Published : 28 May 2021 10:26 AM
Last Updated : 28 May 2021 10:26 AM

மேஷ ராசி அன்பர்களே! அடுத்தவர் விஷயத்தில் கவனம்; வீடு மனையில் ஆர்வம்; பிரச்சினைகள் தீரும்; ஜூன் மாத பலன்கள்

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

நிகழும் மங்கலகரமான ஸ்வஸ்திஸ்ரீ ப்லவ வருஷம் - உத்தராயனம் - வஸந்த ரிது - வைகாசி மாதம் 17ம் தேதி பின்னிரவு 18ம் தேதி முன்னிரவு - அன்றைய தினசுத்தி அறிவது க்ருஷ்ணபக்ஷ சஷ்டி - அவிட்டம் நட்சத்திரம் - மாஹேந்திர நாமயோகம் - கரஜி கரணம் - சித்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி இரவு 12.00 மணிக்கு கும்ப லக்னத்தில் ஜூன் மாதம் பிறக்கிறது.

ஜூன் மாதம் பிறக்கும் போது இருக்கும் கிரகநிலை:
லக்னம் - அவிட்டம் 4ம் பாதம் - செவ்வாய் சாரம்
சூர்யன் - ரோகிணி 2ம் பாதம் - சந்திரன் சாரம்
சந்திரன் - அவிட்டம் 2ம் பாதம் - செவ்வாய் சாரம்
செவ்வாய் - புனர்பூசம் 3ம் பாதம் - குரு சாரம்


புதன்(வ) - ரோகிணி 1ம் பாதம் - சந்திரன் சாரம்
குரு(அசா) - சதயம் 1ம் பாதம் - ராகு சாரம்
சுக்கிரன் - ம்ருகசீர்ஷம் 3ம் பாதம் - செவ்வாய் சாரம்
சனி (வ) - திருவோணம் 1ம் பாதம் - சந்திரன் சாரம்
ராகு - ரோகிணி 2ம் பாதம் - சந்திரன் சாரம்
கேது - அனுஷம் 4ம் பாதம் - சனி சாரம்
************************

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

கிரகநிலை:

தனவாக்கு ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ), ராகு - தைரிய ஸ்தானத்தில் செவ்வாய், சுக்கிரன் - அஷ்டம ஸ்தானத்தில் கேது - தொழில் ஸ்தானத்தில் சனி(வ) - லாப ஸ்தானத்தில் குரு(அசா) என கிரக நிலை அமைந்திருக்கிறது.
இம்மாதம் 03ம் தேதி - வியாழக்கிழமை அன்று செவ்வாய் தைரிய வீர்ய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இம்மாதம் 10ம் தேதி - வியாழக்கிழமை அன்று புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார்.
இம்மாதம் 15ம் தேதி - செவ்வாய்கிழமை அன்று சூர்யன் தைரிய வீர்ய ஸ்தானத்திற்கு மாறுகிறார்
இம்மாதம் 23ம் தேதி - புதன்கிழமை அன்று சுக்கிரன் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள் :

இந்த மாதம் எதிர்பாராத செல்வச் சேர்க்கை உண்டாகும். அதேநேரத்தில் மனதில் வீண்கவலையும் ஏற்படலாம். எதிலும் ஒரு வேகம் உண்டாகும். அடுத்தவர் விஷயங்களில் தலையிடும்போது கவனம் தேவை. உல்லாசப் பயணங்கள் செல்ல நேரலாம் எதிலும் அளவுக்கு மீறாமல் இருப்பது நல்லது. ஆடம்பரப் பொருட்கள் சேரும்.
தொழில் வியாபாரத்தில் இருந்த மெத்தனப் போக்கு நீங்கி வேகம் பிடிக்கும். தொழில் விஷயமாக வெளியூர் செல்ல நேரலாம். எதிர்பார்த்த ஆர்டர் கிடைக்க இருந்து வந்த தாமதம் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பொறுப்புகள் கிடைக்கப் பெற்று அதனால் நன்மை அடைவார்கள். மேலிடத்திலிருந்து பொறுப்புகள் அதிகமாக வழங்கப்படும்.

குடும்பத்தில் திருப்தியான நிலை காணப்படும். வீட்டிற்குத் தேவையான பொருள் வாங்குவதால் செலவு ஏற்படலாம். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கி நெருக்கம் ஏற்படும். பிள்ளைகளுடன் மனதுக்குப் பிடித்த இடத்திற்குச் சென்று பொழுதைக் கழிப்பீர்கள். வீடு மனை போன்ற முதலீடுகளில் ஆர்வம் அதிகரிக்கும்.
பெண்களுக்கு எதிர்பார்த்த செல்வச்சேர்க்கை உண்டாகும். மனதில் வீண் கவலை ஏற்படலாம். அடுத்தவர் பிரச்சினைகளில் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது.
கலைத்துறையினருக்கு எல்லோரையும் எளிதில் வசீகரிக்கும் திறமையும் அதிகரிக்கும். செல்வம் பல வழிகளில் சேரும். வாக்கு வன்மையால் எதையும் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள்.

அரசியல்துறையினருக்கு உங்களது செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் விலகி விடுவார்கள். முயற்சிகள் சாதகமான பலன் தரும். சூரியன் சஞ்சாரம் ராசிக்கு 11ல் இருப்பதால் பணவரத்து அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினைகள் சாதகமாக நடந்து முடியும்.
மாணவர்களுக்கு கல்வியைப் பற்றிய மனக்கவலை உண்டாகும். பயணங்கள் மகிழ்ச்சிகரமாக இருக்கும்.

அஸ்வினி:
இந்த மாதம் எதையும் சாதிக்கும் திறமை அதிகமாகும். நினைத்த காரியத்தை நினைத்தபடி நடத்தி முடிக்க முயற்சிகளை மேற்கொள்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும். தேவையற்ற மனக்கவலை உண்டாகும். வீண் ஆடம்பரச் செலவுகளை தவிர்ப்பது நலம் தரும்.

பரணி:
இந்த மாதம் அறிவுத்திறன் அதிகரிக்கும். உங்களது பேச்சு மற்றவரை மயக்குவதுபோல் இருக்கும். ருசியான உணவை உண்டு மகிழ்வீர்கள். மனநிம்மதி உண்டாகும். சாமர்த்தியமாக காரியங்களை செய்து வெற்றி பெறுவீர்கள்.

கார்த்திகை 1ம் பாதம்:
இந்த மாதம் எதிர்பார்த்த பணம் கிடைக்கலாம். நீண்ட நாட்களாக முயற்சி செய்த காரியங்கள் வெற்றியைத் தரும். வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். திடீர் செலவு ஏற்படும். சிலருக்கு மருத்துவச் செலவு ஏற்படும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடும்.

பரிகாரம்: தினமும் கந்தசஷ்டி கவசம் படித்து முருகனை வணங்கினால் கஷ்டம் நீங்கும். எதிர்ப்புகள் விலகும். எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி;
சந்திராஷ்டம தினங்கள்: 23, 24
அதிர்ஷ்ட தினங்கள்: 16, 17
****************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x