கடகம், சிம்மம், கன்னி: வார பலன்கள் @ ஏப்.9 - 15

கடகம், சிம்மம், கன்னி: வார பலன்கள் @ ஏப்.9 - 15
Updated on
3 min read
கடகம்:
(புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) கிரகநிலை- தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன் - அஷ்டம ஸ்தானத்தில் ராகு - பாக்கிய ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன், சனி - தொழில் ஸ்தானத்தில் சுக்கிரன் - அயன சயன போக ஸ்தானத்தில் குரு என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: இந்த வாரம் தடைகள் நீங்கும். எதிர்ப்புகள் விலகும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். பண வரத்து எதிர் பார்த்தது போல் இருக்கும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கலாம். பாதியில் நின்ற காரியங்களை தொடர்ந்து செய்து முடிப்பீர்கள். திடீர் குழப்பம் ஏற்படலாம். தீ, எந்திரம் ஆகியவற்றை கையாளும்போது கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும்.

சரக்குகளை அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் கவனத்துடன் செயலாற்றுவது நல்லது. குடும்பத்தில் சிறு சண்டைகள் உண்டாகலாம். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வது நன்மை தரும்.

பெண்களுக்கு மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். சமையல் செய்யும் போதும் மின் சாதனங்களை இயக்கும் போதும் கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வி பற்றிய மனக் கவலை ஏற்பட்டு நீங்கும். பெற்றோர், ஆசிரியர் ஆலோசனை கைகொடுக்கும்.

புனர் பூசம் 4ம் பாதம்: இந்த வாரம் உங்களின் முன் கோபத்தைக் குறைத்துக்கொண்டு எதிலும் சிந்தித்துச் செயல்படுவதும், பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதும் நல்லது. எந்தவொரு காரியத்திலும் அதன் முழுப் பலனை அடைய முடியாமல் தடைகள் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலிலும் வீண் விரயங்களைச் சந்திப்பீர்கள்.

பூசம்: இந்த வாரம் தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்கும். கூட்டாளிகள் மற்றும் நண்பர்களால் ஓரளவுக்கு அனுகூலப்பலனை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரியிடம் வீணான கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும் என்பதால் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது.

ஆயில்யம்: இந்த வாரம் உத்தியோக உயர்வுகள், இடமாற்றங்கள் யாவும் தடைகளுக்குப் பின் கிடைக்கும். அரசியல்வாதிகள் மக்களின் தேவையறிந்து செயல்பட்டால் மட்டுமே பதவிகளைக் காப்பாற்றிக்கொள்ள முடியும். தராசுத்தட்டில் இட்ட எடைக் கல்லைப் போல ஏற்ற இறக்கமான பலன்களை அடைவீர்கள். பண வரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக அமைந்து குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். செலவுகளும் கட்டுக் கடங்கியிருப்பதால் கடந்த கால கடன் பிரச்சினைகள் படிப்படியாகக் குறையும்.

பரிகாரம்: மேல் மருவத்தூர் ஆதி பரா சக்தியை வணங்க துன்பங்கள் தீரும். மனக் கவலை அகலும்.

சிம்மம்:
(மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்) கிரகநிலை- ராசியில் கேது - பஞ்சம பூர்வ ஸ்தானத்தில் சந்திரன் - களத்திர ஸ்தானத்தில் ராகு - அஷ்டம ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன், சனி - பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரன் - லாப ஸ்தானத்தில் குரு என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: இந்த வாரம் சுபச் செலவு அதிகரிக்கும். பயணங்கள் மூலம் வீண் அலைச்சலும், காரிய தாமதமும் உண்டாகும். புதிய நட்புகள் கிடைக்கும். எடுத்த காரியங்கள் கை கூடும். அடுத்தவர் செயல்களுக்கு பொறுப்பேற்காமல் தவிர்ப்பது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும். கடன் பிரச்சனைகள் கட்டுக்குள் இருக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் செலவும் உண்டாகும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களின் செய்கையால் மன உளைச்சல் ஏற்படலாம். கணவன், மனைவிக்கு இடையே வாக்கு வாதங்கள் உண்டாகாமல் தவிர்ப்பது நன்மை தரும். பிள்ளைகளுடன் சகஜமாக பேசி வருவது நல்லது.

அவர்கள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். பெண்களுக்கு வீண் அலைச்சலும் காரிய தாமதமும் ஏற்படலாம். மற்றவர்களுக்காக பொறுப்புக்களை ஏற்பதை தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் காணப்படும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

மகம்: இந்த வாரம் பண விஷயத்தில் பிறருக்கு முன்ஜாமீன் கொடுப்பதைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்திலும் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். சுப காரிய முயற்சிகள் சில தடைகளுக்குப் பின் நிறைவேறும். தேவையற்ற அலைச்சல்கள் குறையும். உற்றார்- உறவினர்களும் ஓரளவுக்கு ஒத்துழைப்பாக இருப்பார்கள்.

பூரம்: இந்த வாரம் தொழில், வியாபாரத்திலும் அவ்வளவாக ஏற்றமான பலனை எதிர்பார்க்க முடியாது என்றாலும் தேக்க நிலை அடையாது சமாளிப்பீர்கள். உத்தியோகஸ்தர்களும் எதிர்பாராத இடமாற்றங்களால் அவதிக்குள்ளாவார்கள். துர்க்கையம்மனை வழிபடுவது நல்லது.

உத்திரம் 1ம் பாதம்: இந்த வாரம் மாணவர்கள் கல்வியில் அதிகப்படியான கவனத்தைச் செலுத்தினால் மட்டுமே நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும். கலைஞர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்வது நல்லது. அரசியல்வாதிகள் உடனிருப்பவர்களிடம் பேச்சைக் குறைத்துக்கொள்வது உத்தமம்.

பரிகாரம்: ஞாயிற்றுக் கிழமையில் சிவனை வில்வ அர்ச்சனை செய்து வணங்க எதிர்ப்புகள் விலகும். மன குழப்பம் நீங்கும். கடன் பிரச்சனை குறையும்.

கன்னி:
(உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2, பாதங்கள்) கிரகநிலை- சுக ஸ்தானத்தில் சந்திரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் ராகு - களத்திர ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன், சனி - அஷ்டம ஸ்தானத்தில் சுக்கிரன் - தொழில் ஸ்தானத்தில் குரு - அயன சயன போக ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: இந்த வாரம் பண வரத்து அதிகரிக்கும். எதையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செய்வது நல்லது. காரிய தடைகள் விலகும். பயணங்கள் மூலம் நன்மையை தரும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். தொலைதூரத்தில் இருந்து வரும் தகவல்கள் நல்லதாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நிலை மாறி முன்னேற்றம் உண்டாகும். லாபம் அதிகரிக்கும். திறமையான பணியாளர்கள் அமைவார்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு சாதகமான பலன் காண்பார்கள். குடும்பத்தில் இதமான சூழ்நிலை நிலவும். உங்களது கருத்துக்களுக்கு மாற்று கருத்துக்கள் இருக்காது. கணவன், மனைவிக்கு இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். குழந்தைகளின் செயல் பாடுகள் மன திருப்தியை தரும்.

வேடிக்கை வினோதங்களை கண்டு களிக்கும் சூழ்நிலை ஏற்படலாம். பெண்களுக்கு தொலைதூர தகவல்கள் மன மகிழ்ச்சியை தருவதாக இருக்கும். பயணங்களால் சாதகமான பலன் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்கள் சாதகமாக முடியும். திறமை வெளிப்படும்.

உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: இந்த வாரம் எதிலும் எதிர்நீச்சல் போட்டே முன்னேற வேண்டி இருக்கும். உடல்நிலையில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றும். அலைச்சல்கள் அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ளவர்களும் சாதகமின்றியே இருப்பார்கள். மனைவி வழியில் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும்.

அஸ்தம்: இந்த வாரம் பொருளாதார நிலையில் சங்கடங்களையே சந்திப்பீர்கள். சிலருக்குக் கேட்ட இடத்தில் கடன் தொகை கிடைப்பதில் கூட தடைகள் ஏற்படும். குடும்பத்திலும் வீண் வாக்கு வாதங்களும், ஒற்றுமைக் குறைவுகளும் ஏற்படும். உற்றார்- உறவினர்களிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும்.

சித்திரை 1, 2, பாதங்கள்: இந்த வாரம் அசையா சொத்து வகையில் வீண் விரயங்களை எதிர்கொள்வீர்கள். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் சிக்கல்கள் உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு லாபமற்ற நிலைகளால் அபிவிருத்திக் குறையும். கூட்டாளிகளும் ஒற்றுமையின்றி செயல்படுவார்கள்.

பரிகாரம்: ஸ்ரீபெரும்புதூர் ஆதி கேசவ பெருமாளை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். குறைகள் நீங்கும்.

<div class="paragraphs"><p>இந்த வார கிரகங்களின் நிலை</p></div>

இந்த வார கிரகங்களின் நிலை

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

கடகம், சிம்மம், கன்னி: வார பலன்கள் @ ஏப்.9 - 15
அண்ணாநகர் தொகுதியில் வாக்குகளை அள்ளப்போகும் வேட்பாளர் யார்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in