

இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியா மட்டுமல்லாமல் இலங்கை, இந்தோனேசியா, சிங்கப்பூர், துபாய், சுவிட்சர்லாந்து, அமெரிக்கா, கனடா மற்றும் பல நாடுகளில் வயலின் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருபவர் கலைஞர் தில்லை ந.முத்துக்குமரன்.
எப்போதும் கற்றுக்கொள்ளும் ஆர்வத்தோடு தன்னை மாணவராக நினைத்துக் கொள்பவர்தான் மிகச் சிறந்த ஆசிரியராகவும் பரிமளிக்க முடியும் என்பதற்கு உதாரணம் முத்துக்குமரன்.
பொன் குமாரவேல், அண்ணாமலைப் பல்கலைக்கழக வயலின் பேராசிரியர் மதுரை ராமையா, சென்னையில் வி.எல்.குமார் மற்றும் வி.எல்.வி. சுதர்சன் என்று தனக்கு இசைக் கொடை அளித்த குருமார்களைப் பட்டியலிட்ட முத்துக்குமரன், தற்போது அகில இந்திய வானொலியில் முத்திரை பதித்த வயலின் வித்தகரான டி.கே.வி. ராமானுஜ சார்யலு என்பவரிடம் இசைப் பயிற்சியைத் தொடர்கிறார்.
அகில இந்திய வானொலி நிலையத்தின் வாத்தியக் கலைஞரான முத்துக்குமரன், கடந்த 24 ஆண்டுகளாக இசைத் துறையில் குரலிசை, திருமுறை இசை, பரதநாட்டிய இசை ஆகிய நிகழ்ச்சிகளில் பல முன்னணிக் கலைஞர்களுக்கு வயலின் வாசித்து வருகிறார்.
கடந்த 2002 முதல் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் சார்பாக கனடா நாட்டில் உள்ள சவுத் ஏசியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ் நிறுவனத்துக்குத் தொலைதூரக் கல்வி இயக்கக இசை வகுப்புகளை நடத்தி வருகிறார். மேலும், அண்ணாமலை பல்கலைக்கழக இசைத்துறை ஆராய்ச்சி மாணவர்களுக்கு நெறியாளராகவும் பணியாற்றி வருகிறார்.
பேர் சொல்லும் சிஷ்யன்!
“எவ்வளவோ மாணவர்களுக்குக் கலையை கற்றுத் தருகிறீர்கள். ஆனால், குறிப்பாக இந்த ஒரு மாணவரால் நாம் சொல்லிக் கொடுக்கும் கலைக்கும் நமக்கும் மிகப் பெரிய கவுரவம் காத்திருக்கிறது என்று நீங்கள் நம்பும் ஒரு மாணவனைப் பற்றிச் சொல்லுங்கள்?” என்றோம் முத்துக்குமரனிடம்.
“ஓர் ஆசிரியனுக்கு எல்லா மாணவர்களுமே திறமைசாலிகளாக உயர வேண்டும் என்ற நினைப்புதான் இருக்கும். ஆனாலும், நாம் கற்றுக்கொடுக்கும் கலையை அடுத்த கட்டத்துக்கு நிச்சயம் இந்த மாணவனால் கொண்டுசெல்ல முடியும் என்ற நம்பிக்கையைச் சில மாணவர்கள் ஏற்படுத்துவார்கள். அப்படிப்பட்ட ஒரு மாணவனாக நான் நினைப்பது கவிஷைத்தான்.
பரதநாட்டியக் கலைக்கு ஆணிவேராகத் திகழ்ந்தவர்கள் தஞ்சை நால்வர். அந்த தஞ்சை நால்வரின் வழிவந்த நாட்டிய மேதை கிட்டப்பா பிள்ளையின் கொள்ளுப்பேரன்தான் கவிஷ். இணைய வழியில்தான் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவருக்கு வயலின் சொல்லித் தருகிறேன். அவ்வளவு நேர்த்தியோடு கற்றுக்கொள்கிறார். பாரம்பரியமான இசை, நாட்டிய மரபில் துளிர்த்திருக்கும் தளிரான கவிஷிடம் அபாரமான திறமை இருப்பதைக் காண்கிறேன். ஸ்ருதியோடு பாடவும் தாளம் தப்பாமல் வாசிக்கவும் செய்கிறார். என்னுடைய கணிப்பில் இன்னும் இரண்டு ஆண்டுகளில் ஒரு கச்சேரியை நிர்வகிக்கும் அளவுக்கு அவரின் திறமை வளர்ந்துவிடும் என்று நம்புகிறேன்” என்றார்.
கவிஷ் தினேஷ் இருப்பது பென்சில்வேனியாவில். இணையம் வழியாக அவருக்குக் கடந்த இரண்டு ஆண்டுகளாக வயலின் சொல்லித்தருகிறார் முத்துக்குமரன்.
குரு முத்துக்குமரனைப் பற்றியும் வயலின் என்னும் வாத்தியத்தை ஏன் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைத்தீர்கள் என்ற கேள்விக்கும் பதில் சொல்வதற்கு முத்துக்குமரனின் சிஷ்யன் கவிஷ் நம்மிடம் பேசினார்.
வயலின் பேசிய கதை!
“லண்டன் டிரினிடி இசைப் பள்ளியில் கீபோர்ட் வாசிப்பில் இரண்டாம் கிரேடு படிக்கிறேன். அதோடு வயலின் பயிற்சியும் எடுத்துக்கொள்கிறேன்.”
எத்தனையோ வாத்தியங்கள் இருக்கும் போது, வயலினை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்?
என்னுடைய முப்பாட்டனும் தஞ்சை நால்வர்களில் ஒருவரான வடிவேலுவின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை என்னுடைய தந்தை ஒருமுறை கூறினார். அது இதுதான்:
தஞ்சை நால்வரில் ஒருவரான வடிவேலு ஒருமுறை காட்டுவழியில் வரும்போது திருடர்கள் அவரை வழிமறித்திருக்கின்றனர். அவரிடமிருந்து எல்லாப் பொருட்களையும் பறித்தனர். இறுதியாக அவரிடம் வயலின் ஒன்று இருந்தது.
“இதை மட்டும் விட்டுவிடுங்கள்… இது என்னுடைய குழந்தை..” என்றார் வடிவேலு.
“குழந்தையா…? அப்படியென்றால் குழந்தை பேசுமா?” என்றனர் திருடர்கள்.
“நீங்கள் குழந்தையிடம் பேசினால் பதில் சொல்லும்” என்ற வடிவேலு, திருடர்களின் பல கேள்விகளுக்கான பதிலை வயலினை வாசித்தே புரிய வைத்திருக்கிறார்.
இதைக் கண்டு வியந்த திருடர்கள் அவரிடம் எடுத்த பொருட்களையும் அவரிடமே கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டனர். இதைக் கேட்ட எனக்கும் வயலின் வாசிப்பதற்குக் கற்றுக்கொள்ள வேண்டும் என்னும் எண்ணம் ஏற்பட்டது.
அப்படிப்பட்ட வடிவேலுவுக்குத் திருவாங்கூரை ஆண்ட மகாராஜா, தந்தத்தால் செய்யப்பட்ட ஒரு வயலினைப் பரிசளித்திருக்கிறார். அந்த வயலின் இன்றைக்கும் என்னுடைய முன்னோர்கள் தஞ்சை நால்வர் வாழ்ந்த தஞ்சாவூர் வீட்டில் இருக்கிறது. நான் இந்தியாவுக்குச் சென்றபோது அதை என்னுடைய தாத்தா என்னிடம் எடுத்துக்காட்டினார்.
உங்களுடைய குருவைப் பற்றிச் சொல்லுங்கள்?
என்னுடைய வயலின் குரு முத்துக்குமரன். அவர் வாரத்துக்கு ஒரு முறைதான் சொல்லித்தருவார். நன்றாகப் புரியும் வகையில் சொல்லித்தருவார். இதுவரை நான் அவரை நேரில் பார்த்தது இல்லை. அவர் வயலின் வாசிப்பதைப் பார்த்தாலே அவ்வளவு ஆசையாக இருக்கும். முதலில் தாளம் போட்டுப் பாடிக் காட்டுவார். அதன்பின் வயலினில் வாசித்துக் காட்டுவார்.
அவர் ஒருமுறை சொல்லித்தரும் விஷயத்தை வயலினில் ஒரு வாரத்துக்கு வாசித்துப் பார்ப்பேன். வீட்டுப் பாடங்களையும் தருவார். அதை ஒரு வாரத்துக்குள் முடித்துவிட வேண்டும். அடுத்த வாரம் எப்போது வரும் என்று ஆவலோடு காத்திருப்பேன்” என்கிறார் ஐந்தாம் வகுப்பு மாணவரான கவிஷ் தினேஷ்.