

கோப்புப் படம்
சென்னை: மெரினாவில் நடைபெற்ற பாரம்பரிய கலை நிகழ்ச்சியை ஏராளமானோர் கண்டுகளித்தனர். சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்களின் சிறந்த பொழுதுபோக்கு இடமாக மெரினா, பெசன்ட்நகர், திருவான்மியூர், கோவளம் உளிட்ட கடற்கரை பகுதிகள் அமைந்துள்ளன.
இந்த கடற்கரை பகுதிகளில் மக்களின் வசதிக்காகவும், சிறந்த சுற்றுச்சூழலை ஏற்படுத்தும் வகையிலும் பல்வேறு கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மெரினா கடற்கரையில், மெரினா நீச்சல் குளம் அமைந்துள்ள பகுதியில் உலகத்தரம் வாய்ந்த நீலக்கொடி சான்றுக்கான மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில், மக்களை மகிழ்விக்கவும், தமிழகத்தின் பாரம்பரியக் கலைகளை அவர்களிடம் கொண்டு செல்லும் வகையிலும் சென்னை மாநகராட்சி சார்பில், மெரினாவில் நாட்டுப்புறக் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் 11 நாட்கள் நடைபெற்றது.
அந்தவகையில், நேற்று நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளில், நையாண்டி மேளம், கானா பாடல்கள், கரகாட்டம், பறை ஆட்டம், பல்சுவை கலை நிகழ்ச்சிகள், லேசர் நடனம் ஆகியவை இடம் பெற்றன.
இந்த கலை நிகழ்ச்சிகளில் 80-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்றனர். கலை நிகழ்ச்சிகளை மக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.