

- ஜோதிடர் மணிகண்டன் பாரதிதாசன்
கடந்த சில வாரங்களாக வெளிவந்த சுப தாரைகள் பற்றிய கட்டுரைகளுக்கு தாங்கள் அளித்த வரவேற்பிற்கு மனமார்ந்த நன்றி. இனி இருபத்தியேழு நட்சத்திரங்களைப் பற்றியும், அதற்கு உரிய தாரை வடிவங்களைப் பற்றியும் பார்க்கலாம். இன்றைய கட்டுரையில் அஸ்வினி நட்சத்திரம் பற்றிய சுப தாரைகள் பற்றிய விளக்கங்களைக் காணலாம்.
அஸ்வினி
அஸ்வம் என்றால் குதிரை என்று அர்த்தம். அஸ்வினி நட்சத்திரத்திற்கு புரவி என்ற தமிழ்ப் பெயரும் உண்டு. வானவெளியில் காணும்போது அஸ்வினி நட்சத்திரம் என்பது குதிரையின் தலைப் பகுதி போன்ற வடிவில் தெரியும். சப்த புரவிகளுடன் பயணிக்கும் உச்ச சூரியனை தாங்கிச் செல்லும் நட்சத்திரம் இது. ஆகவே அஸ்வினி நட்சத்திரத்தை காலபுருஷ சக்கரத்தில் முதல் நட்சத்திரமாக முன்னோர்கள் வைத்தனர்.
அஸ்வினி நட்சத்திரத்தின் அதிபதியாக கேது கிரகம் வருகிறது. கேது ஞானகாரகன் என்கிறது ஜோதிடம். எனவே ஞானத்தின் தேவியாக சொல்லப்படும் சரஸ்வதி எனும் கலைவாணி அதிதேவதையாகத் திகழ்கிறாள். மேலும் ஞானத்தைப் போதிக்கும் ஆண் கடவுளாக ஹயக்ரீவர் போற்றப்படுகிறார். ஹயக்ரீவர் அஸ்வினி நட்சத்திர வடிவமான குதிரை முகம் கொண்ட கடவுளாகத் திகழ்கிறார் என விவரிக்கிறது புராணம்.
சரஸ்வதி கையில் வீணை - அஸ்வினி நட்சத்திர சூட்சுமம்
சரஸ்வதி என்பது சம்ஸ்கிருதச் சொல். சரஸ்வதி என்பதை சரஸ் + வதி என்று பிரித்து எழுதலாம். சரஸ் என்ற சம்ஸ்கிருதச் சொல்லின் பொருள் வெள்ளை நிற உமிழ்நீர் என்பதாகும். வது என்ற சொல் சமஸ்கிருதத்தில் வதி என்று அழைக்கப்படுகிறது. வதி என்ற சொல்லுக்கு சமஸ்கிருதத்தில் பெண் என்று பொருள்படும். எனவே சரஸ்வதி என்றால் நாவில் உறையும் வெள்ளை நிற உமிழ்நீரில் வசிப்பவள் என்று பொருள். இதைத்தான் முன்னோர்கள் சரஸ்வதி நாவில் உறைகிறாள் என்று சூசகமாகக் கூறினார்கள்.
நாவில் சுரக்கும் வெள்ளை நிற உமிழ்நீரே, வீணை போல இருக்கும் நமது தொண்டைக் குழல் மீது சென்று, தொண்டைக்குழல் எனும் வீணையை மீட்டி அதிரச் செய்து நம்மைப் பேச வைக்கிறது. இதைத்தான் சரஸ்வதி வீணை மீட்டிக்கொண்டிருக்கிறார் என்கின்றன ஞானநூல்கள். இதுவே சரஸ்வதி நாவில் வசிக்கிறார் என்பதற்கான சூட்சுமம்.
சரஸ்வதி அஸ்வினி நட்சத்திர அதி தேவதை என்று பார்த்தோம். அஸ்வினி நட்சத்திரத்தின் அனு ஜென்ம மற்றும் திரி ஜென்ம தாரைகள் முறையே மகம் மற்றும் மூலம் என்பனவாகும். மூலம் என்பது யானையின் தலை வடிவம் கொண்டது. யானை தலையை குறுக்கே வைத்து பார்த்தால் அது வீணை போன்ற தோற்றத்தைக் காட்டும். ஆகவே கலைவாணி தன் திருக்கரத்தில் தனது திரி ஜென்ம தாரையான வீணையை ஏந்தி இருக்கிறார். ஆகவே அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்த நபர்கள் சரஸ்வதி வழிபாடும், வீணை வடிவத்தை தனது வாழ்வில் அதிகம் உபயோகம் செய்தும் வந்தால், பல வெற்றிகளைக் காணலாம்.
மது, கைடபர் என்ற இரு அசுரர்கள், தேவர்களைத் துன்புறுத்தி வந்தனர். படைக்கும் தொழிலை வேதத்தின் துணை கொண்டு நடத்திவந்தார் பிரம்மா. இந்த நிலையில் மது, கைடபர் ஆகிய இருவரும் வேதத்தைத் திருடிக்கொண்டு போய் ஒளித்து வைத்துவிட்டனர். தேவர்களால் மீட்க இயலாத வேதத்தை மகாவிஷ்ணு, குதிரை முகமும் மனித உடலும் தாங்கி, ஹயக்ரீவர் என்ற அவதாரம் மூலம் மது, கைடபர் ஆகிய அசுரர்களுடன் போரிட்டு மீட்டார் என விவரிக்கிறது புராணம்.
அஸ்வினிக்குரிய தெய்வம் ஹயக்ரீவர்
குதிரை முகம் கொண்ட மது மற்றும் கைடபர் என்ற அசுரர்கள் பிரம்ம தேவனின் படைப்புத் தொழிலைச் செய்ய ஆர்வம் கொண்டனர். படைப்புத் தொழிலைச் செய்ய வேதங்கள் அவசியம் என்பதை உணர்ந்து அதைக் கவரும் முயற்சியில் இறங்கினார்கள். பிரம்ம தேவன் தவத்தில் இருக்கும் சமயம் பார்த்து, பிரம்மலோகம் வந்த மது மற்றும் கைடப அசுரர்கள் வேதங்களை கவர்ந்து சென்றனர். அதனைச் சரியாக வாசிக்கத் தெரியாததால் அதனை மகர ஆழியில் மறைத்து வைத்தனர். மகர ஆழி என்பது மகர ராசியை குறிக்கும். அங்கே வேதங்கள் மறைத்து வைக்கப்பட்டதால், படைப்புத் தொழில் ஸ்தம்பித்துப் போனது.
பிரம்ம தேவர் தனது தந்தையான விஷ்ணு பகவானிடம் வேதங்களை மீட்டுத் தரும்படி முறையிட்டார். குதிரை முகம் கொண்ட அசுரர்களை வதம் செய்ய குதிரை முகம் கொண்ட அவதாரம் எடுத்தார் பெருமாள். இந்த ஹயக்ரீவர் வடிவம் தசாவதாரத்தில் சேர்க்கப்படவில்லை. இந்த அவதாரம் மனிதர்கள் தோன்றுவதற்கு முன்னரே உருவானதால் தசாவதாரத்தில் சேர்க்கப்படவில்லை என்பதாகத்தான் நினைக்கிறேன்.
அஸ்வ வதன வடிவெடுத்து மது மற்றும் கைடபர் அசுரர்களை ஹயக்ரீவர் வதம் செய்தார். மேலும் மகர ஆழியில் ஒளித்து வைக்கப்பட்ட வேதங்களை கடகம் என்ற பெருங்கடல் கொண்ட ஆழியில் மீட்டெடுத்தார். இந்த நிகழ்வை வைத்தே வேதங்கள் மகரத்தில் மறைக்கப்பட்டதால் மகரத்தில் குரு நீச்சம் என்றும், கடகத்தில் மறைக்கப்பட்ட வேதங்கள் மீட்கப்பட்டதால் அங்கே குரு உச்சம் என்றும் ஜோதிடம் கூறுகிறது.
வேதங்களை கடக ஆழியில் இருந்து மீட்ட ஹயக்ரீவர் அதனை பிரம்ம தேவரிடம் ஒப்படைத்தார். அவ்வாறு ஒப்படைத்த ஹயக்ரீவர் வேதங்கள் பற்றிய பல ரகசியங்களை பிரம்ம தேவரிடம் கூறுகிறார். அதனைக் கேட்டு அகமகிழ்ந்த பிரம்ம தேவர், இதனை கல்விக் கடவுளான கலைவாணியிடம் போதிக்குமாறு கேட்டுக்கொண்டார். அவரது கோரிக்கையை ஏற்றுக் கொண்ட ஹயக்ரீவர், சரஸ்வதி தேவிக்கு வேதங்களைப் போதித்தார். எனவே சரஸ்வதி தேவியின் மகாகுருவாக ஹயக்ரீவர் போற்றப்படுகிறார். எனவே ஹயக்ரீவர் ஞானம் மற்றும் கல்வி தரும் கடவுளாக போற்றி வணங்கப்படுகிறார்.
அஸ்வினிக்குரிய சுபதாரைகள்
ஜென்ம தாரை மண்டலம்
சம்பத்து தாரை சேம தாரை சாதக தாரை பரம மித்ர தாரை
பரணி ரோஹிணி திருவாதிரை ரேவதி
அனு ஜென்ம தாரை மண்டலம்
அனு ஜென்ம சம்பத்து தாரை அனு ஜென்ம சேம தாரை அனு ஜென்ம சாதக தாரை அனு ஜென்ம பரம மித்ர தாரை
பூரம் அஸ்தம் ஸ்வாதி ஆயில்யம்
திரி ஜென்ம தாரை மண்டலம்
திரி ஜென்ம சம்பத்து தாரை திரி ஜென்ம சேம தாரை திரி ஜென்ம சாதக தாரை திரி ஜென்ம பரம மித்ர தாரை
பூராடம் திருவோணம் சதயம் கேட்டை
அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்த நபர்கள் கட்டுரையில் சொல்லப்பட்டுள்ள அஸ்வினிக்கு உரிய தெய்வங்களையும் அதற்கு உரிய வடிவங்களையும் தினமும் வணங்கி வருவதும், வடிவத்தை தன்னிடம் வைத்துக் கொள்வதும் அடிக்கடிஇந்த வடிவங்களைப் பார்த்து வருவதும் வாழ்வில் முன்னேற்றங்களைத் தரும்.
- வளரும்
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |