

மேஷம்: (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை- தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு(வ) - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் - லாப ஸ்தானத்தில் சனி, ராகு என வலம் வருகிறார்கள்.
பலன்கள்: கம்பீரமான தோற்றம் கொண்ட மேஷ ராசி அன்பர்களே நீங்கள் செவ்வாயை ராசிநாதனாகக் கொண்டவர்கள். இந்த ஆண்டு வீடு மனை வாங்கும் யோகம் உண்டாகும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி உங்கள் திறமையை வெளிக்கொண்டு வருவீர்கள். உங்களின் திறமையை அனைவரும் பாராட்டுவார்கள்.
நீங்கள் செய்யும் வேலையில் புதிய நுட்பங்களை பயன்படுத்தி அதன்மூலம் பாராட்டுகளை பெறுவீர்கள். உடல் நலனில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். முடிவுகள் தெளிவாக இருக்கும். செய்யும் செயலில் வேகம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீர்ந்து சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். சந்தான பாக்கியம் இந்த வருடம் கண்டிப்பாக கிடைக்கும்.
உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் சாதகமான போக்கு காணப்படும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உடன் பணி புரிபவர்கள் உங்களுக்கு அதிக ஒத்துழைப்பு கொடுப்பார்கள். மேலதிகாரிகளும் உங்களுக்கு சாதகமாகவே நடந்து கொள்வார்கள்.
தொழிலில் மேன்மை உண்டாகும். தன லாபம் உயரவும் வாய்ப்புண்டு. வியாபாரிகள் கணிசமான லாபம் பெற இயலும். மகசூல், கொடுக்கல் - வாங்கல் போன்றவற்றில் குறை உண்டாகாது. அதிகச் செலவுக்கு இடமுண்டு. ஆனால் அதனை சாமர்த்தியமாக சமாளிக்க வழி உண்டாகும்.
அரசியல்வாதிகளுக்கு, ஒரு முக்கியப் பிரச்சினையில் புத்திசாலித்தனமாக முடிவெடுக்க வேண்டிய கட்டம் உருவாகலாம். அரசாங்க காரியங்களில் எந்த ஆதாயத்தையும் முயற்சி செய்து பெறலாம்.
கலைத்துறை சம்பந்தப்பட்ட பணிகள் செவ்வனே நிறைவேறத்தடையில்லை. பொதுவாக அந்தஸ்து சிறப்பாக இருக்கும். பொருளாதார சுபிட்சம் நன்றாக இருக்கும்.
பெண்களுக்கு உங்களுடைய வாழ்வு உன்னதமாக அமைய இந்த காலகட்டம் உதவும். குடும்பத்தில் திருமணம் போன்ற நற்காரியங்களும் நடக்க இடமுண்டு.
மாணவர்கள் புகழுடன் பொருளும் பெறுவர். வித்தைகளில் தேர்ச்சி உண்டாகும். தொலை தூரச் செய்தி நற்செய்தியாக இருக்கும்.
அஸ்வினி: இந்த ஆண்டு தகுதி வாய்ந்தவர்கள் பதவி உயர்வு பெற வாய்ப்புண்டு. புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். உங்கள் பணி சரி வர இருந்து வரும். அன்றாட காரியங்கள் செவ்வனே நடைபெறும். கற்றறிந்த மேலோருக்குக் குறை ஏதும் உண்டாகாது.
உங்களுடைய உயர்ந்த குணத்தால் அந்தஸ்து சிறப்பாக அமையும். தேவையில்லாமல் மனதை குழப்பிக்கொள்ள வேண்டாம். திருமணம் போன்ற நற்காரியங்களும் நடக்க வாய்ப்புண்டு. பெரியோர் நல்லாசியை விரும்பிப்பெறுங்கள். சத்ருவினால் ஓரிரு சங்கடங்கள் உருவாகலாம். உடல் நலமும் சற்று பாதிக்கப்படலாம்.
பரணி: இந்த ஆண்டு வியாபாரிகளுக்கு அளவான லாபம் நிச்சயம் உண்டு. பொருளாதார சுபிட்சம் குறைவுபடாது. பெரிய நிறுவன நிர்வாகிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் ஒரு பிரச்சினை குறித்து சற்று மனத்தாங்கல் ஏற்படலாம். எனினும் அது தானாகவே சரியாகிவிடும். எந்தவிதமான குறுக்கு வழியிலும் நிலைமையைச் சமாளிக்க முயலாதீர்கள். பெரியோர் ஆலோசனையைக் கேட்டு நடந்து கொள்வது அவசியம். அன்றாடப் பிரச்சினைகள் தடங்கலின்றி நிறைவேற வாய்ப்பு கிடைக்கும். திட்டமிட்டு செலவு செய்தால் பணக் கஷ்டத்தைத் தவிர்க்கலாம்.
கார்த்திகை 1ம் பாதம்: இந்த ஆண்டு சங்கடங்கள் சற்றுமட்டுப்பட வாய்ப்புண்டு. பொருளாதார சுபிட்சம் பாதிக்கப்படாது. அன்றாட வாழ்வு நலமுடன் நிகழத்தடையிருக்காது. தொழிலிலோ, வியாபாரத்திலோ புது முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். வியாபாரிகளுக்குப் ஏதேனும் வில்லங்கம் ஏற்படலாம். கவனமுடன் இருப்பது அவசியம். உடல் நலம் பாதிக்கப்படாமல் இருக்கும். உத்தியோகத்தில் உள்ளோர் மிக்கப் பொறுப்புடன் பணியாற்ற வேண்டிய நேரம் இது. இல்லையேல் பழிச்சொல் வர நேரலாம். பெரியோர் சகவாசத்தை விரும்பிப்பெறுங்கள். தெய்வப் பணி, தருமப் பணிகளில் ஈடுபட்டுவாருங்கள். தொல்லை குறையும்.
பரிகாரம்: முடிந்த வரை செவ்வாய்கிழமை தோறும் அருகில் இருக்கும் முருகன் கோவிலுக்குச் சென்று வலம் வரவும் | சிறப்பு பரிகாரம்: சனிக்கிழமை தோறும் முருகனுக்கு செவ்வரளிப் பூவால் மாலை கட்டி அர்ப்பணிக்கவும் | அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடக்கு | செல்ல வேண்டிய தலம்: திருச்செந்தூர், திருத்தணி, விராலிமலை | சொல்ல வேண்டிய மந்திரம் - “ஓம் ஷட் ஷண்முகாய நம:” |
இந்த ஆண்டு மேஷ ராசிக்கான கிரகங்களின் நிலை
ரிஷபம்: (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்) கிரகநிலை- ராசியில் சந்திரன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு(வ) - சுக ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் - தொழில் ஸ்தானத்தில் சனி, ராகு என வலம் வருகிறார்கள்.
பலன்கள்: கொடுத்த வாக்கிற்கு முக்கியத்துவம் அளிக்கும் ரிஷப ராசி அன்பர்களே நீங்கள் சுக்கிரனை ராசிநாதனாகக் கொண்டவர்கள். இந்த ஆண்டு புதிய முயற்சிகள் எதிர்பார்த்தபடி நடக்கும். கவலை வேண்டாம். கற்றறிந்த மேலோர் கவுரவிக்கப்படுவர். தாயாரின் நலத்தில் கவனம் செலுத்த வேண்டிய நிலை உண்டாகும். பொதுவாக எவ்வளவு தான் சங்கடங்கள் ஏற்படுமானாலும் உங்கள் அந்தஸ்துக்கும் குந்தகம் ஏற்படாது. எந்தச் சங்கடங்களையும் சமாளிக்கும் ஆற்றலுக்கும் பஞ்சமிராது. பணக் கஷ்டம் உருவாக இடமில்லை. ஆனால், சிலர் விஷயத்தில் மனக்கஷ்டம் உருவாக இடமுண்டு. எனவே கவனமுடன் பேசுவது அவசியம். திடீர்ப் பொருள் வரவுக்கு வாய்ப்புண்டு. தெய்வ பலம் சிறப்பாக இருப்பதால் எல்லாமே சீராக அமைய வாய்ப்புண்டு. பிள்ளைகள் நலனில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
உத்தியோகஸ்தர்களுக்கு பணி நிரந்தரம் கிடைக்கவும் இடமுண்டு. வேலை இல்லாதோருக்கு அதற்கான வேளை கனிந்து வரும். திடீர்ப் பொருள் வரவுக்கும் வாய்ப்புண்டு. அதே போல் திடீர்ச் செலவுக்கும் இடமுண்டு.
வியாபாரிகளுக்கு அலைச்சல் தவிர்க்க முடியாமற் போகலாம். நல்ல லாபம் பெறுவதற்கு அரும்பாடு படவேண்டியிருக்கும். இதனால் அதிருப்தி ஏற்படலாம். கவலை வேண்டாம். உங்களின் விடா முயற்சியால் நீங்கள் உங்கள் வெற்றியை அடைவீர்கள். புதிய வாடிக்கையாளர்களும் கிடைப்பார்கள். இதனால் உங்கள் தொழில் விரிவடையும்.
அரசியல்வாதிகளுக்கு முன்விரோதம் காரணமாக சிறு தொந்தரவுகள் உண்டாகவும் இடமுண்டு. அரசாங்க விரோதம் ஏற்படாமல் பார்த்துக் கொள்வதும் அவசியம். நேர்மையாகவும், கவனமுடனும் நடந்து கொள்வதன் மூலம் இந்த பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.
கலைத்துறை சுறுசுறுப்படையும். தினசரி பணிகளை மட்டும் செய்து வாருங்கள். அன்றாட வாழ்வு நலம் பாதிக்காது. பிரச்சினை ஏதும் உருவாக இடமில்லை. ஓரிரு நன்மைகள் உண்டாக வழியுண்டு. மற்றப்படிக்குப் பலவிதமான சங்கடங்களை எதிர்நோக்க வேண்டிய காலம் இது.
பெண்கள் 'தானுண்டு, தன் வேலை உண்டு' என்றிருப்பது அவசியம். தாயாரின் நலனில் அக்கறைச் செலுத்த வேண்டியது அவசியம். தங்களுடைய நற்பெயரைக் காத்துக் கொள்வதில் மிக்க கவனமாக இருக்க வேண்டும். இல்லையேல் பழிச் சொல்லுக்கு ஆளாக வேண்டிய நிலை உண்டாகலாம்.
மாணவர்கள் கல்விப்பயனைச் சீராகப்பெறத் தடையில்லை. பொறியியல் துறை, விவசாயத்துறை போன்றவற்றில் புதிய முயற்சிகள் இப்போது கைகொடுக்கும்.
கார்த்திகை 2, 3, 4 பாதங்கள்: இந்த ஆண்டு உங்களுடைய வேலைகள் தடங்கலின்றி நடக்க வாய்ப்புண்டு. முதலாளி-தொழிலாளி உறவு சலசலப்புக்குள்ளாகலாம். விவசாயிகளுக்கு கஷ்டம் ஏதும் உருவாகாது. பயணத்தைத் தவிர்ப்பது நல்லது. விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் சிறு சிறு கஷ்டங்கள் எந்த உருவிலாவது வரலாம். சமாளித்து விடுவீர்கள். கவலை வேண்டாம். கற்றறிந்த மேலோருக்கு உரிய கவுரவம் கிடைக்கத் தடையிருக்காது. காதல் விவகாரம் தற்போது வேண்டாம். பயணத்தைத் தவிர்ப்பது நல்லது. கடிதப் போக்கு வரத்தில் கண்ணியம் காப்பது அவசியம்.
ரோகிணி: இந்த ஆண்டு பல கஷ்டங்களும் உண்டாகும். ஆனால் இந்த கஷ்டங்களை குரு அருளால் நீங்கள் இலகுவாக சமாளிக்கவும் இயலும். கொடுக்கல் - வாங்கலில் நிதானம் இருக்கட்டும். விவசாயிகளுக்கு முன்விரோதம் காரணமாக ஒரு வழக்கு ஏற்படலாம். இதனைச் சமாதான முறையில் தீர்த்துக் கொள்ள முயலுங்கள். வியாபாரிகளுக்கு அளவான லாபம் உண்டு. பொறியியல், விஞ்ஞானம் கணிதம் போன்ற துறைகளில் உள்ளோருக்கு உற்சாகம் தரக்கூடிய நேரமாக இருக்கும். கலைத்துறையில் சாதகமான போக்கு காணப்படும். இயந்திரத் தொழிலில் சம்பந்தமுடையோர் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்: இந்த ஆண்டு கலைத்துறைச் சம்பந்தப்பட்ட பணிகளில் அவ்வப்போது சிறுசிறு தடங்கல்கள் ஏற்பட்டு பிறகு சீரடைய வாய்ப்புண்டு. பொருளாதார சங்கடம் இருக்காது. இயந்திரப் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஏற்றம் ஏற்படும். காவல்-ராணுவத்தினருக்கு ஆதாயம் உண்டு. நண்பர்கள் நல்லவர்களை இனம்கண்டு பழகினால் தொல்லை இராது. விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான சூழ்நிலை அமையும். கலைத்துறையில் கலகலப்பான சூழ்நிலை உருவாகுமானாலும் சங்கடங்களும் இருந்து வரும். பொதுவாக பணக்கஷ்டம் அந்தஸ்துக் குறைவு போன்றவை ஏற்படாது. குடும்பத்தில் லஷ்மிகரம் நிலைத்திருக்கும்.
பரிகாரம்: முடிந்த வரை வெள்ளிக்கிழமை தோறும் அருகில் இருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று 11 முறை வலம் வரவும் | சிறப்பு பரிகாரம்: வெள்ளிக்கிழமை தோறும் பெருமாளுக்கு தேங்காய் தீபம் ஏற்றவும் | அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடக்கு | செல்ல வேண்டிய தலம்: ஸ்ரீரங்கம், கஞ்சனூர், திருப்பதி | சொல்ல வேண்டிய மந்திரம் - “ஓம் நமோ வாசுதேவாய” |
இந்த ஆண்டு ரிஷப ராசிக்கான கிரகங்களின் நிலை
மிதுனம்: (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை- ராசியில் குரு(வ) - தைரிய வீரிய ஸ்தானத்தில் கேது - களத்திர ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் - பாக்கிய ஸ்தானத்தில் சனி, ராகு - அயன சயன போக ஸ்தானத்தில் சந்திரன் என வலம் வருகிறார்கள்.
பலன்கள்: சாமர்த்தியமாகவும் புத்திகூர்மையுடனும் தெளிவான முடிவெடுக்கும் மிதுன ராசி அன்பர்களே நீங்கள் புதனை ராசிநாதனாகக் கொண்டவர்கள். இந்த ஆண்டு நன்மையும் தீமையும் கலந்தவாறு நடக்கவே வாய்ப்புண்டு. குறிப்பாக நன்மைகளில் திடீர்ப் பொருள் வரவுக்கு இடமுண்டு. தீமைகளில் நண்பர் ஒருவர் விரோதி ஆகலாம். பொதுவாக சுபிட்சம் உண்டு. தொழில் சிறப்படையும், நில புலன்கள் விஷயத்தில் ஆதாயம் காணலாம். தெய்வ பலம் நல்ல விதமாக அமைந்துள்ள இந்த நேரத்தில் தெய்வப் பணி, தருமப் பணி போன்ற காரியங்களில் ஈடுபட்டு மனம் மகிழ வாய்ப்புண்டு. குடும்பத்தில் சந்தோஷமான சூழல் இருக்கும். உறவினர்கள் வருகையும் இருக்கும். சுப காரியங்கள் நன்றாக நடக்க வாய்ப்புகள் அதிகம் உண்டு. பிள்ளைகள் உங்கள் சொல்படி நடந்து கொள்வார்கள்.
உத்தியோகஸ்தர்களுக்குப் பதவி உயர்வு உண்டாகலாம். மேலதிகாரிகளின் உள்ளம் குளிர நடந்து கொண்டால் தீமை குறையும். உழைப்பாளிகளுக்கு உரிய கவுரவம் கிட்டும்.
வியாபாரிகளுக்கு நல்ல லாபம் வரும். விவசாயிகளுக்கு உற்சாக நிலை உண்டு. உபத்திரவம் ஏதும் உண்டாகாது. தொழிலில் மேன்மை உண்டாகும். தொழிலாளர்களுக்கும் ஆதாயமான சூழ்நிலை உருவாகும். விவசாயிகளுக்கு மகசூல் மகிழச்சி தரும்.
அரசியல்வாதிகள் அவசரப்படாமல் நடந்து கொள்வது நல்லது. வேண்டிய நண்பர் ஒருவர் மனஸ்தாபத்துக்கு உள்ளாக நேரலாம். பெருந்தன்மையோடு நடந்து கொண்டு அந்தப் பிரச்சினையைச் சமாளிக்க வேண்டியது அவசியம்.
கலைத்துறையில் சீரான போக்குக்குத் தடை உண்டாகாது. எந்தப் புது முயற்சியும் வெற்றியை நோக்கியே செல்லும். அன்றாட பணிகளை மட்டும் சிரத்தையோடு செய்து வாருங்கள். அன்றாட வாழ்க்கையின் தேவைகள் பூர்த்தியாகத் தடையிராது.
பெண்கள் எதிலும் எச்சரிக்கையாக நடந்து கொள்வது அவசியம். வரவு அறிந்து செலவு செய்தால் பணக்கஷ்டம் உண்டாக வாய்ப்பில்லை. அன்றாடப் பணிகளில் குந்தகம் விளையாது ஓர் அமைப்பு காக்கும்.
மாணவர்களில் பொறியியல், விஞ்ஞானம், கணிதம் போன்ற துறைகளில் உள்ளோருக்குப் புதிய சாதனைக்கான முயற்சிகள் கைகூடிவரும். கல்விப்பயனை மிகுந்த பிரயாசைப்பட்டேனும் பெற்று விடுவர். பயணத்தைத் தவிர்ப்பது நல்லது. காதல் விவகாரங்களில் தலையிட வேண்டாம்.
மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்: இந்த ஆண்டு வியாபாரிகளுக்கு அளவான லாபம் உண்டு. தொழிலில் மந்த நிலை இருந்தாலும் அதை சமாளித்து விடுவீர்கள். விவசாயிகளுக்கு போதிய வருமானம் கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் இருந்த சிக்கல் சரியாகும். பொருளாதாரத்தில் தொல்லை ஏற்படாது. பணக் கஷ்டம் வராமல் இருக்கும். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு அன்றாட பணிகள் சரிவர நடக்கும். தெய்வ வழிபாடு மனத்துக்குத் தெம்பு தரும். அரசு உத்தியோகஸ்தர்கள் விரும்பத்தக்க உத்தரவுகளைப் பெறலாம். அரசாங்க காரியங்களில் தாமதம் தவிர்க்க முடியாமற் போகலாம்.
திருவாதிரை: இந்த ஆண்டு உடல் நலம் சிறிது பாதிக்கப்படலாம். தேவையில்லாத உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. தங்கள் நற்பெயரைக் காத்துக் கொள்வதில் மிக்க கவனமாக இருப்பது அவசியம். குடும்பத்தில் சுபிட்சம் இருக்கும். நற்பலன்கள் அதிகளவில் நடக்கும் என்றாலும், சிறிதளவு மன சங்கடங்கள் உண்டாக வாய்ப்புண்டு. பொருளாதாரக் குறை உண்டாகாது. அந்தஸ்து பாதிக்கப்படாது. குடும்பத்தில் சுப காரியம் நடக்கலாம். வேலை இல்லாதோருக்கு வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு.
புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்: இந்த ஆண்டு உங்களுடைய வாழ்வில் சில நற்பலன்கள் ஏற்பட்டே தீரும். அந்த நன்மைகளை நேர்வழியில் சென்றே உங்களால் பெற முடியுமாதலால் குறுக்கு வழியில் முயற்சிக்கும் எண்ணத்தைக் கைவிடுங்கள். பொருளாதார நிலை பாதிக்கப்படாது. வியாபாரிகளுக்கு ஒரு சறுக்கல் ஏற்படுமானாலும் நிமிர்ந்து விடுவார்கள். விவசாயிகளுக்கு உன்னதமான நேரம் இல்லை என்றாலும் உபத்திரவம் பெரிதாக உருவாகாது. கலைத்துறையில் உள்ளவர்களுக்கு உற்சாகம் உண்டாகும்.
பரிகாரம்: முடிந்த வரை புதன்கிழமை தோறும் அருகில் இருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று 11 முறை வலம் வரவும் | சிறப்பு பரிகாரம்: புதன்கிழமை தோறும் பெருமாளுக்கு தேங்காய் நீராஞ்சன தீபம் ஏற்றவும் | அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடக்கு | செல்ல வேண்டிய தலம்: ஸ்ரீரங்கம் மற்றும் திவ்யதேசங்கள் | சொல்ல வேண்டிய மந்திரம் - “ஓம் ஸ்ரீமஹாவிஷ்ணவே நம:”|
இந்த ஆண்டு மிதுன ராசிக்கான கிரகங்களின் நிலை