துலாம் ராசிக்கான விசுவாவசு வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் - உயர்வு உறுதி!

துலாம் ராசிக்கான விசுவாவசு வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் - உயர்வு உறுதி!

Published on

துலாம்: மனதில் பட்டதை பளிச்சென்று பேசி, சுற்றியிருப்பவர்களின் மனதில் ஆழமாக இடம் பிடிப்பவர்கள் நீங்கள். உங்கள் ராசியிலேயே விசுவாவசு தமிழ்ப் புத்தாண்டு பிறப்பதால் உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். இனி உங்களின் வாழ்க்கை பாதையை சீராக அமைத்துக் கொள்ள நல்ல வாய்ப்புகள் அமையும். பக்குவமாகப் பேசி பல காரியங்களை கச்சிதமாக முடிப்பீர்கள். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும்.

ஒருவரையொருவர் புரிந்து கொண்டு வாழ்வீர்கள். எனினும் எதிலும் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். பேச்சில் நிதானத்தை கடைபிடியுங்கள். பிள்ளை பாக்கியம் உண்டு. தடைபட்டு வந்த குலதெய்வ பிரார்த்தனைகள், வேண்டுதல்களை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளின் வருங் காலத்தை மனதில் கொண்டு கொஞ்சம் சேமிக்கவும் செய்வீர்கள். வீட்டில் தடைபட்ட சுபகாரியமெல்லாம் இனி அடுத்தடுத்து நடக்கும். விலகிப் போன பழைய சொந்த பந்தங்கள் இனி உங்கள் வீடு தேடி படையெடுப்பார்கள். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

மே மாதம் 14-ம் தேதியிலி ருந்து குரு பகவான் உங்களுக்கு சாதகமாக வருவதால் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்ற நிலை உருவாகும். புதுமுயற்சிகள் வெற்றி தரும். வட்டிக் கடனை மொத்தமாக அடைக்கும் அளவுக்கு வருமானம் உயரும். வராது என்று நினைத்திருந்த பணமும் கைக்கு வரும். விலையுயர்ந்த தங்க நகைகள் வாங்குவீர்கள். போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். வெளிநாட்டுப் பயணம் உண்டு. அதிகார பதவியில் இருப்பவர்களின் நட்பு கிட்டும். அவர்கள் மூலம் சில சொத்துப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். கூடுமானவரை உடன் பிறந்தவர்களை அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். குற்றம் பார்த்தால் சுற்றம் இருக்காது.

எதிர்காலத்தை மனதில் கொண்டு சேமிப்பை கொஞ்சம் அதிகப்படுத்துவீர்கள். எதார்த்தமான பேச்சால் தள்ளிப்போன காரியங்களைக்கூட முடித்துக் காட்டுவீர்கள். எனினும் முக்கிய வேலைகளை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் முடிந்தவரை நீங்களே முடிக்கப் பாருங்கள். அடிக்கடி வாகனம் பழுதாகும். எனவே வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. வளைவுகளில் வேகத்தை காட்டாதீர்கள். வாட்ஸ் அப், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களை கவனமாகக் கையாளுங்கள். யாருக்கும் பொறுப்பேற்று ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள். வெளிமாநில புண்ணிய தலங்களுக்கு குடும்பத்துடன் சென்று வருவீர்கள். மகான்களின் தரிசனம் கிடைக்கும். நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்வீர்கள். எவ்வளவு பிரச்சினை வந்தாலும் அதை எதிர்கொள்ளும் பக்குவம் வேண்டும். நடந்தது நடந்து விட்டது என்று கடந்து செல்லுங்கள். வெற்றி நிச்சயம்.

இல்லத்தரசிகளுக்கு குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். தாம்பத்யம் இனிக்கும். கணவர் வழி சொந்தங்களால் மதிக்கப்படுவீர்கள். வீட்டிலிருந்தபடியே சுயதொழில் செய்து லாபமீட்டுவீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். அவர்களின் நட்பு வட்டம் சிறப்பாக அமையும். பழைய நகையை மாற்றி விட்டு புது டிசைனில் நகை வாங்குவீர்கள். கன்னிப் பெண்களுக்கு மனதைரியம் பிறக்கும். உங்களுடன் பழகியவர்களின் நல்லவர் யார் கெட்டவர் யார் என்பதை கண்டறிவீர்கள். கசந்த காதல் இனிக்கும். தள்ளிப் போன கல்யாணம் கூடிவரும். பெற்றோர் உங்களின் விருப்பங்களை நிறைவேற்றுவார்கள். மாணவ-மாணவிகளுக்கு மறதி, மந்தம் விலகும். இனி படிப்பில் அக்கறை காட்டுவார்கள். தெரியாதவற்றை ஆசிரியரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

வியாபாரிகளுக்கு அதிரடி லாபம் கிடைக்கும். ராகு - கேதுவின் சஞ்சாரப்படி மே மாதத்துக்குப் பிறகு வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். விஐபிகள், தொழிலதிபர்களின் நட்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்வீர்கள். கூட்டுத்தொழிலில் லாபமுண்டு. தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்றுத் தீரும். புகழ் பெற்ற நிறுவனங்களுடன் புதுஒப்பந்தம் செய்வீர்கள். வியாபாரிகள் சங்கத்தில் முக்கிய பொறுப்புகள் தேடி வரும். கூட்டுத் தொழிலில் முன்னேற்றம் உண்டு. பங்குதாரர்கள் உங்களை புரிந்து கொள்வார்கள். வேலையாட்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபார விஷயமாக வெளியூர் பயணங்கள் மேற்கொள்வீர்கள்.

உத்தியோகத்தில் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். அதிக சம்பளத்துடன் பெரிய நிறுவனத்திலிருந்து வாய்ப்புகள் தேடி வரும். எதிர்பார்த்தபடி பதவி உயர்வு, சம்பளம் உயர்வு எல்லாம் உண்டு. புதியவற்றை கற்றுக் கொள்வதில் உங்கள் ஆர்வம் அதிகரிக்கும். சக ஊழியர்களுடன் இணக்கமாக செயல்படவும். மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். கணினி துறையில் இருப்பவர்களுக்கு அயல்நாட்டுத் தொடர்புடைய புதிய நிறுவனங்களில் நல்ல சம்பளத்துடன் வாய்ப்பு கிடைக்கும். பயன்படுத்திக் கொள்ளவும். கலைத் துறையினருக்கு அரசாங்கத்தால் பரிசு, பாராட்டு கிட்டும். உங்களின் புதிய சிந்தனைக்கு மக்கள் அங்கீகாரம் கொடுப்பார்கள். பெரிய வாய்ப்புகள் வரும். மூத்த கலைஞர்களை விமர்சித்து பேச வேண்டாம்.

மொத்தத்தில் இந்தத் தமிழ்ப் புத்தாண்டு உங்களின் தரத்தை ஒருபடி உயரச் செய்வதாக அமையும்.

பரிகாரம்: ஸ்ரீதுர்கை அம்மனை தீபமேற்றி வணங்குங்கள். வாய் பேச முடியாதவர்களுக்கு தங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள். செம்பருத்தி செடியை நட்டு பராமரியுங்கள். மகிழ்ச்சி பொங்கும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in