அரசியலில் சில வேளைகளில் தற்காப்புக் கவசமாக இருக்கும் ‘மவுனம்’ கலைக்கப்படும்போது கூர்மையான வாளாக மாறிவிடுகிறது. சுயசரிதையாக வெளிப்படும்போது அதன் வீச்சு நினைத்துப் பார்க்காத விளைவுகளைத் தருகிறது. அப்படி சமீபத்திய வெளியான சோனியா காந்தியின் சுயசரிதை நூலான ‘பிலாங்கிங்: எ ஜர்னி ஆஃப் லவ்’ (Belonging: A Journey of Love), பஞ்சாப் அரசியலில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக உறங்கிக் கிடந்த ‘ஆபரேஷன் ப்ளூ ஸ்டார்’ மற்றும் சீக்கியர்கள் படுகொலையில் படிந்த ரணங்களை கிளறிவிட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
சோனியா அளித்துள்ள விளக்கங்கள், காங்கிரஸ் கட்சியின் கடந்த காலத் தவறுகளுக்கு மருந்திடுவதற்கு பதிலாக, ஆறாத வடுக்களில் மீண்டும் உப்பைத் தடவியுள்ளது என விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. சோனியா காந்தி தனது சுயசரிதை நூலில் காங்கிரஸ் குடும்பத்தின் நிலைப்பாட்டை நியாயப்படுத்த முயற்சி செய்திருந்தாலும், அதில் அவர் முன்வைத்துள்ள தற்காப்பு வாதங்கள், சீக்கிய வாக்காளர்களைச் சமாதானப்படுத்துவதற்குப் பதிலாக, அவர்களைக் கோபத்தின் உச்சத்துக்கே கொண்டு சென்றுள்ளதாக விவாதங்கள் எழுப்பப்பட்டு வருகிறது.
பஞ்சாபில் 2027 தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்கத் தயாராகும் காங்கிரஸ் கட்சிக்கு, அதன் மூத்த தலைவரின் இந்த சுயசரிதைக் குறிப்புகள் ஒரு மாபெரும் அரசியல் முட்டுக்கட்டையாகவும், ஆம் ஆத்மி, பாஜக மற்றும் அகாலி தளம் கட்சிகளுக்கு சாதகமான திருப்புமுனையாகவும் மாறுமா என்ற கேள்வியும் எழுகிறது. இது குறித்து விரிவாக அலசுகிறது இந்த எக்ஸ்ப்ளைனர் வீடியோ.