

சென்னை: மார்கழி இசைவிழாவின் ஒரு பகுதியாக தியாகபிரம்ம கானசபா சார்பில், வாணிமகாலில் எஸ். திருஷ்யாவின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. ‘எனக்கு வேண்டும் வரங்களை அளிப்பாய்’ என்று தொடங்கும் கணபதி பாடலுடன் நிகழ்ச்சி தொடங்கியது.
அடுத்ததாக மதுரை ஆர்.முரளிதரனின் ஷண்முகப்ரியா ராகப் பாடல் (சுற்றி வருகுது வருகுது வருகுது வேல்) தொடர்ந்தது. முருகப் பெருமானின் பெருமைகள், வேலின் சிறப்புகளை விளக்கும் இந்தப் பாடலுக்கு சிறந்த அபிநயங்களுடன் நடனமாடினார் திருஷ்யா.
இதைத் தொடர்ந்து, ஈசனின் திருநடனத்தைப் போற்றும் விதமாக தேசியதோடி ராகத்தில் அமைந்த கோபாலகிருஷ்ண பாரதியின் பாடலுக்கு நடனமாடினார். ‘தா தை என்றாடுவார் தத்தித்தை என்றாடுவார்’ என்ற பாடல் மூலம் சிவபெருமானின் கம்பீரத்தையும், கோபாலகிருஷ்ண பாரதியின் பக்தியையும் கண் முன்னே கொண்டு வந்தார் திருஷ்யா.
நடன நிகழ்ச்சியில் முதன்மையானது வர்ணம். இதற்கு வயலின் மேதை லால்குடி ஜெயராமனின் ஷண்முகப்ரியா ராகத்தில் அமைந்த பத வர்ணத்தை தேர்ந்தெடுத்தார் திருஷ்யா. ‘தேவர் முனிவர் தொழும் பாதம் ஜெகன்நாதம்’ எனத் தொடங்கும் வர்ணம்,, திருமலை வேங்கடவனின் குணங்களை விளக்குகிறது.
முக்தாயிஸ்வரங்கள், சிட்டைஸ்வரங்களில் தனது அபிநயங்களில் மூலம் வேங்கடவனின் பல ரூபங்களையும், நவரசங்களையும் வெளிக்கொணர்ந்தார் திருஷ்யா. அனைவருக்கும் அனைத்து செல்வங்களையும் அளிப்பாய் என்று திருமலை வாசனை வேண்டி வர்ணத்தை நிறைவு செய்தார் திருஷ்யா.
அடுத்ததாக, துரித கதியில் அமைந்த பட்டணம் சுப்பிரமணிய ஐயரின் கதனகு தூகல ராகத்தில் அமைந்த ‘ரகு வம்ச சுதாம்பூதி சந்திர ராம் ராஜ ராஜேஸ்வரா’ பாடலுக்கு நடனமாடினார். ‘கௌரி நாயக வன சுபதாயக கமலாகாந்தா சாயகா’ எனத் தொடங்கும் கானடா ராக மைசூர் வாசுதேவாச்சாரியாரின் தில்லானாவுடன் நிகழ்ச்சியை நிறைவு செய்தார் திருஷ்யா.
திருஷ்யாவுக்கு உறுதுணையாக குரு சைலஜா (நட்டுவாங்கம்), கிருத்திகா (குரலிசை), வெங்கட் (மிருதங்கம்), சுகன்யா (வயலின்), யோகேஷ்வரன் (புல்லாங்குழல்), பாப்பூரி (ஒப்பனை) இருந்து, நிகழ்ச்சியை மெருகேறச் செய்தனர்.
தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு பயிலும் திருஷ்யா, கடந்த 7 ஆண்டுகளாக நடனகுரு சைலஜாவிடம் பரதநாட்டியம் பயின்று வருகிறார். சைல சுதா நாட்டிய அகாடமியின் நிறுவனராக உள்ள சைலஜா, சங்கீத நாடக அகாடமி, கலைமாமணி விருதுகளைப் பெற்றுள்ளார்.