

சென்னை: சென்னை மியூசிக் அகாடமியின் 99-வது இசைவிழா நிகழ்ச்சிகள் தொடங்கிவிட்டன. சென்னையில் ஒவ்வொரு சபாவிலும் இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றாலும், மியூசிக் அகாடமிக்கு என்று ஒரு தனி பெயர், முத்திரை உண்டு. நூற்றாண்டை நோக்கி பயணிக்கும் இந்த சபையில், இசை கச்சேரி நிகழ்த்துவதை, கலைஞர்கள் பெரும் சாதனையாக கருதுவர்.
பல தேர்வுகளைக் கடந்த பின்னரே, ஒருவர் மியூசிக் அகாடமி மேடையில் பாட அனுமதிக்கப்படுவதுண்டு. வளர்ந்து வரும் இசை கலைஞர் அபிஷேக் ரவிசங்கரின் கச்சேரி, மியூசிக் அகாடமியில் நடைபெற்றது.
முதலில் தன் தாயிடம் இசை கற்கத் தொடங்கிய அபிஷேக் ரவிசங்கர், இசைமேதை பி.எஸ்.நாராயணசுவாமியின் சீடரான ஏ.எஸ்.முரளியிடம் இசைபயின்று, தன்னை மெருகேற்றிக் கொண்டார். கச்சேரியில் அவருக்கு பக்கபலமாக பார்கவ் டும்கூர் (வயலின்), ஸ்ரீ ராம் சீனிவாசன் (மிருதங்கம்) இருந்தனர்.
ஏராநாபை எனத் தொடங்கும் பட்டணம் சுப்பிரமணிய ஐயரின் தோடி ராக வர்ணத்துடன் கச்சேரியைத் தொடங்கினார் அபிஷேக் ரவிசங்கர். அடுத்ததாக மார்கழி மாதத்தின் முதல் நாள் திருப்பாவையை (மார்கழித்திங்கள் - நாட்டை ராகம்) பாடினார். அவர் பாடிய ஒவ்வொரு வரியிலும் நிழல் போல வயலினில் பார்கவ் தொடர்ந்து கொண்டு வந்தார்.
கல்யாணி ராகத்தில் சிறிய ஆலாபனை செய்துவிட்டு, முத்துசுவாமி தீட்சிதரின், ‘பஜரே ரே சித்த’ என்ற க்ருதியை எடுத்துக் கொண்டார். சரணத்தில் வரும் ‘தேவீம் சக்தி பீஜோத்பவ மாத்ரு கார்ண ஸரீரிணீம்’என்ற வரியை நிரவல் செய்தார்.
இந்தப் பாடலில் பாலாம்பிகா பக்தர்களுக்கு கல்ப விருட்சம் போல் இருப்பதாக போற்றப்படுகிறாள். அதன் பின்னர் 44-வது மேளகர்த்தா பவப்ரியா ராகத்தில் அமைந்த தியாகராஜ கீர்த்தனையை (ஸ்ரீகாந்த நீயெட) பாடிவிட்டு, பிரதான ராகமாக கரஹரப்ரியாவில் அமைந்த தியாகராஜ கீர்த்தனையை தேர்ந்தெடுத்தார் அபிஷேக்.
விஸ்தாரமான ஆலாபனைக்குப் பின் பிரபலமான ‘சக்கனிராஜ மார்க்கமு’ கீர்த்தனைத் தொடங்கி, அதில் ‘கண்டிகி சுந்தர’ என்ற வரியில் நிரவல் செய்து, அதற்கு ஸ்வரக் கோர்வைகளைப் பாடினார். ஸ்ரீராம் சீனிவாசன் தனி ஆவர்த்தனத்தில் மிளிர்ந்தார்.
மோகன ராகத்தில் அமைந்த ஸ்வாதித் திருநாளின் கீர்த்தனை, அருணகிரிநாதர் திருப்புகழுடன் கச்சேரி நிறைவு பெற்றது. அபிஷேக் ரவிசங்கர் பாடியபோது, ஆங்காங்கே செம்மங்குடி பாணி தென்பட்டது. செம்மங்குடி சீனிவாசய்யரிடம் இசை பயின்றவர் பி.எஸ்.நாராயணசுவாமி என்பது குறிப்பிடத்தக்கது.