காரைக்குடியை சீமான் ‘டிக்’ செய்துள்ளது குறித்து சொல்பவர்கள், “கடந்த முறை காரைக்குடியில் போட்டியிட்ட நாதக வேட்பாளர் துரைமாணிக்கம் 23,872 வாக்குகள் (11.24 சதவீதம்) பெற்றார். அப்போது காரைக்குடியில் அதிமுக-வும் திமுக-வும் நேரடியாகப் போட்டியிடவில்லை. அதற்குப் பதிலாக, பாஜக-வும் காங்கிரஸும் மோதின. காங்கிரஸ் வெற்றிபெற்றது.
அதேபோல் இம்முறையும் இந்த இரண்டு கட்சிகள் தான் இங்கே மோதக் கூடிய சூழல் இருக்கிறது. தவெக தரப்பில் டாக்டர் பிரபு தான் வேட்பாளர் என தீர்மானிக்கப்பட்டு கடந்த ஒரு வருடமாகவே அதற்கான பணிகளை அவர் மேற்கொண்டு வருகிறார். காலங்காலமாக இந்தத் தொகுதியை காங்கிரஸுக்கே விட்டுக் கொடுப்பதால் திமுக தரப்பில் உள்ள தமிழ் உணர்வாளர்கள் சொல்லமுடியாத ஆதங்கத்தில் இருக்கிறார்கள். இதேபோல், தங்களுக்கு வாய்ப்புள்ள இந்தத் தொகுதியை பாஜக-வுக்கு விட்டுக் கொடுப்பதில் அதிமுக-வுக்கும் அவ்வளவு இஷ்டமில்லை.
இப்படி இரண்டு முக்கியக் கட்சிகளிலும் இருக்கும் அதிருப்தியாளர்கள் நாதக-வை ஆதரிக்க வாய்ப்பிருக்கிறது என சீமானுக்கு யாராவது எடுத்துச் சொல்லி இருக்கலாம். அத்தோடு தவெக வேட்பாளர் கணிசமான வாக்குகளை பிரிப்பார் என்பதால் நாதக-வுக்கு குருட்டு யோகம் அடிக்கவும் வாய்ப்பிருக்கிறது. இதையெல்லாம் மனதில் வைத்துத்தான் காரைக்குடிக்கான வேட்பாளரை அறிவிக்காமல் சஸ்பென்ஸாக வைத்திருக்கிறார் சீமான்” என்கிறார்கள்.