காங்கிரஸ் - செல்​வப்​பெருந்​தகை | அதிமுக - கே.பழனி | நாதக - சிந்து | தவெக - தென்னரசு

 
அரசியல்

ஸ்ரீபெரும்புதூர் (தனி) தொகுதியில் சிறப்பான வெற்றி யாருக்கு?

இரா.ஜெயப்பிரகாஷ்

தமிழக சட்​டப்பேரவைத் தொகு​தி​களின் வரிசை​யில் 29-வது இடத்தைப் பிடித்​துள்​ளது ஸ்ரீபெரும்​புதூர் (தனி) தொகுதி. ஆன்​மிகச் சிறப்​பும், உலகத்தரம் வாய்ந்த தொழில் வளர்ச்​சி​யும் ஒருங்கே அமைந்த ஒரு தனித்துவமான தொகு​தி​யாக இந்​தத் தொகுதி திகழ்கிறது.

வைணவத் தத்​து​வ​ஞானி ஸ்ரீ ராமானுஜர் அவதரித்த புண்ணிய பூமி இது. இங்​குள்ள ஆதி​கேசவப் பெரு​மாள் கோயில் உலகப் புகழ் பெற்​றது. அதேபோல், முன்​னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படு​கொலை செய்யப்பட்ட நினைவிடம் இங்​கு​தான் அமைந்​துள்​ளது. அரசி​யல் ரீதியாக, சென்​னைக்கு மிக அரு​காமை​யில் இருப்​ப​தால், மாநிலத்தின் பொருளா​தார வளர்ச்​சி​யைத் தீர்​மானிக்​கும் ‘தெற்​காசி​யா​வின் டெட்​ராய்ட்’ என்று அழைக்​கப்​படும் ஸ்ரீபெரும்​புதூர் மற்​றும் ஓரகடம் சிப்​காட் வளாகங்​கள் இத்​தொகு​தி​யின் அங்கமாக உள்​ளன.

          

1952 முதல் தேர்​தல்​களைச் சந்​தித்து வரும் இத்தொகுதியில், காங்கிரஸ் 7 முறை வெற்றி பெற்​றுள்​ளது. திமுக 4 முறை​யும், அதிமுக 2 முறை​யும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த 2021 சட்டப்பேரவை தேர்​தலில் திமுக கூட்​ட​ணி​யில் போட்​டி​யிட்ட காங்கிரஸ் வேட்​பாளர் செல்வப்பெருந்​தகை, அதி​முக வேட்​பாளர் கே.பழனியை 10,879 வாக்​கு​கள் வித்தி​யாசத்​தில் தோற்​கடித்​தார்.

தொகுதியில் நிலவும் பிரச்சினைகள்:

தொழிற்​பேட்​டைகள் நிறைந்த பகுதி என்​ப​தால், இங்​குள்ள தொழிலா​ளர்​களின் வாழ்​வா​தா​ரப் பிரச்​சினை​களே முதன்மை​யானவை​யாக உள்​ளன. சென்னை - பெங்​களூரு தேசிய நெடுஞ்​சாலை​யில் ஏற்​படும் கடும் போக்​கு​வரத்து நெரிசலுக்​குப் பூந்​தமல்லி - ஸ்ரீபெரும்​புதூர் மெட்ரோ ரயில் திட்​டத்தை விரைந்து செயல்​படுத்த வேண்​டும் என்​பது நீண்ட ​காலக் கோரிக்​கை​யாக உள்​ளது.

ஸ்ரீபெரும்​புதூர் பகு​தி​யில் பாதாளச் சாக்​கடைத் திட்​டம் மற்​றும் சீரான குடிநீர் விநி​யோகம் பெரும் சவாலாக உள்ளது. உள்​ளூர் இளைஞர்​களுக்​கு சிப்​காட் நிறுவனங்களில் 80 சதவீத வேலை​வாய்ப்பு வழங்​கப்பட வேண்​டும் என்ற கோரிக்கை வலு​வாக உள்ளது. இதேபோல், தொழிற்​சாலைகளுக்​காக நிலங்​கள் கையகப்படுத்​தப்​பட்ட நிலை​யில், எஞ்​சி​யுள்ள விவசாய நிலங்களைப் பாது​காக்க வேண்​டும் என்ற கோரிக்​கைகளும் விவசா​யிகள் மத்​தி​யில் வலு​வாக உள்​ளன.

வேட்பாளர்கள் பின்புலம்:

திமுக கூட்​ட​ணி​யில் தற்​போதைய எம்எல்​ஏ-​வும், தமிழ்நாடு காங்​கிரஸ் கமிட்​டித் தலை​வரு​மான செல்வப்பெருந்​தகை மீண்​டும் போட்​டி​யிடு​கிறார். ஆளுங்கட்சியின் பலம் மற்​றும் தொகுதி முழு​வதும் உள்ள தனிப்பட்ட அறி​முகம் இவருக்கு பலமாகக் கருதப்படுகிறது.

அதேபோல், அதி​முக கூட்​ட​ணி​யில் முன்​னாள் சட்​டப்​பேரவை உறுப்​பினர் கே.பழனி களம் காண்​கிறார். இந்​தத் தொகு​தியில் அதி​முக​வுக்கு பாரம்​பரிய வாக்கு வங்கி உள்ளது. கடந்த முறை இழந்த வெற்​றியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்​பில் பழனி தீவிர பிரச்சா​ரத்​தில் ஈடு​பட்​டுள்​ளார்.

அதே​போல், நாம் தமிழர் கட்சி சார்​பில் சிந்து போட்டியிட்டு தீவிரப் பிர​ச்சா​ரத்​தில் ஈடு​பட்டு வரு​கிறார். புதி​தாக களம் கண்டுள்ள தவெக சார்​பில், அந்​தக் கட்சியின் மாவட்​டச் செயலாளர் தென்​னரசு போட்டியிடுகிறார். இவர்​கள் இளைஞர்களின் ஆதரவு மற்றும் விஜய்​யின் செல்​வாக்கு மாற்றத்தை ஏற்​படுத்​தும் என நம்​பு​கின்​றனர்.

இந்​தத் தொகு​தி​யில் 4 பேர் களத்​தில் இருந்​தா​லும் காங்​கிரஸ் மற்​றும் அதி​முக இடையே​தான் நேரடிப் போட்டி நில​வு​கிறது.

ஆனாலும், இந்​தத் தேர்​தலில் தமிழக வெற்​றிக் கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி பிரிக்​கும் வாக்​கு​கள் வெற்றியைத் தீர்மானிக்கும் காரணி​யாக இருக்​கும் என்று அரசி​யல் பார்வையாளர்​கள் கருதுகின்​றனர்.

குறிப்​பாக, வன்​னியர் மற்​றும் தலித் மக்​கள் வாக்​கு​கள் இந்தத் தொகு​தி​யில் அதி​கம் உள்​ளன. இவர்​கள் வாக்​கும், தொழிலாளர்​கள் வாக்​கும் யாருக்கு அதி​கம் விழுகிறதோ அவர் வெற்றி பெறு​வதற்​கான வாய்ப்​பு​கள் அதிகம் இருக்கும்​.

SCROLL FOR NEXT