

படம்:எஸ்.சத்தியசீலன்
சென்னை: இந்திய பாரம்பரிய நாட்டுப்புற கலைகளின் ஓவியக் கண்காட்சி, சென்னை இன்கோ மையத்தில் தொடங்கியுள்ளது. இந்த கண்காட்சி வரும் அக்.23-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்திய - கொரிய கலாச்சார மற்றும் தகவல் மையம் சார்பில் இந்தியாவின் பாரம்பரிய நாட்டுப்புற கலை வடிவங்களை பறைசாற்றும் வகையில், ‘இந்தியாவின் வாழும் நாட்டுப்புறக் கலை வடிவங்கள் ஊடே ஒரு பயணம்’ என்ற தலைப்பில் சிறப்பு ஓவியக் கண்காட்சி அடையாறில் உள்ள இன்கோ மையத்தில் நேற்று தொடங்கியது.
ரிது பண்டாரி ஒருங்கிணைப்பில் உருவாகியுள்ள இக்கண்காட்சியில், வார்லி, காவட், பாட், மைசூர் ஓவியங்கள், பிச்வாய், செரியல் சுருள்கள், பட்டாசித்ரா, கேரள சுவரோவியங்கள், கோண்ட், மதுபானி, காளிகாட் மற்றும் காங்ரா உள்ளிட்ட 12 தனித்துவமான இந்திய நாட்டுப்புறக் கலை வடிவங்களின் ஓவியங்கள்ஒரே இடத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
இதற்காக இந்தியா முழுவதும் இந்த 12 பகுதிகளுக்கு 14 மாதங்களாக சுற்றுப்பயணம் செய்து, ரிது பண்டாரி விரிவான களஆய்வு மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. தொடக்க விழாவின் ஒரு பகுதியாக, தக் ஷிணசித்ரா அருங்காட்சியக காப்பாளர் அனிதா பொட்டம்குளம் நெறியாள்கையில் கைவினை பாரம்பரியம் குறித்த கலந்துரையாடலும், தொடர்ந்து ‘டிராவர்சிங் தி டேப்ஸ்ட்ரி’ குறும்படமும் திரையிடப்பட்டன.
இக்கண்காட்சி வரும் அக்டோபர் 23-ம் தேதி வரை (ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்கள் தவிர) மக்களின் பார்வைக்கு வைக்கப்படவுள்ளது. இதுதொடர்பாக ஒருங்கிணைப்பாளர் ரிது பண்டாரி கூறும்போது. “இன்றைய இளைஞர்கள், குலத் தொழிலான பாரம்பரிய கலைகளை தொடர தயக்கம் காட்டுகின்றனர்.
இது அவர்களின் ரத்தத்தில் ஊறிய கலை. ஆனாலும் அதை ஏற்க மறுக்கின்றனர். மாத இறுதியில் உறுதியான சம்பளம் கிடைக்கும் ஐ.டி., பொறியியல், புகைப்படத்துறை போன்ற நவீன வேலைகளையே நாடிச் செல்கின்றனர்.
கடினமாக உழைத்து உருவாக்கிய கலைப்பொருட்கள் எப்போது விற்பனையாகும், எப்போது அதற்கான பலன் கிடைக்கும் என்ற நிச்சயமற்ற தன்மை நிலவுவதே இளைஞர்களின் இந்த முடிவுக்கு முக்கிய காரணம். எனவே, பழங்குடியின கலைகளை ஊக்குவிக்கும் நோக்கத்தில் இந்த பயணத்தை 2022-ம் ஆண்டு தொடங்கினேன்” என்றார்.
பாட் ஓவியக் கலைஞர் விஜய் ஜோஷி, காளிகாட் ஓவியக் கலைஞர் அன்வர் சித்ரகார் மற்றும் கேரள சுவரோவியக் கலைஞர் கிருஷ்ண குமார் ஆகியோருடனான சிறப்பு பயிலரங்குகள் இன்றும், நாளையும் நடைபெற உள்ளன. காலை 10 முதல் மாலை 4.30 மணி வரை பயிற்சி வழங்கப்படும்.
முன்பதிவு அவசியம். கூடுதல் விவரங்களுக்கு 044-24361224 என்ற எண் அல்லது enquiries@inkocentre.org என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளலாம். இந்நிகழ்வில் இன்கோ மையத்தின் இயக்குநர் ரதி ஜாபர், டாஃபே நிறுவனத்தின் தலைவர் மல்லிகா சீனிவாசன், அப்போலோ மருத்துவமனை குழும துணை செயல் தலைவர் ப்ரீத்தா ரெட்டி, திரைப்பட இயக்குநர் ரகுராம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.