

இந்திய நாட்டின் சுதந்திர வரலாற்றை விளக்கும் விதமாக கோமல் தியேட்டர் நாடக குழு தயாரிப்பில், ‘என்று தனியும்’ என்ற புதிய தமிழ் நாடகம் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நாரத கான சபாவில் நேற்று 2-வது நாளாக அரங்கேறியது. | படம்: எல்.சீனிவாசன் |
சென்னை: சென்னையில் அரங்கேறிய கோமல் தியேட்டர் குழுவின் ‘என்று தணியும்’ நாடகம், இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றை கண்முன் நிறுத்தி பார்வையாளர்களின் வரவேற்பை பெற்றது.
கோமல் தியேட்டர் குழுவின் தயாரிப்பில், இந்தியாவின் 300 ஆண்டுகால சுதந்திரப் போராட்ட வரலாற்றை தத்ரூபமாக விளக்கும் ‘என்று தணியும்’ என்ற பிரம்மாண்ட வரலாற்று நாடகம் சென்னை ஆழ்வார்பேட்டை நாரத கான சபாவில் நேற்று முன்தினம் அரங்கேற்றம் செய்யப்பட்டது. 2-வது நாளாக நேற்றும் அதே அரங்கில் இந்த நாடகம் நடத்தப்பட்டது.
பிரபல நாடகக் கலைஞர் மறைந்த கோமல் சுவாமிநாதனின் மகள் தாரிணி கோமல் இதை இயக்கியுள்ளார். ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் இதில் பிரின்ட் பார்ட்னராக இணைந்தது.
மகாகவி பாரதியாரின் பாடல் வரிகளுக்கு அவரது கொள்ளுப் பேரன் ராஜ்குமார் பாரதி இசையமைக்க, எல்இடி மற்றும் ஏஐ தொழில்நுட்பக் காட்சிகளை கண்ணன் ருத்ராபதி அமைத்திருந்தார்.
நடனம், சண்டைப் பயிற்சியை மதுசூதனனும், கதை சொல்லியாக மருத்துவர் இளங்கோ குமரனும், கருப்பொருள் நிபுணராக சதீஷ்குமாரும், தயாரிப்பு மற்றும் இயக்கக் குழுவில் சசிகுமார், அனுப் கண்ணனும் பங்காற்றினர்.
ஆடியோ மிக்ஸிங் பணிகளை கோபியும், ஒளி வடிவமைப்பை வினோத்குமாரும், ஆடை வடிவமைப்பை அசோக்குமாரும் மேற்கொண்டனர்.
1608-1947 காலகட்டத்தில் நடைபெற்ற சுதந்திரப் போராட்டத்தின் வீரச் சம்பவங்கள், தியாகங்கள், ஆங்கிலேயரின் ஆதிக்கச் சூழ்ச்சிகள் ஆகியவை ஆழமாக விளக்கப்பட்டன.
காந்தி, நேரு, படேல், பகத்சிங் உள்ளிட்ட 60 வரலாற்றுக் கதாபாத்திரங்களை ஏற்று 19 நடிகர்கள் திறம்பட நடித்து பாராட்டு பெற்றனர். சிவகங்கை அரண்மனையை மீட்டெடுத்தல், மருது பாண்டியர்கள் தூக்கிலிடப்படுதல், ஜான்சி ராணி வீரமரணம், ஜாலியன் வாலாபாக் படுகொலை, உப்பு சத்தியாகிரகம், இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை உள்ளிட்ட காட்சிகள் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தன.
நாடக இயக்குநர் தாரிணி கோமல் கூறும்போது, “இந்த வரலாற்று நாடகத்தை மேடையேற்ற ஒன்றரை ஆண்டுகள் விரிவான கள ஆய்வு மேற்கொண்டோம்.
சுதந்திர தினம், ‘வந்தே மாதரம்’ முழக்கத்தின் 150-வது ஆண்டு, சென்னை தினம் ஆகிய கொண்டாட்டங்களுக்கு நடுவே நாடகம் அரங்கேறியது மகிழ்ச்சி.
தேச விடுதலைக்காக இன்னுயிர் ஈந்த தியாகிகள், பெயர் தெரியாத எண்ணற்ற விடுதலை வீரர்களுக்கு இந்த நாடகத்தை சமர்ப்பிக்கிறோம்” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.