அரசியல்

டிடிவி தினகரன் ட்விஸ்ட்... என்டிஏ-வில் அமமுக ஐக்கியம்!

செய்திப்பிரிவு

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், டிடிவி தினகரனின் அமமுக கட்சி மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லாமலேயே, டிடிவி தினகரன் - மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இடையே சந்திப்பு நடைபெற்றது கவனம் பெற்றுள்ளது. அதிமுக - தலைமையிலான கூட்டணியில் பாஜக, அன்புமணியின் பாமக அணி, தமாகா, புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், இந்தக் கூட்டணியில் இப்போது டிடிவி தினகரன் இணைந்துள்ளார்.

‘எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்கவே முடியாது. பழனிசாமி இருக்கும் கட்சியில் கூட்டணியில் இருப்பதற்குப் பதில் தூக்கில் தொங்கிவிடலாம்’ என தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறிய டிடிவி தினகரன், கடும் விமர்சனங்களை முன்வைத்ததை மறந்திருக்க முடியாது. தற்போது, அதிமுக தலைமையில் பாஜக இடம்பெற்றுள்ள கூட்டணியில் அமமுக இணைந்துள்ளது. சென்னையில் அமமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்துக்குப் பின்னர் டிடிவி தினகரன் இதனை அறிவித்தார்.

          

தொடர்ந்து சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலுடன் டிடிவி தினகரன் சந்திப்பு நடத்தினார். அப்போது மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக மூத்த தலைவர் வானதி சீனிவாசன் ஆகியோர் உடன் இருந்தனர். முன்னதாக, இது குறித்து டிடிவி தினகரன் கூறும்போது, “பழைய விஷயங்களை நினைத்துக் கொண்டு கட்சி மற்றும் தமிழக நலனை பின்னுக்கு தள்ளிவிடக் கூடாது. எங்களுக்குள் நடப்பது பங்காளி சண்டைதான். விட்டுக் கொடுப்பவர் கெட்டுப் போவதில்லை. ஜெயலலிதா ஆட்சி மீண்டும் அமைய ஓரணியில் சேர்கிறோம்.

‘இன்னா செய்தாரை ஒறுத்தல்’ என்ற வள்ளுவரின் வாக்குப்படி கூட்டணியை முடிவு செய்துள்ளோம். மக்கள் விரும்பும் நல்லாட்சியை தமிழ்நாட்டில் உருவாக்க தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைகிறோம்” என்றார். ஜனவரி 23-ல் பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். அதற்குள் தமிழக தேர்தல் கூட்டணியை இறுதி செய்து கூட்டணித் தலைவர்களையும் மேடை ஏற்ற வேண்டும் என்று தமிழக பாஜக தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில்தான் அமமுக இணைப்பு நடந்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில், “தீயசக்தி திமுக-வின் கொடுங்கோல் ஆட்சியை வேரடி மண்ணோடு வீழ்த்திடவும், வாரிசு அரசியலுக்கு முற்றுப் புள்ளியை வைத்திடவும், ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் அமைத்திடவும் வேண்டும்.

இந்நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இன்றைய தினம் இணைந்துள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் மரியாதைக்குரிய டிடிவி.தினகரனை அன்போடு வரவேற்று, அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் நலன் ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு, நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து, திமுக குடும்ப ஆட்சியின் பிடியில் இருந்து மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, விஜய்யின் தவெக தலைமையிலான கூட்டணியில் அமமுகவை இடம்பெறச் செய்ய தினகரன் சில முன்னெடுப்புகளை மேற்கொண்டதாகவும், ஆனால் பனையூரில் இருந்து பக்காவான சிக்னல் ஏதும் அவருக்கு வரவில்லை என்றும் தகவல்கள் வெளியானது கவனிக்கத்தக்கது.

SCROLL FOR NEXT