

சென்னை: சென்னை மியூசிக் அகாடமி இசைவிழாவுக்கு என்று ஒரு தனி மதிப்பு உண்டு. விருதுகளில் சிறந்ததாக மியூசிக் அகாடமி வழங்கும் ‘சங்கீத கலாநிதி’ விருது போற்றப்படுகிறது. இந்த சபையில் கச்சேரி நிகழ்த்துவது, சாதனையாகவே பார்க்கப்படுகிறது.
மியூசிக் அகாடமியின் 99-வது இசைவிழாவில், வித்வான் ஆதித்ய நாராயணனின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இவர் வித்வான் டி.எம்.கிருஷ்ணாவிடமும், விதூஷி சுகுணா வரதாச்சாரியிடமும் இசை பயின்று வருகிறார். சிறுவயது முதலே பல்வேறு போட்டிகளில் பங்கேற்று,பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
கச்சேரியில் அவருக்கு பக்கபலமாக வி.எஸ். கோகுல் (வயலின்), எல் சுதர்ஷன் ஸ்ரீநிவாஸ் (மிருதங்கம்), சுனாத் அனூர் (கஞ்சிரா) இருந்தனர். தியாகராஜ சுவாமியின் கௌளிபந்து கீர்த்தனையுடன் (தெரதியக ராதா) கச்சேரியைத் தொடங்கினார் ஆதித்ய நாராயணன். அடுத்தபடியாக முத்துசுவாமி தீட்சிதரின் ஹமீர் கல்யாணி ராகத்தில் அமைந்த க்ருதி ‘பரிமள ரங்கநாதம் பஜேஹம்’ பாடி, ரங்கனை வணங்கினார்.
இந்த க்ருதியில் திருமால், தசாவதாரம் எடுத்தவராகவும், தாமரை போன்ற கண்களை உடையவராகவும் பக்தர்களைக் காத்தருள்பவராகவும் போற்றப்படுகிறார்.
கச்சேரியை மிளிர வைத்த ராகங்கள்: கச்சேரியின் பிரதான ராகமாக தோடி அமைந்தது. விஸ்தாரமான ஆலாபனையுடன் தொடங்கி, தியாகராஜ சுவாமியின் ‘எந்துகு தயராதுரா’ என்ற கீர்த்தனையை, நிரவல், ஸ்வரக் கோர்வைகளுடன் பாடி நிறைவு செய்தார். தனி ஆவர்த்தனத்தில் சுதர்ஷன் ஸ்ரீநிவாஸும் சுனாத் அனூரும் போட்டி போட்டுக் கொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.
காம்போஜி ராகத்தில் அமைந்த ராகம் தானம் பல்லவி, கச்சேரியை உயரத்துக்கு கொண்டு சென்றது. திஸ்ர திரிபுட தாளம் 4 களையில் அமைந்த ‘ஆனந்த நடனம் ஆடினார் ததிமி ததிம் என கனகசபையில்’ பல்லவியை மிக எளிதாகக் கையாண்டார் ஆதித்ய நாராயணன்.
இந்த தாளத்துக்கு நல்ல பயிற்சி வேண்டும். பாடகருக்கு இணையாக தனது வயலினில், ஈடு கொடுத்தார் கோகுல். த்ரிகாலத்தில் (விளம்ப, மத்திய, துரித) பல்லவியை இருவரும் வெளிப்படுத்திய விதம் அருமை.
கூடுதலாக இந்த பல்லவியை பூர்விகல்யாணி மற்றும் குந்தலவராளி ராகங்களில் பாடியது கச்சேரியை மிளிர வைத்தது. ‘ஏலராதாயனே காமினி’ என்ற பைரவி ராக சின்னய்யாவின் ஜாவளியுடன் கச்சேரியை நிறைவு செய்தார் ஆதித்ய நாராயணன்.