கு ஜி.வி.பி.யின் பின்னணி இசை பலமாக இருந்திருக்கிறது. இந்தப் பின்னணி இசையைத்தான் ஜீவிபியின் மாஸ்டர் பீஸ் என்று பெயருக்குக் காரணமானது. ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் பின்னணி இசையாகப் பலவிதமான ட்ரம்ஸ் சத்தங்களும்; ‘பொல்லாதவன்’ படத்தில் வரும் பின்னணி இசையான விசில் சத்தமும் இளைஞர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றன. இந்தப் பின்னணி இசையை மட்டுமே மொபைல் போன் ரிங் டோன்களாக வைத்த இளைஞர்கள் ஏராளம்.
ஜிவிபியின் இசையில் எல்லார் மனதையும் கொள்ளையடித்த படம் என்றால் தாராளமாக காதல் காவியமான ‘மதராசப்பட்டினம்’ படத்தைச் சொல்லலாம். இப்படத்தில் வரும் மனதை வருடும் பின்னணி இசையும், ‘பூக்கள் தூவும் தருணம்’, ‘ஆருயிரே..’, ’வாம்மா துரையம்மா’ போன்ற பாடல்கள் கேட்க கேட்க மனதுக்குள் புத்துணர்ச்சியைத் தரும். ‘அங்காடித்தெரு’ படத்தில் இடம்பெற்ற ‘அவள் அப்படி ஒன்றும் அழகில்லை..’, ‘கதைகளைப் பேசும்..’ போன்ற பாடல்களும் ஜிவிபியின் பெயரைச் சொல்லும்.
ஜி.வி. பிரகாஷ் இன்று நடிகராகப் பரிணமித்தாலும், அவரை இசையமைப்பாளராகத் தனித்த அடையாளம் காட்டுவது அவருடைய பாடல்கள்தாம்!
ஜூன் 13: ஜி.வி. பிரகாஷ் பிறந்த நாள்