ராகமாலிகை ஸ்வர மழை பொழிந்த குருசரண் | சென்னை இசை அரங்கம்
சென்னை: மியூசிக் அகாடமியின் 99-வது இசைவிழா இனிதே நிறைவு பெற்றது. இசைவிழாவின் ஒரு பகுதியாக வித்வான் சிக்கில் குருசரணின் கச்சேரி நடைபெற்றது. அவருக்கு பக்கபலமாக வி.சஞ்சீவ் (வயலின்), டெல்லி எஸ்.சாய்ராம் (மிருதங்கம்), ஹெச்.பிரசன்னா (கடம்) இருந்தனர்.
“ஸரஸிஜாக் ஷ நின்னே கோரி’ எனத் தொடங்கும் ருத்ரபட்டணம் வெங்கடரமணய்யாவின் நாயகி ராக வர்ணத்துடன் கச்சேரியைத் தொடங்கினார் சிக்கல் குருசரண்.
அடுத்ததாக ‘நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய’ எனத் தொடங்கும் ஆண்டாள் திருப்பாவையை கமாஸ் ராகத்தில் விருத்தமாகப் பாடிவிட்டு, முத்துசுவாமி திட்சிதரின் ‘ சந்தான கோபாலகிருஷ்ணம் உபாஸ்மஹே’ எனத் தொடங்கும் க்ருதியைப் பாடினார். ‘ ருக்மிணி சத்யபாமா சமேதம்’ என்ற வரியில் நிரவல் செய்ததும் கச்சேரி சூடு பிடிக்கத் தொடங்கியது.
இந்த க்ருதியில் முத்துசுவாமி தீட்சிதர் குழந்தை வடிவிலான கண்ணனை வர்ணிக்கிறார். குழல் ஊதி, மாடுகளுடன் விளையாடுபவன், சுகர், நாரதர், சனகாதி முனிவர்களால் வணங்கப்படுபவன், நீல மேக சியாமளன், அர்ஜுனனுக்கு பிரியமானவன், தனது தாமரைக் கரங்களால் அனைவருக்கும் செல்வம் அருள்பவன் என்று கண்ணன் போற்றப்படுகிறான்.
அடுத்ததாக முத்துசுவாமி தீட்சிதரின் உதய ரவிச்சந்திரிகா (சுத்த தன்யாசி) ராகத்தில் அமைந்த க்ருதியை ( குருகுஹ மூர்த்தே சிச்சக்தி ஸ்பூர்த்தே) பாடினார். ‘ஆத்மோதய ரவிச்சந்திரிகா’ என்ற வரியைத் தேர்ந்தெடுத்து அதற்கு ஸ்வரக் கோர்வைகளைப் பாடினார். பிரதான ராகத்துக்கு செல்வதற்கு முன்பு பூச்சி நிவாஸ அய்யங்காரின் சாரங்கா ராக க்ருதியை (ராமா நின்னே நம்மிதினி) பாடினார்.
பிரதான ராகமாக பைரவி அமைந்தது. விஸ்தாரமான ஆலாபனைக்குப் பிறகு தியாகராஜ சுவாமியின் ‘கொலுவையுன்னாடே கோதண்டபாணி’ எனத் தொடங்கும் கீர்த்தனையைப் பாடினார். பல்லவி வரியில் நிரவல் செய்து, பின்னர் ‘மனசு ரஞ்சில்ல சூரசட்டுலு’ என்ற வரிக்கு ஸ்வரக் கோர்வைகளைப் பாடினார். தனி ஆவர்த்தனத்தில் சாய்ராமும் பிரசன்னாவும் தங்கள் கோர்வைகளால் கச்சேரிக்கு அழகு சேர்த்தனர்.
ராகம் தானம் பல்லவிக்கு பாவனி ராகத்தை தேர்ந்தெடுத்தார் குருசரண். ‘பாலின்சு காமாட்சி பாவனி துரிதாபஹாரிணி அம்ப’ என்ற பல்லவியை கண்ட ஜாதி திரிபுட தாளத்தில் (2 களை) த்ரிகாலங்களில் பாடினார். ராகமாலிகை ஸ்வரங்கள், பவானி, மோகன கல்யாணி, அம்ருதவாஹினி ராகங்களில் அமைந்தன.
தொடக்கம் முதலே பாடகருக்கு அனுசரணையாக வயலின் வாசித்து வந்த சஞ்சீவ், பிரதான ராகம், ராகமாலிகை ஸ்வரங்களில் தனது தனித்துவத்தை வெளிப்படுத்தினார். கிருஷ்ண பஜன், லால்குடி ஜி.ஜெயராமனின் ராகே ராகத் தில்லானா (ஈவேள நன்னு காவுனு) ஆகியவற்றுடன் கச்சேரியை நிறைவு செய்தார் சிக்கில் குருசரண்.
இசைக் குடும்பத்தில் பிறந்த சிக்கில் குருசரண், வித்வான் வைக்கல் ஞானஸ் கந்தன், வித்வான் பி.கிருஷ்ணமூர்த்தி ஆகியோரிடம் இசை பயின்றார். தற்போது, இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் கச்சேரி செய்து வருகிறார். மியூசிக் அகாடமி, இசைக் கச்சேரிகள் மட்டுமின்றி, 1930-களில் இருந்து, நடனத்துக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து, அது தொடர்பான கருந்தரங்குகளையும் நடத்தி வருகிறது.
இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக உலகம் முழுவதும் இருந்து நடனக் கலைஞர்கள், ரசிகர்கள் டிசம்பர், ஜனவரியில் சென்னை வருவது வழக்கம். மியூசிக் அகாடமியின் நாட்டிய விழா ஜன. 3-ம் தேதி (இன்று) மாலை தொடங்குகிறது.
