

மியூசிக் அகாடமியின் சங்கீத கலாநிதி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கும் வயலின் இசை கலைஞர் ஆர்.கே.ஸ்ரீராம்குமாருக்கு `தி இந்து' குழுமம் வழங்கும் சங்கீத கலாநிதி எம்.எஸ்.சுப்புலட்சுமி விருதை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வழங்கினார். உடன் மியூசிக் அகாடமியின் தலைவர் என்.முரளி, செயலாளர் வி.ஸ்ரீகாந்த், பாம்பே ஜெயஸ்ரீ, டி.எம்.கிருஷ்ணா ஆகியோர். | படம்: எஸ்.சத்தியசீலன் |
சென்னை: சென்னை மியூசிக் அகாடமியின் 99-வது இசைவிழாவின் தொடக்க நாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், கர்னாடக இசையை இளம் தலைமுறையினர் உலகம் முழுவதும் பரப்ப வேண்டும் என்றார்.
சென்னை மியூசிக் அகாடமியின் 99-வது இசை விழா நேற்று தொடங்கியது. தொடக்க விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார்.
மியூசிக் அகாடமியின் சங்கீத கலாநிதி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கும் ஆர்.கே.ஸ்ரீராம்குமாருக்கு ‘தி இந்து’ குழுமம் வழங்கும் ரூ.1 லட்சம் பணமுடிப்புடன் கூடிய சங்கீத கலாநிதி எம்.எஸ்.சுப்புலட்சுமி விருதை அளித்து சிறப்புரை ஆற்றினார்.
விழாவில் அவர் பேசியதாவது: இளம் தலைமுறையினருக்கு எதிலும் புதுமையைப் புகுத்துவதில் ஆர்வம் உள்ளது. அவர்கள் பாரம்பரியமான கர்னாடக இசையிலும் தேர்ச்சி பெற வேண்டும்.
இந்தியாவில் உள்ள அரங்கங்களில் கச்சேரி செய்வதோடு நிற்காமல், இந்த இசையை உலகம் முழுவதும் பரப்ப வேண்டும். இதில் பக்தி, அர்ப்பணிப்பு என்று அனைத்து அம்சங்களும் உள்ளன. இந்த இசையை மிகுந்த ஆர்வத்துடன், தனது மாணவர்களுக்கு கொண்டு சேர்க்கும் ஆர்.கே.ஸ்ரீராம்குமாரை வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
ஆர்.கே.ஸ்ரீராம்குமார் தனது ஏற்புரையில், “எம்.எஸ். அம்மா எங்கள் குடும்பத்தில் ஒருவர் போல்தான். `தி இந்து' குழுமம் வழங்கியிருக்கும் சங்கீத கலாநிதி எம்.எஸ்.சுப்பு லட்சுமி விருது, எனக்கு மிகப் பெரிய அங்கீகாரம் ஆகும். அதையும் தாண்டி இதன்மூலம், எனக்கு அவரது ஆசி கிடைத்ததாகவே நினைக்கிறேன்” என்றார்.
இதைத் தொடர்ந்து மியூசிக் அகாடமியின் ஆண்டு மலர், விழா மலரை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட, அவற்றை ஆர்.கே. ஸ்ரீராம்குமாரும், டி.எம்.கிருஷ்ணாவும் பெற்றுக் கொண்டனர்.
முன்னதாக வரவேற்புரை ஆற்றிய மியூசிக் அகாடமியின் தலைவர் என்.முரளி பேசியதாவது: 1992-ம் ஆண்டு வெளிவந்த ரோஜா திரைப்படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்தவர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்.
இந்த ஆண்டுக்கான மியூசிக் அகாடமியின் சங்கீத கலாநிதி விருதை 2026-ம் ஆண்டு ஜன. 1-ம் தேதி ஆர்.கே.ஸ்ரீராம்குமாருக்கு, பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தின் முன்னாள் இசைப் பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர் டாக்டர் என்.ராஜம் வழங்குவார்.
சங்கீத கலா ஆச்சார்யா விருதை பிரபல தவில் வித்வான் தஞ்சாவூர் கோவிந்தராஜன், விதூஷி சியாமளா வெங்கடேஸ்வரன் பெறுவார்கள். டிடிகே விருதை கதகளி கலைஞர் மாடம்பி சுப்பிரமணியன் நம்பூதிரி, வீணை விற்பன்னர்கள் ஜே.டி.ஜெயராஜ் கிருஷ்ணன் மற்றும் ஜெயஸ்ரீ ஜெயராஜ் கிருஷ்ணன் ஆகியோர் பெறுகின்றனர்.
இசை அறிஞர் விருதை பேராசிரியர் சி.ஏ.ஸ்ரீதரா பெறுவார். இந்த ஆண்டு 80 இசை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான ஸ்ரீ முத்துசுவாமி தீட்ஷிதரின் 250-வது பிறந்தநாள் விழா இவ்வாண்டு கொண்டாடப்படுவதால், மியூசிக் அகாடமியின் காலைக் கச்சேரிகள், கருத்தரங்குகள் அவரது க்ருதிகள் தொடர்பானவையாக இருக்கும்.
ஜன.3-ம் தேதி தொடங்கவுள்ள 19-ம் ஆண்டு நாட்டிய விழாவில் பரதநாட்டிய கலைஞர் ஊர்மிளா சத்யநாராயணாவுக்கு, ‘நிருத்ய கலாநிதி’ விருதை, ஜப்பான் நாட்டின் துணைத் தூதர் தகாஹாஷி முனியோ வழங்குகிறார். இவ்வாறு அவர் பேசினார்.மியூசிக் அகாடமி செயலாளர் மீனாட்சி சுமதி கிருஷ்ணன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். செயலாளர் வி.ஸ்ரீகாந்த் நன்றியுரை ஆற்றினார்.