

சினிமாவின் காட்சிமொழியை நேசித்து அதுவாகவே ஆகத்துடிப்பவர்களை சினிமா எங்கிருந்தாலும் தேடி ஈர்த்துக்கொள்ளும். அப்படித்தான் ஓவியர் ரஹமத் என்கிற ரவூப் நிஸ்தாரையும் அழைத்து வந்திருக்கிறது. எங்கோ மதுரையில் ஓவியங்கள்,விளம்பரங்கள்,மேடை அமைப்புகள் என்றிருந்தவரை சென்னை வரவழைத்திருக்கிறது. இன்று தமிழ்சினிமாவின் ஒளிப்பதிவுத் திட்டமிடலுக்கு இன்றியமையாத ஒன்றாகிவிட்ட ‘ஸ்டோரி போர்டுகள்’ வரைவதில் இவரை ஈடுபடுத்தி கலை இயக்குநராகவும் கௌரவப்படுத்தியிருக்கிறது!
யாரிந்த ரஹமத்.. ? "எனக்குச் சொந்த ஊரு மதுரை. என் அண்ணன் இக்பால் நன்றாக படம் வரைவார். அதைப் பார்த்து, நாமும் ஏன் வரையக் கூடாது என்று நினைத்தேன். ஆர்வம் அதிகரித்து ஓவியங்களில் இறங்கி விட்டேன்.உலகின் எல்லா வகை ஓவியங்களின் மீதும் ஈடுபாடு ஏற்பட்டது. விளம்பர போர்டுகள், உருவப் படங்கள், மேடை அலங்காரப் படங்கள் என கலையே தொழிலானது. வருமானமும் வந்தது. வருமானம் இரண்டாம் சந்தோஷம்தான். முதல் சந்தோஷம் நினைத்ததை வரைய முடிவதுதான். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திவரும் கலை இரவுகள் இன்று தமிழ்மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம். அவற்றுக்கான மேடை ஓவியங்கள்,மேடை அமைப்பு என்னுடையதுதான்' என்று அறிமுகப்படுத்திக் கொள்ளும் ரஹமத் படித்தது பியூசி.
படித்த படிப்பு கைகொடுத்ததோ இல்லையோ " நீ உலக ஓவியன். உன்னை ஒருநாள் இந்த உலகம் கொண்டாடும் " என்று பாலுமகேந்திராவிடமிருந்து பாராட்டு கிடைக்கும் அளவுக்கு தூரிகை அவரை வாரி அணைத்துக் கொண்டிருக்கிறது.
"நான் இதை தொழில் முறையாக மதுரையில் செய்து கொண்டிருந்தேன். எனவே பணக் கஷ்டமில்லை 'நீ சினிமாவுக்கு போ' என்று பலரும் கூறியபோது வந்து கொண்டிருக்கிற வருமானத்துக்கு பாதிப்பு வந்துவிடக்கூடாதே என்று நினைத்தேன். மதுரையில் வாழும் வாழ்வே மனதிருப்தியாக இருப்பதாக நினைத்தேன். ஆனால் என் நண்பர்கள் என்னை விடவில்லை. சென்னை உன்னை இன்னும் வேறொரு உலகுக்கு அழைத்துச்செல்லும்!" என்று சொல்லி சென்னைக்கு அனுப்பி வைத்தார்கள். அவர்கள் சொன்னது உண்மைதான். சென்னையும் இங்கே வாழும் ஆளுமைகளும் என்னை தன் கண்போல காத்துக் கொண்டார்கள். சென்னை நிராகரிக்கும் இடமல்ல.. அங்கீகரிக்கும் பூமி!" என்று நெகிழ்கிறார்.
இவரது ஓவியக் கண்காட்சி மதுரையில் நடந்தபோது இயக்குநர் பாரதிராஜா வந்திருக்கிறார். பிறகு சென்னைக்கு அழைத்திருக்கிறார். அவர் அளித்த ஒரு பேட்டியில் தற்போதைய மதுரையில் உங்களுக்கு பிடித்தது என்ன என்ற கேள்விக்கு 'இன்று மதுரையில் ரஹமத்தின் ஓவியங்கள்தான் விசேஷம்’ என்று கூறியிருக்கிறார். இதில் நெகிழ்ந்த ரஹ்மத் பாரதிராஜாவை கௌரவிக்கும் வகையில் அவரது அம்மாவின் ஓவியத்தை வரைந்து கொடுக்க, ஓவியத்தைப் பார்த்து அழுதே விட்டாராம் பாரதிராஜா. பிறகு ரஹ்மத் சென்னையில் தனது முதல் கண்காட்சியை நடத்தியபோது, கொஞ்சமும் எதிர்பாராத வகையில் கண்காட்சியை திறந்துவைத்த பாலுமகேந்திரா, இவர் வரைந்த 'வயோதிகம்' என்கிற ஓவியத்தை ரசித்து நெகிழ்ந்து விலை கொடுத்து வாங்கியும் பெருமை செய்திருக்கிறார். பாலுமகேந்திரா போய்வந்த ஓவியக் கண்காட்சி என்று தீயாக பரவியதும் பாலா, அமீர், பார்த்திபன், வசந்தபாலன், ரேவதி என்று படையெடுத்திருக்கிறார்கள்.
ரஹமத்தின் புதிய ஓவியக்கண்காட்சி தற்போது சென்னையில் நடந்து வருகிறது! வரும் அக்டோபர் 31வரை வின்யாசா பிரிமியர் ஆர்ட் கேலரி,சி ஐ டி காலனி, மயிலாப்பூர் என்ற முகவரிக்குச் சென்றால் ரஹமத்தின் கோடுகளில் உலகைக் காணலாம்.