

நெல்லையப்பர் கோயில் இசைத் தூண்கள். | உள்படம்; நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்
காலங்கள் மாறினாலும், வடிவங்கள் மாறினாலும், பண் சுமந்த தமிழ் இசை நம் நினைவுகளிலும், நம் நெஞ்சங்களிலும் அழியாத மரபாக ஒலித்துக் கொண்டே இருக்கிறது. இசை என்பது கேட்கப்படுவதற்கான ஒலியாக மட்டும் இல்லாமல் உணரப்படுவதற்கான அனுபவமாகவும் உள்ளது.
இயற்கை தந்த மூச்சில் இருந்து பிறந்து, மனிதன் உணர்வுகளால் செதுக்கி, பண் எனும் மரபு வழியில் தமிழ் அதற்கு உயிரூட்டியது. காற்றின் சப்தம் குழலாகி, அலைகளின் ஓசை தாளமாகி, வண்டின் ரீங்காரமாக விளங்கும் பண், இன்றும் நம் இதயங்களைத் தட்டிக்கொண்டே இருக்கிறது.
மனிதனின் முதல் அழுகை இசையோடு தொடங்கியது. நாம் அதை அப்போது உணர்ந்திருக்க மாட்டோம். ஆனால், பின்னர் அதற்கென ஒரு ராகம், அதற்கென ஒரு சீர் / சந்தம் இருப்பதை உணர்ந்திருப்போம். ஆக, மனிதன் தன்னுடைய பிறவியின் தொடக்கம் முதல் இசையோடுதான் பயணிக்கிறான். இயற்கையும் இசையும் பிரித்தறிய முடியாதது என்பதை உணர்ந்த மிகத் தொன்மையான பண்பாடுகளில் தமிழர் பண்பாடு முதன்மையானது. அதனால்தான் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐவகை நிலங்களுக்கும் அவற்றுக்குரிய பண் எது என்பதை மிகத் தெளிவாக உணர்த்தும் குறிப்புகள் சங்க காலம் தொட்டே நமக்கு கிடைக்கின்றன.
இயற்கை - இறைவன் - இசை ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்து உள்ளதை நம் மரபு ஏற்கிறது. இசைக்கான முதல் ஆசிரியர் இயற்கையாக இருந்தது. இசை என்பதும், இசைக் கருவி என்பதும் இயற்கையின் அங்கங்கள்.
ஐவகை நிலங்களையும் அவற்றுக்குரிய பண் ஓசைகளையும் பார்க்கும் போது அந்தந்தப் பகுதி மக்கள் வழிபட்ட தெய்வத்துக்கு, அந்தந்த மக்கள் செய்த வேலைக்கு எது ஓய்வளித்ததோ, எது உடனறியச் செய்ததோ, எது அவர்களை
ஆசுவாசப்படுத்தியதோ - அந்தப் பண்முறையை அவர்கள் ஏற்றுக் கொண்டனர். அது அவர்கள் வாழ்வியல் முறையின் ஓர் அங்கமாக மாறியது. அவர்கள் பயன்படுத்திய இசைக் கருவிகளும் அங்ஙனமே அமைந்தன.
சங்கப் பாடலில் நமக்கு கிடைக்கப்பெறும் மூன்று முக்கியமான இசைக் கருவிகளிலும் தமிழின் சிறப்பு ‘ழ”கரம் பயின்று வருவது வியத்தகு உண்மை.
முழவு, குழல், யாழ் - இதற்கு முன்பாகவே ஆதியில் ஓர் இயற்கையான வாத்தியம் இருக்கப் பெற்றது. அதுதான் ‘வளை’ என்று அழைக்கப்படும் சங்கு. இன்னமும்கூட கோயில்களில் சங்கு என்பது பிரார்த்தனைக்கான அல்லது பக்திக்கான ஒரு முதன்மை இடம் வகிப்பதை காண முடியும். வைணவ மரபில் கிருஷ்ணன் பாஞ்சஜன்யம் என்கிற சங்கை எடுத்து ஊதும்போதுதான் போர் தொடங்குவதாகவும், மழை பொழிவதாகவும் குறிப்புகள் உள்ளன. எனவே, இசையும் இயற்கையும் தமிழும் ஒரே நேர்கோட்டில் நிறுத்திப் பார்க்கப்பட வேண்டியவை என்கிற உண்மை நமக்கு புலப்படுகிறது.
பண்ணாராய்ச்சி வித்தகர் ப.சுந்தரேசனார், அவரது மாணாக்கர் மா. வைத்தியலிங்கன் ஆகியோர் சிலப்பதிகாரத்தில் நூற்றுக்கணக்கான பண்கள் குறித்த குறிப்புகள் இருப்பதை உணர்த்துகின்றனர். “அப்பனே, பிறவாமை வேண்டும். மீண்டும் பிறப்பு உண்டேல் உன்னை மறவாமை வேண்டும். நீ ஆடுகின்ற போது உன் திருவடிக்கீழ் மகிழ்ந்து பாடிக் கொண்டு இருத்தல் வேண்டும்” என்று வேண்டினார் காரைக்கால் அம்மையார்.
ஞானசம்பந்த பெருமான் தம் பாடல்களில் 23 பண் அமைத்துப் பாடியுள்ளார் என்றும் ஏறத்தாழ 110 சந்தங்களை தன் பாடல்களில் அமைத்துள்ளார் என்றும் அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். திருநீலகண்ட யாழ்ப்பாணரும் இறைவன் புகழை யாழில் இசைத்தார். சுந்தரர், ‘ஏழிசையாய் இசை பயனாய் எம்முடைய தோழனுமாய்’ என்று இறைவனை இசையின் வடிவமாகவே தரிசித்திருக்கிறார். “உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாகும்” என்பார் மகாகவி பாரதி.
பக்தி என்பது இறைவனோடு ஒன்றுவது என்றால், அதற்கான வாகனம் இசைதான். இசை என்பது இயற்கையோடும் இறைவனோடும் கலப்பதற்கான ஒரு பயிற்சிக் களம்.
சங்க இலக்கியங்கள் தொடங்கி சிலப்பதிகாரம், தேவாரம், திவ்யப்பிரபந்தம் வரை பண், பாடலுக்குத் தாளமும் உயிரும் அளிக்கும் மையமாக விளங்கியது. காலப்போக்கில் இசை பல புதிய வடிவங்களை எடுத்தாலும், பண் என்பது தமிழ் இசையின் அடித்தளமாகவும் மரபுக்கும் நவீனத்துக்கும் இடையே பாலமாகவும் இருந்து இசையின் வளர்ச்சியைத் தாங்கி நிற்கிறது. இசை உயிருடன் இருக்கும் வரை தமிழ் உயிருடன் இருக்கும். இந்த ஒலியைப் பாதுகாப்பது நம் கடமை மட்டுமல்ல. நம் உரிமை, உணர்வு - அதுவே நம் அடையாளம்.
கட்டுரையாளர்: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி - தொடர்புக்கு > anaushram44@gmail.com