தவெகவின் ‘தனித்து போட்டி’ என்ற முடிவு, தமிழக அரசியலில் நான்கு முனை போட்டியை உருவாக்கியுள்ளது. இதற்கிடையில் கடந்த சில நாட்களாக பாஜக மேலிடம், குறிப்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, விஜய்யை தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் கொண்டு வரத் தீவிர முயற்சி எடுத்ததாகத் தகவல்கள் வெளியாகின. தமிழகத்தில் திமுக-வை வீழ்த்த விஜய்யின் வாக்கு வங்கி அவசியம் என பாஜக கருதியது. இதற்காக ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மூலமாகவும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கூட்டணிக்குத் தூது வந்தவர்களிடம் விஜய் தரப்பில் வைக்கப்பட்ட நிபந்தனைகள் அரசியல் வட்டாரத்தை அதிர வைத்தன. “90 தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும்; இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவி வழங்கப்பட வேண்டும்” என்ற நிபந்தனைகளை விஜய் தரப்பு முன்வைத்ததாகக் கூறப்படுகிறது. இதனை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏற்க மறுத்ததால், கூட்டணிப் பேச்சுவார்த்தை முட்டுக்கட்டையில் முடிந்ததாகத் தெரிகிறது.
இதை மையமாக வைத்து கட்சிக்குள் பொதுச் செயலாளர்களான புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனாவுக்கு இடையே அதிகாரப் போட்டி நிலவி வந்ததாகச் செய்திகள் கசிந்தன. சமீபத்தில் கட்சி நிர்வாகிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், “என்ன நடந்தாலும் வரும் தேர்தலில் நாம் தனித்து தான் போட்டியிடுகிறோம்” எனத் தெள்ளத்தெளிவாகக் கூறிய விஜய், மோதலில் இருந்த நிர்வாகிகளைச் சமாதானப்படுத்தி தேர்தல் பணிகளை வேகப்படுத்த உத்தரவிட்டுள்ளார். இருப்பினும் தொடர்ச்சியாக பாஜக தரப்பில் கூட்டணிக்கான முயற்சி நடந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் பரபரப்பான சூழல் ஏற்பட்டிருக்கிறது.