Last Updated : 10 May, 2014 12:00 AM

 

Published : 10 May 2014 12:00 AM
Last Updated : 10 May 2014 12:00 AM

நாமும் காணாமல் போகிறோம்

'யானை காணாமலாகிறது’ இது ஹாருகி முரகாமியின் சிறுகதை. ச.ஆறுமுகம் மொழிபெயர்ப்பில் மலைகள் பதிப்பக வெளியீடாக வந்துள்ளது. இக்கதையை வாசித்திருந்ததால் இதை எப்படி நாடகமாக்குவார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.

ஜப்பான் தலைநகர், டோக்கியோவில் இருக்கும் ஒரு வனவிலங்குப் பூங்காவை நடத்தும் தனியாரொருவர் அதனை நடத்த முடியாமல் கட்டுமான நிறுவனமான பன்னாட்டு கம்பெனி யொன்றிற்கு விற்றுவிட, அப்பூங்காவில் இருக்கும் யானையை மட்டும் யாரும் வாங்கிச்செல்லாமல் இருக்க அதுவே அவ்விடத்தில் அடுக்குமாடிக் குடியிருப்புகளை கட்டவிருந்த அந்நிறுவனத்திற்கு பெரிய இடைஞ்சலாகிவிட, பின்னர் அப்பன்னாட்டு நிறுவனத்திற்கு உதவும் விதமாக அந்த யானையை நகர மன்றமே தத்தெடுத்து அதைப் பராமரித்துக்கொண்டிருக்கையில் அது ஒரு நாள் காணாமல் போய்விடுகிறது.

இக்கதையில் யானை ஒரு குறியீடாக மட்டுமே பயன்படுத்தப்பட்டிருந்தது.

பரபரப்பாகப் பேசப்படும் விஷயங்கள் பிறகு நாளடைவில் ஒரு கட்டத்தில் சுவடற்றுப் போய்விடுகின்றன என்பதை வெளிப்படையாகவும், வளர்ச்சியில் ஏற்படும் சூழல் மாற்றம், இயற்கை அழிவு என்பதைப் பூடகமாகவும் இக்கதை பேசுகிறது. பிரளயன் தன் அனுபவ முதிர்ச்சியால் யானை கதையையும் சொல்லி, கதையின் உள்ளீடாக இருக்கும் அதன் விளைவுகளையும் நாடகமாக்கியிருப்பது சவாலானது.

நாடகத்தில் கதைசொல்லிகளாய் வரும் குழுவினரது உரையாடல் மூலம் முரகாமியின் கதையைக் கூறப் பின் காட்சியாக்கம் செய்திருப்பது நல்ல யுத்தி. இடையிடையே யானைகள் பற்றிய காணொளிப் படக் காட்சியும் ஒளிபரப்பியது தனித்திருந்து உறுத்தலாக இல்லாமல் நாடகத்தின் காட்சிகளோடு அதுவும் ஒரு காட்சியாக மாறியிருந்தது. வனவிலங்குப் பூங்காவை பன்னாட்டு நிறுவனத்திற்கு விற்றுவிட, அதிலிருக்கும் யானையை நகரம் தத்தெடுக்கும் தீர்மானத்தை நகர மன்றத்தில் நிறைவேற்றும் காட்சியில் கட்சிகளின் பொறுப்பற்ற விவாதங்கள், ஊழல்கள், மிளகாய்ப்பொடி வீசுதல், சபை வெளியேற்றம், தீர்மான நிறைவேற்றம் எனச் சமகால அரசியல் கட்சிகளின் போக்குகளை நினைவூட்ட அப்போதைக்கு நாம் சிரித்தாலும் இவர்களின் பொறுப்பற்ற தீர்மானங்களில்தானே நம் வாழ்வும் இருக்கிறது என்பதை நினைக்க நமக்கென்னவென நாம் ஒதுங்கியிருப்பதும் சுட்டது.

அதேபோல் யானையை நகரத்திற்கு அர்ப்பணிக்கும் நாளில் தலைவர் வருவதைச் சித்தரிக்கும் காட்சியில் நடந்துகொண்டிருக்கும் தேர்தல் கூத்துகள் நினைவூட்டின. விண்ணில் விமானம் கடக்கும் ஓசைக்கு அமைச்சர்கள் மண்ணில் வீழ்ந்து வணங்கும் காட்சியில் அரங்கில் சிரிப்படங்க நெடுநேரமானது.

பல சமகால உண்மை முடிச்சுகளை அவிழ்த்தபடியே இருந்தன அடுத்தடுத்த காட்சிகள்.

இரவில் யானைக் கொட்டகையில் தனித்திருக்கும் யானையிடம் யானைப் பாகன் உரையாடும் காட்சியில் கண்கலங்கியது.

கதையில் வருவது போலவே நாடகத்திலும் முரகாமியும் ஒரு பாத்திரமாக வருகிறார். நடைப்பயிற்சியின்போது ஒரு பாறை மீதிருந்து பார்க்க யானைக் கொட்டகையின் மேலிருக்கும் ஜன்னல் வழியே யானையும் யானைப் பாகனும் நன்றாக தெரிகிறார்கள். தினசரி அவர்களைக் கவனிப்பது அவருக்கு வழக்கமான ஒன்றாகிவிட்டிருந்தது. ஒரு நாள் யானை சிறியதாகிக்கொண்டிருக்க, பாகன் பெரியதாகிக்கொண்டிருந்ததைக் காண்கிறார்.

அதன் பின் இக்காட்சிமீது, கதைசொல்லிகள் குழு நிகழ்த்தும் உரையாடல் சமகாலச் சூழலை பிரதிபலிப்பதாக இருக்கிறது. முரகாமியோ, மொழிபெயர்ப்புசெய்த ச. ஆறுமுகமோ ஓசூரில் வாழ்ந்தவர்கள் அல்ல.

எனினும் இந்நாடக நிகழ்வு இதனை ஓசூருக்கான ஒன்றாக மாற்றிவிட்டது. ஏனெனில் இவ்வூரில்தான் யானை அடிக்கடி ஊருக்குள் வந்துவிடுகிறது. இவ்வூரைச் சுற்றியுள்ள மலைப் பகுதிகளில்தான் கிரானைட் நிறுவனங்கள் மலைகளை வெடிவைத்து தகர்த்து,காட்டுயிரிகளை வனங்களை விட்டு விரட்டிக்கொண்டிருக்கின்றன. அசோக் லேலண்ட் தொழிலகப் பள்ளியில் ஒரு யானை வந்து பதினைந்து நாட்கள் இருந்துவிட்டுப் போனது. பதினைந்து நாளும் பள்ளிக்கு விடுமுறை.

இயற்கை வளங்கள் கண்முன்னால் அழிந்துகொண்டிருப்பதை இம்மி பிசகாமல் சொல்லிக் கொண்டிருப்பதுபோல் இருந்தது இந்நாடகம்.

யாரின் அழிவில் யாரின் வளர்ச்சி என்பது முக்கியம். வளர்ச்சி குறித்தே நாம் சொல்லிக்கொள்ளும் நியாயங்கள். அதன் விளைவால் உண்டாகும் கேடுகள் குறித்தெல்லாம் கிஞ்த்தும் கவலைப்படுவதில்லை. தன் வளர்ச்சிக்காக எல்லாவற்றையும் கடந்த காலமாக்கும் போக்கும் நிலவுகிறது.

இது யானை வாழ்ந்த இடம், இது மயில் வாழ்ந்த இடம் என நாடகத்தில் காட்டப்படுவதுபோல. மனிதன்தான் முதன்மையானவன், ஆளப் பிறந்தவன் மனிதன், அவனுக்கு எதையும் அழிக்கும் உரிமை உண்டு. அவன் வளர்ச்சியே சமூக வளர்ச்சி என்பதான ஆங்காரத்தால் அவன் செய்யும் அட்டூழியங்களை நினைவூட்டியது நாடகம்.

திடுமென ஒரு நாள் யானை காணாமல் போகிறது. எங்கும் ஒரே பரபரப்பு, அது குறித்த பரபரப்பான செய்திகள், யூகங்கள், சாமியார்களின் குறிகள் என ஒரே பதற்றமான சூழல், பின் அதுகுறித்த எந்த நினைவும் இல்லாமல் போதல், இன்னும் இச்சூழல் தொடர்ந்தபடியே இருப்பதைக் கேள்விக்குள்ளாக்கின காட்சிகள். மனம் பதைபதைக்கும் விஷயங்களையும் மறந்துவிட்டதாக கூறி இயல்பான நம் வாழ்விற்கு எவ்வித குந்தகமும் ஏற்படாது பார்த்துக்கொள்வதை நினைவூட்டியது.

சீரியல்களைவிட அதிகமாகிப்போனது டாக்-ஷோ. பிரளயனும் நாடகத்தில் அப்படியான ஒரு பேச்சரங்கத்தை ஏற்படுத்தியிருந்தார். குரலற்றவர்களின் குரல் எனும் நிகழ்வில் இன்று வளர்ச்சி, வரமா? சாபமா? எனும் தலைப்போடு. இதில் மனிதர்களோடு மான் முயல் கரடி யானை மயில் என வன விலங்குகளும் கலந்துகொண்டு மனிதர்களின் அட்டூழியங்களைப் பேசியவனவெல்லாம் காட்சியாக்கப்பட்டிருந்தது நம்மின் கேவலமான நடவடிக்கைகளை நினைவூட்டின.

“யானைகளின் பாதைகளை மறித்து மனிதர்களின் அட்டூழியம்! பண்ணை வீடுகள் கட்டினர்” “பாம்புகளின் வாழ்விடமான பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதிகளை ஆக்கிரமித்து அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டும் மனிதர்களின் அராஜகம்! பிறந்த மண்ணிலே அகதிகளாக்கப்படும் பாம்புகளின் அவலம்!!” என காட்டுயிரிகள் நடத்தும் பத்திரிகைச் செய்திகள் நகைச்சுவையாக இருந்தாலும் இருப்பதிலேயே மனிதன்தான் ஆபத்தான விலங்கு என்பதை உணர்த்தத் தவறவில்லை

முரகாமிக்கும் அவரது தோழிக்குமான உரையாடல் முக்கியத்துவம் வாய்ந்தது. தான் தினமும் யானைக் கொட்டகையின் பின்புறம் இருக்கும் பாறையின் மேல் இருந்து பார்க்க யானையும் யானைப் பாகனும் தெரிவார்கள். தனித்திருக்கையில் ஒருவருக்கொருவர் தங்கள் அன்பைப் பரிமாறிக்கொள்வார்கள். அப்படித்தான் ஒரு நாள் பார்க்கையில் யானை சிறிதாகிக்கொண்டே வந்தது, பாகன் பெரிதாகிக்கொண்டே போனான் என்கிறார். அவர் தோழியோ ‘‘அதாவது யானை சின்னதாகிக்கொண்டே போய் காற்றில் கரைந்து விட்டது என்கிறீர்” என மெல்லிய புன்னகையை உதிர்த்து நகர்ந்துவிடுகிறார். தான் கூறும் உண்மையை இப்படித்தான் எல்லோரும் புறக்கணிப்பார்கள் என விரக்தியோடு கதையை முடிக்கிறார் முரகாமி.

இயற்கை அழிந்துவருவதைத்தான் யானை சிறிதாகிவருகிறது என்றும் மனிதனின் பேராசை அகங்காரம் வளர்ந்துவருவதைத்தான் பாகன் பெரிதாகிவருவதாகவும் முரகாமி சொல்கிறாரோ என்று குறுக்கிடும் நாடகக் கதைசொல்லிகளின் கேள்வி, கதைக்குக் கூடுதல் அர்த்தத்தை பரிமாணத்தை வழங்குகிறது.

அதன் பின் நிகழ்த்திய காட்சியில் மனம் பதைத்தது. அரங்கில் யானை ஒன்று நிற்க, பன்னாட்டு முதலாளிகள் அதைத் துண்டுதுண்டாக வெட்டி வீசிவிட அது படிந்த காடுகளையெல்லாம் தங்களின் நிறுவனங்களை நிறுவிவிட, வனத்திலிருக்கும் பழங்குடிகளின் வாழ்வில் ஏற்படும் மாற்றம், அவர்களின் அலைக்கழிப்பு, துயர்களை வெளிப்படுத்திப் பெரும் குற்ற உணர்வுக்கு ஆளாக்கி முடிவுற்றது நாடகம்.

ஏப்ரல் 19 மாலை ஓசூர் டி.வி.எஸ் அகாடமியில் நடந்த இந்நாடகத்தை, மாணவ மாணவிகள் 90 பேர் சேர்ந்து நிகழ்த்தினர். ஆங்கிலவழிக் கல்வி பயின்றபோதிலும் தமிழ் வசனங்களை சரளமாக உச்சரித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x