சைவமாக மாற்றும் விநோதப் பூச்சி

சைவமாக மாற்றும் விநோதப் பூச்சி
Updated on
1 min read

“நான் இனிமேல் மாமிசமே சாப்பிடப் போவதில்லை" - இப்படிச் சிலர் வீராவேச உறுதிமொழி எடுப்பதுண்டு. ஒரு வாரம், இரண்டு வாரம் அசைவம் பக்கமே தலை வைக்காமல், வாயைக் கட்டிக்கொண்டு இருப்பார்கள். ஒரு கட்டத்துக்கு மேல் அசைவ உணவில் இறங்கி விளையாட ஆரம்பித்துவிடுவார்கள். ஆனால், சுத்த அசைவமாக இருப்பவர்களைக்கூட, நிரந்தர சைவமாக மாற்றும் சக்தி ஒரு பூச்சிக்கு இருக்கிறதாம்.

பூச்சி கார்போஹைட்ரேட்

லோன் ஸ்டார் டிக் (Lone Star Tick) எனும் உண்ணிப் பூச்சியின் கடி, அசைவ ஒவ்வாமையை ஏற்படுத்துவதே இதற்குக் காரணம். சிறிய நட்சத்திரம் போன்ற தோற்றத்தைக் கொண்ட இந்த லோன் ஸ்டார் உண்ணி, பல நோய்களைப் பரப்பக்கூடியது. அதில் குறிப்பிடத்தக்க ஒன்று, மாமிசம் சாப்பிட்டால் உடல் உபாதைகளை விளைவிப்பது. லோன் ஸ்டார் பூச்சியின் உடலில் ஆல்ஃபா கால் (alpha-gal) என்னும் கார்போஹைட்ரேட் இருக்கிறது. லோன் ஸ்டார் பூச்சியின் உடலில் மட்டுமல்ல ஆடு, மாடு போன்ற எல்லாச் சிறிய வகை பாலூட்டி விலங்குகளின் உடலிலும் ஆல்ஃபா கால் காணப்படுகிறது. ஆனால், மனித உடலில் ஆல்ஃபா கால் கிடையாது.

எதிர்ப்பு சக்தி பிரச்சினை

இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், பொதுவாக மனிதக் குடலால் ஆல்ஃபா கால் கார்போஹைட்ரேட் கொண்ட மாமிசத்தை எந்தச் சிக்கலும் இல்லாமல் செரித்துவிட முடியும். ஆனால், லோன் ஸ்டார் உண்ணி ஒரு மனிதரைக் கடிக்கும்போது மனித உடலின் ரத்த நாளங்களுக்குள் ஆல்ஃபா கால் நேரடியாக நுழைந்துவிடுகிறது. அப்போது மனித உடல் அதை வேறு விதமாக அணுகத் தொடங்குகிறது.

ரத்த அணுக்களுக்கு இடையில் ஆல்ஃபா கால் காணப்படும்போது, மனித உடல் அதை அன்னிய ஊடுருவலாக நினைக்கிறது. உடனடியாக நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டிவிட்டு எதிர்ப்புச் அணுக்களைத் தயாரித்து உடலைக் காப்பாற்றிவிடுகிறது.

இனிமேல்தான் பிரச்சினை

ஆனால், அதற்குப் பிறகுதான் சிக்கல் தொடங்குகிறது. முதல் முறை உருவான எதிர்ப்பு அணுக்கள் உடலில் அப்படியே தங்கிவிடுகின்றன. இனி எப்போது மாமிசம் சப்பிட்டாலும் நெருப்பு கொழுந்துவிட்டு எரிவதுபோல வயிறு எரியும், மூச்சுத் திணறல் ஏற்படும், உணவு செரிக்காது, வாந்தி, பேதி, ரத்தஅழுத்தம் குறைதல் உள்ளிட்ட விளைவுகள் ஏற்படலாம்.

சில நேரம் சாப்பிட்டு எட்டு மணி நேரம் கழித்துக்கூட, இது போன்ற விளைவுகள் ஏற்படலாம். அதிகபட்சமாக, மரணம்கூட நிகழலாம். இதற்கு மருந்தோ, சிகிச்சையோ இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த ஒவ்வாமை உள்ளவர்கள் சிவப்பு இறைச்சியை அறவே சாப்பிடக் கூடாது என்பதுதான் மருத்துவர்கள் அளிக்கும் அறிவுரை.

ஒரே ஆறுதல் மீன், கோழியில் ஆல்ஃபா கால் கிடையாது. அதனால் லோன் ஸ்டாரால் கடிபட்டவர்கள்கூட பின்விளைவுகள் குறித்த பயமின்றி மீன், கோழியின் மாமிசத்தைச் சாப்பிடலாம். மற்றொரு முக்கியத் தகவல், ஆஸ்திரேலியா, அமெரிக்காவின் வடக்கு கரோலினா, வர்ஜீனியா மாகாணங்களில் மட்டுமே லோன் ஸ்டார் உண்ணி இருக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in