கடகம், சிம்மம், கன்னி: நவம்பர் மாத பலன்கள்

கடகம், சிம்மம், கன்னி: நவம்பர் மாத பலன்கள்
Updated on: 
5 min read
கடகம்:
(புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) கிரகநிலை- ராசியில் சந்திரன், செவ்வாய் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு (அ.சா), கேது - சுக ஸ்தானத்தில் சூரியன், புதன், சுக்கிரன் (வ)- அஷ்டம ஸ்தானத்தில் ராகு - பாக்கிய ஸ்தானத்தில் சனி (வ) என கிரக நிலைகள் உள்ளது.

பலன்கள்: மனசாட்சிகாரகன் சந்திரனை ராசிநாதனாகக் கொண்ட கடக ராசி அன்பர்களே, இந்த மாதம் அனைத்துக் காரியங்களிலும் சராசரிக்கும் கூடுதலான வெற்றிகளைக் காண்பீர்கள். சேமிப்புகளை ஆதாயம் தரும் விஷயங்களில் முதலீடு செய்வீர்கள். திட்டமிட்டுச் சரியாகச் செயலாற்றுவீர்கள். குடும்பத்துடன் தொலைவிலுள்ள புண்ணியத் தலங்களுக்கு ஆன்மீகப் பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பு, பலருக்குக் கிடைக்கும். உடல் உபாதைகள் ஏற்படாது. உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். திறமைகள் பளிச்சிடும். குழந்தைகளை கண்டிப்புடன் வளர்ப்பீர்கள். அதேநேரம் அவர்களின் மகிழ்ச்சிக்காக சுற்றுலாவும் சென்று வருவீர்கள். பதற்றப்படாமல் உங்கள் செயல்களை செய்து முடிப்பீர்கள். தொழில் செய்பவர்களுக்கு கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் எந்தக் குறையும் ஏற்படாது. ஆனாலும் எதிலும் கவனமாக இருக்கவும். புதிய முதலீடுகளைக் கூட்டாளிகளைக் கலந்தாலோசித்த பிறகே செய்யவும்.

தேவைக்கேற்ற சரக்குகளை மட்டுமே வாங்கி விற்கவும். அதேசமயம் சந்தைகளில் போட்டிக்குத் தகுந்தவாறு விலையை நிர்ணயித்து லாபமடைய நிறையவே வாய்ப்புகள் உள்ளன. உத்தியோகஸ்தர்கள் கடுமையாக உழைத்தாலும் அதில் மேலதிகாரிகள் குற்றம் காண வாய்ப்புண்டு. அதேசமயம் சக ஊழியர்கள் உங்களுக்கு உறுதுணையாக நிற்பார்கள். இதனால் சமாளித்துவிடுவீர்கள். சிலருக்கு அலுவலக ரீதியாக வெளியூரில் சில காலம் தங்கிப் பணியாற்ற வேண்டிய சூழ்நிலை உருவாகும். அலுவலகத்திலிருந்து கடன் கிடைத்து வாகனம் வாங்கும் யோகமும் பலருக்கு அமையும்.

அரசியல்வாதிகள் அனைவரையும் அரவணைத்துச் செல்வீர்கள். கட்சி மேலிடத்தின் கனிவான பார்வை உங்கள் மீது விழுந்து, உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். அரசு அதிகாரிகளும் உங்கள் நேர்மையான ஆலோசனைகளை மதித்து நடப்பார்கள். அவர்களால் உங்களின் செல்வாக்கு தொண்டர்களிடம் உயர்ந்து காணப்படும்.

கலைத்துறையினருக்கு அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். பாராட்டும், பணமும் உங்கள் உள்ளத்தை உற்சாகப்படுத்தும். சக கலைஞர்கள் நட்புடன் பழகுவார்கள். அவர்களால் உங்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பெண்மணிகள் இல்லத்தில் மகிழ்ச்சியைக் காண்பீர்கள். கணவரிடம் பாசத்தோடு பழகுவீர்கள். புதிய ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். தேவையற்ற கவலைகள் சிலருக்குத் தோன்றலாம். மனதைக் கட்டுப்படுத்த யோகா, ப்ராணாயாமம் போன்றவற்றை செய்தால், கவலைகள் தேவையற்றவை என்பது தன்னால் புரியும். மாணவமணிகள் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். பழைய தவறுகளைத் திருத்திக்கொண்டு புத்துணர்ச்சியுடன் பாடங்களைப் படிக்கவும்.

புனர் பூசம் 4ம் பாதம்: இந்த மாதம் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவுடன் இருப்பர். வேலையின்றி இருப்பவர்கள் வேலை கிடைக்கப் பெறலாம். வியாபாரிகளுக்கு தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். அலைச்சல் இருக்கும். ஆனால் கடந்த காலத்தை விட கூடுதல் வருவாயைப் பெறலாம். புதிய வியாபாரம் தொடங்குவதற்கு முன் ஒன்றுக்கு மேற்பட்டவர்களிடம் ஆலோசனை செய்யவும்.

பூசம்: இந்த மாதம் இருப்பதை சிறப்பாக நடத்துவதற்கு முயற்சி செய்யவும். அறிவைப் பயன்படுத்தி ஏற்றம் காணலாம். பெண்கள் உற்சாகமாக காணப்படுவர். கணவர் மற்றும் அண்டை அயலாரின் அன்பும் பாசமும் கிடைக்கும். பிள்ளை வளர்ப்பில் பெருமை அடைவீர்கள். கலைஞர்கள், புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவர். புகழ் பாராட்டு கிடைக்கும்.

ஆயில்யம்: இந்த மாதம் மாணவர்கள் தொடர்ந்து சிறப்பான நிலையில் இருப்பர். நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். பலருக்கு வெற்றி நிச்சயம். பொதுநல சேவகர்கள் நல்ல முன்னேற்றம் காண்பர். அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவியை அடையலாம். இறுக்கமான சூழ்நிலையிலும் சில நல்ல முன்னேற்றங்களைப் பெற போகிறீர்கள். வாகன மூலம் லாபம் வரும். மற்றவர்கள் பிரச்சனைகளில் வாதாடி வெற்றி பெறுவீர்கள்.

பரிகாரம்: தினமும் அருகிலிருக்கும் அம்மன் ஆலயத்திற்குச் சென்று வேப்பிலை அர்ப்பணித்து வழிபட்டு வர பொருளாதார தேக்கநிலை மாறும் | அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன் | சந்திராஷ்டம தினங்கள்: 18, 19 | அதிர்ஷ்ட தினங்கள்: 24, 25 |

சிம்மம்:
(மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்) கிரகநிலை- ராசியில் குரு (அ.சா), கேது - தைரிய வீரிய ஸ்தானத்தில் சூரியன், புதன், சுக்கிரன் (வ)- களத்திர ஸ்தானத்தில் ராகு - அஷ்டம ஸ்தானத்தில் சனி (வ) - அயன சயன போக ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய் என கிரக நிலைகள் உள்ளது.

பலன்கள்: ராஜகிரகம் என்று அழைக்கப்படும் சூரியனை ராசிநாதனாகக் கொண்ட சிம்ம ராசி இந்த மாதம் இதுவரை இருந்த கடினமான சூழ்நிலையிலிருந்து விடுபடுவீர்கள். உயர்ந்த பதவிகள் உங்களைத் தேடி வரும். சமுதாயத்தில் உயர்ந்தோரின் நட்பும், ஆதரவும் கிடைக்கும். குடும்பத்தில் உற்சாகம் கரை புரளும். புத்திரர்களாலும், பேரப் பிள்ளைகளாலும் மகிழ்ச்சி ஏற்படும். செய்தொழிலை விரிவுபடுத்த பெரிய அளவில் கடன் வாங்குவீர்கள். அதேநேரம் அனைத்து விவரங்களையும் நன்றாகப் புரிந்து கொண்ட பிறகே ஆவணங்களில் கையொப்பமிடவும். மன அழுத்தம் குறைந்து தெளிவாகச் சிந்திக்கும் காலம் இது என்பதால் உங்களுடைய உள்ளம் தெளிவான வழிகளிலேயே இட்டுச் செல்வதற்கு வாய்ப்புகள் அதிகம். தொழில் செய்பவர்கள் நல்ல பொருளாதார வளத்தைக் காண்பீர்கள். கொடுக்கல், வாங்கலில் இருந்த சிரமங்கள் மறையும்.

கூட்டாளிகளிடம் ஒற்றுமை உண்டாகும். வங்கிக் கடன்கள் சிக்கலின்றி கிடைக்கும். உங்கள் முயற்சியில் சுறுசுறுப்பு உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப் பளு அதிகரிக்கத் தொடங்கும். உழைப்பிற்கேற்ற ஊதியத்தைப் பெறுவதில் தடை ஏற்படாது. சக ஊழியர்கள் உங்களிடம் பொறாமை கொள்ளலாம். எடுத்த காரியங்களில், சில சந்தர்பங்களில் கால தாமதம் ஏற்படலாம். அரசியல்வாதிகளின் பதவிகளுக்கு நெருங்கிய நண்பர்கள் மூலமாகவே சில இடையூறுகள் ஏற்படலாம். அதனால் எவரிடமும் மனம் திறந்து பேச வேண்டாம். மற்றபடி தொண்டர்கள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பதால் உற்சாகமடைவீர்கள். உங்கள் செயல்களை நேர்த்தியாகச் செய்வீர்கள். பண வரவும் நன்றாகவே இருக்கும்.

கலைத்துறையினர் சுமாரான வாய்ப்புகளையே பெறுவீர்கள். ரசிகர்களின் ஆதரவும் எதிர்பார்க்கும் அளவுக்கு இருக்காது. புகழைத் தக்க வைத்துக்கொள்ள சீரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். பெண்மணிகள் குழந்தைகளால் சந்தோஷம் அடைவீர்கள். கணவருடனான ஒற்றுமை நன்றாகவே இருக்கும். உங்களின் புத்திசாலித்தனத்தை குடும்பத்தினர் புகழ்வார்கள். புத்தாடை, அணிகலன்களை வாங்கி மகிழ்வீர்கள். மாணவமணிகள் கல்வியில் மிகுந்த ஈடுபாடு காட்டுவீர்கள். பெற்றோர்களின் ஆதரவும் தொடர்ந்து நல்லவிதமாக இருக்கும். வெளி விளையாட்டுகளில் ஈடுபட்டு வெற்றி அடைவீர்கள்.

மகம்: இந்த மாதம் எதிர்பாராத செலவினங்கள் இருந்தாலும் நல்ல பணப்புழக்கமும், பொருளாதார ஏற்றமும் இருக்கும். பிள்ளைகளால் அனுகூலம் ஏற்படும். எந்த பிரச்சனையையும் சந்தித்து முறியடிக்கும் வல்லமையைப் பெறலாம். காரியத் தடைகள் நீங்கி அனுகூலம் பிறக்கும். மதிப்பு மரியாதை சுமாராகவே இருக்கும். வீண் வாதங்களைத் தவிர்க்கவும். பணவரத்து அதிகரிக்கும். பயணம் மூலம் லாபம் கிடைக்க பெறுவீர்கள்.

பூரம்: இந்த மாதம் குடும்பத்தின் தேவைகள் பூர்த்தியாகும். புதிய வீடு வாங்க வாய்ப்பு உண்டு. குழந்தை பாக்கியம் கிடைக்கும். கணவன் மனைவி இடையே அன்பு நீடிக்கும் சிற்சில பிரச்சனைகள் வரத்தான் செய்யும். எனவே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போகவும். அதே போல் உறவினர் வகையிலும் அதிக நெருக்கம் வேண்டாம். புதிய நபர்கள் நட்பு உண்டாகும்.

உத்திரம் 1ம் பாதம்: இந்த மாதம் சிலர் தொழில் நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிய நேரிடலாம். தூரத்தில் இருக்கும் உறவினரால் நன்மை ஏற்படும். உடல்நலத்தைப் பொறுத்தவரையில் பித்தம் மயக்கம் தொடர்பான பிரச்சனைகள் வரலாம். மருத்துவச் செலவு வெகுவாகக் குறையும். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு வேலைப் பளு அதிகரிக்கும். விரும்பியது கிடைக்க கூடுதல் முயற்சி தேவை.

பரிகாரம்: தினமும் சிவனுக்கு இளநீர் அபிஷேகம் செய்வதன் மூலம் எடுத்த முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள் | அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, திங்கள், வெள்ளி | சந்திராஷ்டம தினங்கள்: 20, 21 | அதிர்ஷ்ட தினங்கள்: 26, 27, 28 |

கன்னி:
(உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2, பாதங்கள்) கிரகநிலை- தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூரியன், புதன், சுக்கிரன் (வ)- ரண ருண ரோக ஸ்தானத்தில் ராகு - களத்திர ஸ்தானத்தில் சனி (வ) - லாப ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய் - அயன சயன போக ஸ்தானத்தில் குரு (அ.சா), கேது என கிரக நிலைகள் உள்ளது.

பலன்கள்: அம்மான்காரனான புதனை அதிபதியாகக் கொண்ட கன்னி ராசி அன்பர்களே இந்த மாதம் உங்களுக்கு திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்கும். சில அன்பர்களுக்கு வெளிநாடுகளுக்குச் சென்று வரும் யோகம் உண்டாகும். பிறரின் முகபாவனைகளைக் கண்டே அவர்களின் மனதை அறிந்துகொள்வீர்கள். தெய்வ வழிபாடுகளில் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் அரங்கேறும் சுப நிகழ்ச்சிகளால் சந்தோஷம் அடைவீர்கள். உங்கள் பேச்சில் அவ்வப்போது ஆணவம் தலை தூக்க நேரலாம். கவனத்துடன் அதைத் தவிர்த்துக் கொள்ளவும். உங்களின் பேச்சாற்றல் அதிகரிக்கும்; தன்னம்பிக்கை உயரும். உங்களின் எண்ணங்களை அடுத்தவர்கள் நல்ல முறையில் புரிந்து கொள்வார்கள். புதிய பொறுப்புகள் தாமாகவே தேடி வரும். தொழில் செய்பவர்கள் பொறுமையுடன் செயல்பட்டு வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். வருமானம் சிறப்பாகவே தொடரும்.

அதேசமயம் கூட்டாளிகளிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும். புதிய முதலீடுகளில் நன்றாகச் சிந்தித்த பிறகே ஈடுபடவும். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் நல்ல முறையில் இருக்கும். இதனால் மனதில் புத்துணர்ச்சி அதிகரிக்கும். உங்கள் தோற்றத்தில் பொலிவு உண்டாகும். சிலர் நெடுநாட்களாக எதிர்பார்த்திருந்த பதவி உயர்வைப் பெறுவார்கள். அரசியல்வாதிகளின் பெயரும், புகழும் வளரும். புதிய பதவிகள் உங்களைத் தேடி வரும். பயணங்களால் நன்மை உண்டாகும். உங்களின் கடமைகளை சுறுசுறுப்புடன் செய்வீர்கள். தொண்டர்களின் ஆதரவுடன் பதவிகளைத் தக்க வைத்துக் கொள்வீர்கள். ஆயினும் எவரையும் பகைத்துக்கொள்ளாமல் உங்களின் வேலைகளில் மட்டுமே கவனமாக இருக்கவும்.

கலைத்துறையினருக்கு புகழும், பாராட்டும் கிடைப்பதில் சற்று தாமதம் ஏற்படும். சக கலைஞர்களிடம் உங்களின் ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். உங்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகளைத் தக்கபடி பயன்படுத்தி, பொறுப்புடன் நடந்துகொள்வீர்கள். பெண்மணிகளுக்குக் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். உற்றார், உறவினர்கள் உங்களை அணுகிப் பயன் பெறுவார்கள். சேமிப்பில் நல்ல கவனம் செலுத்துவீர்கள். ஆலயங்களுக்குச் சென்று ஆன்மீக பலம் பெறுவீர்கள். மாணவமணிகளுக்கு நினைவாற்றல் பெருகும். இதனால் தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். உபரி நேரங்களில் மனதிற்குப் பிடித்த கேளிக்கைகளிலும், விளையாட்டுகளிலும் ஈடுபட்டு மகிழ்ச்சிக் கடலில் திளைப்பீர்கள்.

உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: இந்த மாதம் வருமானத்தில் எந்த குறையும் இருக்காது. உடன் பணிபுரிவோரிடம் அனுசரனையாக நடந்து கொள்ளவும். சிலர் எதிர்பாராத இடமாற்றத்தை சந்திக்கலாம். சொந்தத் தொழில் புரிவோர் சிறிது சிரத்தை எடுத்து உழைக்க வேண்டியிருக்கும். ஆனாலும் உழைப்புக்கேற்ற லாபம் கிடைக்கும். தொழில் நிமித்தமாக நீண்ட தூரம் பயணம் போக வேண்டி வரும்.

அஸ்தம்: இந்த மாதம் எதிரிகள் வகையில் அசட்டையாக இருத்தல் கூடாது. புதிய முதலீடுகளின் போது ஆலோசனைகள் அவசியமாகிறது. பணவிஷயத்தில் தொடர்ந்து அக்கறை தேவை. எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. அடுத்தவர் கூறுவதை யோசித்து பார்த்து அதன் பிறகு அந்த காரியத்தில் ஈடுபடுவது நன்மை தரும். எல்லா நலன்களும் உண்டாகும்.

சித்திரை 1, 2, பாதங்கள்: இந்த மாதம் கலைத்துறையினருக்கு முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். ஆனால் பொருளாதார ரீதியாக சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும். அரசியல்வாதிகள், பொதுநல சேவை புரிவோருக்கு பண விஷயம் திருப்திகரமாக இருக்கும். ஆனால் எதிர்பார்த்த பதவி கிடைப்பதில் வாக்குவாதம் ஏற்படலாம். உடன்பிறந்த சகோதரர்கள் ஒன்றுசேர்வார்கள். மணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் வந்து சேரும்.

பரிகாரம்: தினமும் அருகிலிருக்கும் பெருமாளுக்கு துளசி கொடுத்து வணங்கி வர குடும்ப பிரச்சனை தீரும். பொருளாதார சிக்கல்கள் அகலும் | அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வியாழன் | சந்திராஷ்டம தினங்கள்: 22, 23 | அதிர்ஷ்ட தினங்கள்: 1, 2, 29, 30 |

<div class="paragraphs"><p>இந்த மாதம் கிரகங்களின் நிலை</p></div>

இந்த மாதம் கிரகங்களின் நிலை

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

கடகம், சிம்மம், கன்னி: நவம்பர் மாத பலன்கள்
YOLO: அன்பு, மன்னிப்பால் தன்னைத் தானே மீட்ட டூ லேயிங் | திரை தேவதைகள் 42

X